தேர்வு நெருங்க நெருங்க ஒவ்வொரு மாணவர் மனதிலும், தான் படித்தது நினைவில் இல்லையோ என்ற பயம் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும். தாய் தந்தையரின் "கவுன்சிலிங்குல சீட் வாங்கினாதான் செலவு பண்ண நம்ம பொருளாதாரம் இடம் கொடுக்கும்" என்ற நெருக்குதலும், சுற்றத்தாரின் "எத்தனை மார்க் வாங்குவீங்க"? போன்ற கேள்விகளும் மேலும் பதற்றத்தையும், கவலையையும் உண்டாக்கும்.
இது மாதிரியான குழப்பங்களை எல்லாம் தவிர்த்து வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு படிப்பில் முழு கவனமும் செலுத்தினால் தான் சிறந்த மதிப்பெண்களை பெற முடியும்.
நாட்கள் குறைவாக இருக்கிறதே என கவலைப்படாமல், இருக்கும் நாட்களை சரிவர பயன்படுத்தினாலே போதும் என்ற மன நிலையை முதலில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பரீட்சை முடியும் வரை செல்போன், டி.வி. மற்றும் சமூக வலைத்தளங்களை அறவே ஒதுக்கி வைக்கவேண்டும். கடினமாக இருந்தாலும், சில நாட்களுக்கு இவற்றை தவிர்த்தால் தான் எதிர்காலம் நலமாக அமையும்.
படிக்க தேர்ந்தெடுக்கும் இடம் அமைதியான இடமாக இருக்க வேண்டும். வீட்டில் அண்ணன், தங்கை டி.வி. பார்க்க வேண்டும், பாட்டு கேட்க வேண்டும் என்று சொன்னாலும், உங்கள் நிலையை எடுத்துச் சொல்லி வீட்டில் படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
மாலையில் படித்ததை அதிகாலையில் எழுந்து மறுபடியும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். படிக்கும்பொழுது கடினமான பாடம் கொஞ்சம், எளிதானது கொஞ்சம் என கலந்து படிக்க வேண்டும். ஒரே பாடத்தையே தொடர்ந்து படிக்காமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பாடங்களை மாற்றி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் படிக்கும் பொழுது ஈடுபாடு அதிகரிக்கும்.
சற்று அசதியாக உணரும் நேரமெல்லாம், சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மால் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியும் என்று தினம் தினம் எண்ணி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நன்றாக உழைத்தால்தான் வயலும் பயன்தரும். ஆனாலும் அதற்கு வான் மழை பொய்க்காமல் பெய்ய வேண்டும். அது போல தங்கள் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் எனில் பெற்றோரும் உடனிருந்து சத்தான உணவையும், தளரும்போதெல்லாம் ஊக்கத்தையும் அளித்தால் வெற்றி எளிதாக கைவசமாகும்.
கல்வி மலர்