புதன், 30 அக்டோபர், 2013

வேலைக்கு அமர்த்துபவர்களின் எதிர்பார்ப்புகள்



வேலை கிடைப்பது கடினம் என்று இளைஞர்கள் எப்போதும் கூறி வந்தாலும், வேலைக்கான விளம்பரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம்தான் உள்ளன. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் மூலமும், நாளிதழ்கள், இணையதளங்கள் வழியாகவும் வேலைக்கான அறிவிப்புகளை கண்டு விண்ணப்பிக்கும் வேலையும் தொடர்ந்து தடையில்லாமல் நடந்து வந்துகொண்டு இருக்கிறது.
வேலை இருக்கிறது என்றவுடன் விண்ணப்பிக்க தயாராகும் பலரும், நாம் அந்த வேலைக்கு தகுதியானவராக இருக்கிறோமா என்று சிந்திப்பதில்லை. மேலும், பல வருடங்கள் வேலை தேடி விரக்தியடைந்த சிலர் எந்த வேலையையும் பார்க்கலாம் என்று, படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலைக்கும் செல்லத் தயாராகின்றனர்.
மக்கள் தொகை பெருகியிருக்கிறது, ஒரே துறையில் படித்தவர்களின் எண்ணிக்கை தேவையை விட அதிகமாகியிருக்கிறது என்பதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ, அதே போன்று இளைஞர்கள் தாங்கள் படித்த துறையில் மேம்பட்ட அறிவை வளர்த்துக்கொள்ளாததும், சரியான நேரத்தில் உகந்த வேலைக்கு விண்ணப்பிக்காததும், அதற்கேற்ற வகையில் தயாராகாததும் வேலை கிடைக்காதற்கு காரணமாகும்.
ஒவ்வொரு துறைக்கும் ஒரு சில சிறப்பு தகுதிகள், தேவைகள் இருந்தாலும் பெரும்பாலான நேர்முகத் தேர்வாளர்களிடம் இருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகளையும், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எப்படி தயாராவது என்பதனையும் காண்போம்.
ஈடுபாடு மற்றும் உடனடி தேவை
ஒரு மாணவன் படிக்க தயாராகும்பொழுது இருக்கும் மனநிலை, படித்து முடித்த பின்னர் இருக்கும் மனநிலை ஆகியவற்றை வேலை தேடும்போது இருக்கும் மனநிலையோடு ஒப்பிடும்பொழுது தான் எடுத்த படிப்பு, எதிர்காலம் குறித்த எண்ணங்களில் மாற்றங்கள் இருக்கும்.
தனது குடும்ப சூழ்நிலை, தற்போதைய தேவைகள் ஆகியவற்றையும் தனது தொடர் ஈடுபாடு எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்து குறிப்பிட்ட வேலை தனக்கு சரியாக வருமா? என முடிவு செய்து விண்ணப்பியுங்கள். குறிப்பிட்ட வேலை குறித்து உங்களுக்கு தெளிவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே தொடர்புகொண்டு சந்தேகத்தினை கேளுங்கள். தயக்கம் வேண்டாம்.
தகுதிக்கேற்ற வேலைக்கு மட்டுமே விண்ணப்பியுங்கள்
நீங்கள் ஐ.டி.ஐ./ டிப்ளமோ / இளநிலை / பொறியியல் என எந்த படிப்பு படித்திருந்தாலும் நீங்கள் படித்த படிப்பிற்கான வேலைகளுக்கே விண்ணப்பியுங்கள். ஏனெனில் நேர்முகத் தேர்வாளர்கள் தாங்கள் எந்த அளவுகோல் வைத்திருக்கிறார்களோ அதற்கேற்பத்தான் திட்டமிடுவார்கள்.
மேலும், குறிப்பிட்ட வேலைக்கு ஏற்ற தகுதியை விட அதிகமான தகுதிகள் பணியாளருக்கு இருக்கும்பொழுது, அந்த பணியாளரின் மனநிலையானது "தனக்கேற்ற வேலை இதுவல்ல, இது தனக்கு சாதாரணம்" என்ற நிலையில் இருக்கும். அதனோடு வேறு பணி கிடைத்தால் உடனடியாக வேலையை விட்டு நின்றுவிடுவர். இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு நேர்முகத்தேர்வாளர்கள் பணிக்கு எடுக்கமாட்டார்கள்.
நேர்முகத்தேர்வாளர்களை அறிந்துகொள்ளுங்கள்
தங்களை நேர்முகம் செய்வது யார் என்பதை அறிந்துகொள்வது எளிதாக பதில் சொல்வதற்கு உதவியாக இருக்கும். எப்படியென்றால் ஒரு மனிதவள நிர்வாகி எதிர்பார்க்கும் பதிலுக்கும், வணிக நிர்வாகி உங்களிடம் எதிர்பார்க்கும் பதிலுக்கும் வித்தியாசங்கள் அதிகம். மனிதவள நிர்வாகி சிறந்த பதிலை உங்களிடம் எதிர்பார்ப்பார், ஆனால் வணிக மேலாளர் உங்களால் எவ்வளவு வருமானத்தை பெற முடியும் என்பதை கணக்கிட்டே உங்களுக்கான தேர்வை நடத்துவார்.
நீங்கள் திறமையான நபராக இருந்தாலும், சரியான நேரத்தில் சொல்லப்படாத பதில் வாய்ப்புகளை இழக்க மூல காரணமாகக்கூட அமையலாம்.
நீங்கள் யார் என்பதை தெரிவியுங்கள்
உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமைகள், நீங்கள் சாதித்த சாதனைகள், உங்களால் செய்யக்கூடிய சிக்கலான பணிகள் போன்றவற்றை வெளிப்படுத்த தயங்காதீர்கள். ஏனெனில் அந்த சாதனைகள், திறமைகள் தான் உங்களை தனியே அடையாளப்படுத்தும்.
சாதிக்கக்கூடிய இளம் திறமைசாலிகளை நிறுவனங்கள் என்றுமே ஒதுக்குவதில்லை.

விருப்பங்களை தெரிவியுங்கள

நேர்முகத்தேர்வுக்கு செல்லும் முன், அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள். நிறுவனத்தின் இலட்சியம், அடுத்தடுத்து செயல்பட வைத்திருக்கும் செயல் திட்டங்கள் குறித்து நன்கு ஆராய்ந்து உங்கள் எண்ணங்கள், நிறுவனம் எப்படி எல்லாம் வளர வேண்டும் என நீங்கள் நினைக்கீறீர்களோ அதனை தெளிவாக தெரிவியுங்கள்.
நீங்கள் நிறுவனத்தின் மேல் வைத்திருக்கும் அக்கறை உங்கள் மேல் மரியாதையை ஏற்படுத்தும். நீங்கள் நிச்சயம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு காரணமாக அமையக்கூடும்.
நம்புங்கள்
எந்த நேர்முகத் தேர்வுக்கு சென்றாலும் தன்னம்பிக்கையோடு செல்லுங்கள். ஒரு வேளை நீங்கள் நேர்முகத்தேர்வில் திருப்திகரமாக செயல்படவில்லையென்றாலும், "இந்த நேர்முகத்தேர்வின் அனுபவத்தைக் கொண்டு அடுத்த நேர்முகத்தேர்வில் வெற்றி காண்பேன்" என நம்பிக்கை கொள்ளுங்கள்.
திருப்திகரமாக நேர்முகத்தேர்வு பங்குகொண்ட நிறுவனத்தில் இருந்து பதில் வரவில்லையென்றாலும் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் தேர்ந்தெடுப்பவர்களின் மனநிலைகள் கூட வாய்ப்புகள் பெற முடியாததற்கு காரணமாக இருக்கலாம். அதற்காக நம்மிடம் திறமை குறைவு என்று தாழ்வு மனப்பான்மையில் உழள வேண்டாம்.
நம்பிக்கையோடு அடுத்தடுத்த சரியான முயற்சிகளில் இறங்குங்கள். வேலை உங்கள் வசமாகும்.
கல்வி மலர் 

திங்கள், 28 அக்டோபர், 2013

உற்சாகமாக செயல்படலாம் வாருங்கள் இளைஞர்களே...



பள்ளி மாணவர்களாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களாக இருந்தாலும், வேலைக்குப் போகும் இளைஞர்களாக இருந்தாலும் சோம்பல், நேர மேலாண்மை, கட்டுப்பாடு போன்றவற்றில் தளர்ச்சி அதிகமாகவே காணப்படுகிறது. இந்த மூன்றும் சேர்ந்து இறுதியில் ஒழுக்கச் சீர்கேடுக்கும் அழைத்துச் செல்கிறது.
தனி மனித ஒழுக்கம் சார்ந்த விஷயமாக இது பார்க்கப்பட்டாலும் இதனால் சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. எனவே தனிமனித நடவடிக்கைகளை சுறுசுறுப்புள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகும் மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
மேலும் இளைஞர்கள் சோம்பலினாலும், கட்டுப்பாடின்மையாலும்  தாங்கள் இழந்தவற்றை அறியாதவர்களாக, எதையுமே சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். இது போன்ற நிலையை மாற்ற வேண்டும்.
நேர மேலாண்மை
பள்ளிக்கூடமும், கல்லூரியும், அலுவலகங்களும் செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவானது கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்திற்குள்ளாக செல்லவில்லையென்றால் தண்டனைகளும், அபராதங்களும் விதிக்கப்படுகின்றன. அந்த பாதிப்பினை கருதியே சரியான நேரத்திற்கு சென்று விடுகிறோம். 
அதே போன்று தினமும் தூங்கும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் திட்டமிட்டு அதன்படியே உறங்கி எழுந்தால் அதுதான் வெற்றிக்கான ஆரம்பம்.
உணவு
சத்தான உணவை தேடித்தேடி உண்ண வேண்டும். ருசியான உணவிற்கு நாவினை அடிமையாக்காமல் சத்தான உணவிற்கு நாவையும், மனதையும் பழக்கப்படுத்த வேண்டும்.
திண்பண்டங்கள்
மைதா மாவு கலந்த பப்ஸ், சமோசா, பிஸ்கட், பீசா போன்றவற்றோடு சிப்சையும் தவிர்க்க ஆரம்பியுங்கள். அதற்கு பதில் அந்த நேரத்தில் பட்டாணி, கடலை போன்ற உணவுகளை மாற்று உணவாக உண்ண ஆரம்பியுங்கள்.
தீய பழக்கங்கள்
புகைப் பிடித்தல்
கல்லூரி மாணவரிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிக அளவில் உள்ளது. புகைப் பிடிக்க வேண்டும் என எண்ணும் நேரங்களில் எல்லாம் அதனால் விளையும் தீமைகளையும், செலவையும் நினைவில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். அந்த நேரத்தில் பபிள்கம் அல்லது இனிப்பு மிட்டாய்களை சாப்பிடுங்கள். உங்கள் மனநிலை புகையை மறக்க ஆரம்பிக்கும்.
குடிப்பழக்கம்
இளம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் மற்றொரு மோசமான பழக்கம் மது அருந்தும் பழக்கம். மிகவும் மோசமான, ஒரு கொடிய பழக்கமான இதனை விளையாட்டாக ஆரம்பித்து பிறகு விட முடியாமல் தவிக்கின்றனர்.
தவிப்பை நீக்கி மகிழ்ச்சி கொள்வதற்கு மது அருந்தும் சூழல் வரும் போதெல்லாம் இருக்கும் பணத்தைக் கொண்டு நன்றாக சாப்பிடலாம் என மனதை திசை திருப்புங்கள். தினமும் கொய்யாப் பழம் சாப்பிடுங்கள். பொருளாதார இழப்பையும், உடல் நல பாதிப்பையும் நினைத்துப் பாருங்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களைப் பார்த்து "எதிர்காலத்தில் அவர்களை விட நான் நல்ல உடல்நலத்துடன் வாழ்வேன்" என உங்களுக்குள்ளே தினமும் சொல்லிக் கொள்ளுங்கள்.
சேமியுங்கள்
பணம் எப்பொழுதும் கையிலிருந்தால் அது தன்னை செலவழிக்க உங்களை தூண்டிக் கொண்டே இருக்கும். அதனால் பணத்தை உங்களுக்கென வங்கிக் கணக்கை ஆரம்பித்து சேமிப்பு கணக்கில் செலுத்துங்கள். அதே போன்று ஏ.டி.எம். அட்டையை எப்பொழுதும் சட்டைப் பையிலேயே வைத்திருக்காதீர்கள்.
ஒரு நாளைக்குத் தேவையான பணத்தை மட்டும் வைத்திருங்கள். அப்பொழுதுதான் ஏதாவது செலவு செய்ய வேண்டும் என்றாலும், பணம் இல்லையே என்று அந்த செலவை தவிர்த்து விடுவீர்கள்.
நல்லதையே நினையுங்கள்
நல்ல நினைவுகளே உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். உற்சாகம் இல்லாத மனதுதான் கவலை கொள்ளும். எதையும் பதட்டத்தோடு அணுகாதீர்கள். "நமக்கென்று ஒரு இடம் இருக்கிறது, அது நம்மை விட்டு எங்கும் போகாது" என்று சோர்ந்து போகும் நேரமெல்லாம் நினையுங்கள். 
வெற்றிகரமான நேரங்களில் எல்லாம் "இதை விட மேலான வெற்றிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது, இது சாதாரணமானது தான்" என மனதை நிலையாக வைத்திருங்கள்.
சின்ன சின்ன விஷயங்களில் காட்டும் அக்கறையும், ஆர்வத்தோடு செயல்படுவதும் பெரிய செயல்பாடுகளில் வெற்றிகரமாக நம்மை இயங்க வைக்கும். வாழ்க்கை நிம்மதியும், மகிழ்ச்சியும், வெற்றியும் கலந்த ஒன்றாக மாறும்.
கல்வி மலர் 

வியாழன், 24 அக்டோபர், 2013

சுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்



கட்டை வண்டி பிடித்து நடை பழகிய, மணலில் எழுதி எழுத்துப் பழகிய, விடுகதை புதிர்கள் போட்டு விளையாடி அறிவு வளர்த்த நிகழ்வுகள் எல்லாம் நம் கண் முன்னே மெதுவாக மறைந்து கொண்டிருக்கிறது.
நகரமயமாக்கலும், தொழில்நுட்பங்களின் உதவியும், பொருளாதாரமே நோக்கம் என அமைத்துக் கொண்ட வாழ்க்கையும் வருங்கால சந்ததியினரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைக்கு தாய் அன்பையும், தந்தை அறிவையும் ஊட்டி வளர்ப்பர் என்ற நிலையும் நகர வாழ்வில் இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.
வேலைப் பழு, பயண நேரம், நெருக்கடி போன்றவற்றால் குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர். இதில் குழப்பத்திற்குரிய விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர் இத்தகைய நிலையில் சிக்கி தவிக்கின்றனர் என்பதுதான்.
இப்படியான மாறுபட்ட சூழ்நிலையில், குழந்தையானது பிறந்தது முதல் சந்திக்கும் அல்லது அறியும் தகவல்கள் அனைத்தும் நாம் நம்முடைய இள வயதில் அறிந்திராதவைகளாக இருக்கிறது. காரணம் விளையாட மண் இல்லை, நீந்துவதற்கு நீராதாரங்கள் இல்லை, நல்லொழுக்கக் கதைகள் கற்றுத் தருவதற்கு தாத்தா, பாட்டிகள் இல்லை, தென்றலை உணர்வதற்கும், வான் நிலவின் அழகை காண்பதற்கும் இட வசதிகள் இல்லை.
கற்றுத் தரும் இயற்கையை இல்லாததாக்கி வருவதால், கற்றுக் கொள்வதற்கும், பொழுதினை போக்குவதற்கும் செயற்கையை நம்ப வேண்டியதாகிவிட்டது.
தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை கண்டு உலகைத் தெரிந்துகொள்வதற்கும், சி.டி.க்களின் மூலம் மழலைப் பாடல்களை அறிந்துகொள்வதற்கும், வீடியோ கேம்களின் மூலம் விளையாட்டு ஆசைகளை நிவர்த்தி செய்து வந்துகொண்டிருக்கிறோம். தற்போது இதில் புதிதாக "டேப்ளட்" என்று சொல்லக்கூடிய மேகக் கணினிகளும் இடம் பிடித்துள்ளன.
குழந்தைகளுக்கு ஏ, பி, சி, டி, கற்றுத்தருவதற்கும், மழலைப் பாடங்களைக் கற்றுத் தருவதற்கும் தனித்தனியாக அப்ளிகேஷன்ஸ் இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாகவும், பணம் செலுத்தியும் பெறக்கூடிய வகையில் இருக்கும் இது போன்ற "அப்ளிகேஷன்"களை நவீன, நாகரீக பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு அளிக்கின்றனர்.
4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை தங்கள் நேரத்தை வீடியோ விளையாட்டுக்களிலும், இணையதளங்களிலும் செலவிடுகின்றனர். "வெளியில் சென்றால் எங்கே போகிறான் என்றே தெரியாது, அதற்கு பதில் வீட்டிற்குள்ளேயே இருப்பது பிரச்சனையில்லை" என்று ஆறுதல்படும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இணையத்தின் ஊடாக எங்கே எல்லாம் செல்கிறார்கள் என கவனிப்பதில்லை.
ஒரு தொழில்நுட்பத்தை குழந்தைகள் பயன் படுத்தும்பொழுது, அந்த தொழில்நுட்பம் குறித்து தங்கள் குழந்தைகளை விட பெற்றோருக்கு அதிக அறிவு இருப்பது அவசியம். ஏனெனில் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தால் வரும் பாதிப்புகள், குழந்தையை ஒரு கட்டத்திற்குள்ளாக செயல்பட வைக்கும் அல்லது கண்காணிக்கும் திறன் இருப்பது அவசியம்.
தங்களிடம் அதற்கான தெளிவு இல்லாதபோது குழந்தைகளை இணையத்திலும், வீடியோ கேம்களிலும், முழுக்க நேரத்தை செலவிட வைப்பது பாதுகாப்பில்லாதது ஆகும். புதியவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும்பொழுது நன்மைகளை மட்டும் காணாது தீமைகளையும் ஆராய்வது அவசியம்.
இன்றைக்கு பல பெற்றோருக்கு குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற மனநிலையே அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்தான் பிற்காலத்தில் தங்கள் குழந்தைகள் குறித்து அதிகம் கவலை கொள்ளுபவர்களாகிறார்கள்.
வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்கள் ஒரே நேர்கோட்டிலான சிந்தனைகளை தரக்கூடிய சூழ்நிலைகளையே உருவாக்கித் தருகிறது. ஆனால் திறந்த வெளியில் விளையாடும் விளையாட்டுக்கள், பரந்த அறிவினை தரக்கூடியதாக இருக்கிறது.
ஏனெனில் விளையாட்டு மைதானம் விளையாட்டோடு நண்பர்களை தருகிறது, காலநிலை மாற்றத்தையும் கற்றுத்தருகிறது. நீச்சல் குளம் பாதுகாப்பான நீச்சலை மட்டுமே கற்றுத் தருகிறது. ஆனால் ஆறானது நீச்சலோடு திரண்டு வரும் நீரோட்டத்தை எதிர்கொள்வதன் மூலம் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கிறது.
வாழ்க்கையின் வசந்தம் திறந்த வெளியில் தான் இருக்கிறது. அதனை பெற்றுக்கொள்ள நம் குழந்தைகளை வெளியே அழைத்து வருவோம். அதற்கேற்ற முறையில் நம் சுற்றுப்புறத்தையும் கட்டமைக்கும் பணியும் நமக்கு உள்ளது.
கல்வி மலர் 

திங்கள், 21 அக்டோபர், 2013

எதிர்காலத்திற்கான மகிழ்ச்சி மாணவப் பருவத்தில் தொடங்குகிறது



பள்ளி, கல்லூரியில் படித்த மாணவர்கள் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நிகழ்வுகளை அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் பள்ளித் தோழர்களோடு மீண்டும் ஒன்றாகக் கூடும் நிகழ்வுகளை சந்தித்த அனுபவம் இருக்கும்.
மறுபடியும் ஒன்று கூடும் சம்பவங்கள் தற்பொழுது அதிகமாகி வந்துகொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக தொழிநுட்பமும் இருக்கிறது. இணையதளங்களின் உறுதுணையால் தங்களது பழைய நண்பர்களைக் கண்டடைவது எளிதான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது.
10 வருடங்கள், 20 வருடங்கள், 30 வருடங்கள் என முன்னாள் மாணவர்கள் தங்கள் குழந்தைகளுடன், பேரப்பிள்ளைகளுடன் சந்திக்கும் நிகழ்வுகளை படிப்பவர்களுக்கும் கூட, இந்நிகழ்வுகள் மனதிற்குள்ளாக உற்சாகத்தை  ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த மாதிரியான செய்திகளை படிப்பவர்கள் நினைவுகளை பின்னோக்கி செலுத்தி தங்கள் கல்லூரி, பள்ளி வாழ்க்கையின்  சம்பவங்களை எண்ணி பார்க்கின்றனர்.
இப்படிப்பட்ட சிந்தனைகளானது மாணவர் முதல் வயதான பெரியவர் வரை அனைவரையும் கடந்த காலத்திற்கு பாகுபாடின்றி அழைத்துச்செல்கிறது. கடந்து போன நிகழ்வுகள் எதிர்காலத்தில் தங்களின் செயல்பாடுகளை எப்படி மாற்றிக்கொள்வது என்பதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பதனாலும் இவை முக்கியத்துவம் பெறுகிறது.
வயதான காலத்தில் இளமை காலத்திய நினைவுகளே மகிழ்ச்சி தரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. எதிர்காலத்திற்கான மகிழ்ச்சியான அஸ்திவாரம் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் தான் இடப்படுகிறது. தேர்ந்தெடுக்கும் பாடங்கள், அமைத்துக் கொண்ட நண்பர்கள், படிக்கும் கல்வி நிலையம் போன்றவற்றோடு தொடர்புடைய ஏதேனும் ஒன்று வாழ்க்கையின் இறுதி காலம் வரை ஏதோ ஒரு விதத்தில் நம்மோடு நடைபோடுகிறது.
இப்படிப்பட்ட அருமையான வாழ்க்கையை  நமது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் அல்லவா? வெற்றிகரமான மனிதனாக எதிர்காலத்தில் நண்பர்களை சந்திக்க இப்பொழுதே தயாராக வேண்டும். அதற்காக பள்ளியில், கல்லூரியில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்திருக்கின்றோமா? பெற்றோரின் அறிவுரைகளை மதிக்கிறோமா? கிடைக்கும் நேரங்களை வளர்ச்சிக்காக செலவழிக்கிறோமா? சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மைகள் செய்திருக்கிறோமா?
மேற்கண்ட கேள்விகளுடன் நம்மை நாம் ஆய்வுக்கு உட்படுத்தினால் விடைகள் சற்று மோசமாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்போம் என்றால் இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே நமது எண்ணம் பிறகு என்பதாகத்தான் இருக்க முடியும்.
தருணங்களை தவற விடாமல் நன்மை தரும் நிகழ்வுகளாக, எதிர்காலத்திற்கு வளர்ச்சி தரும் செயல்பாடுகளாக உருவாக்கி மாணவப் பருவத்தில் மகிழ்ச்சிகரமாக நடைபோடுவோம்.
கல்வி மலர் 

வியாழன், 17 அக்டோபர், 2013

சிந்திக்க நேரம் இருக்கிறதா?




வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதாக தொழிற்துறையினரும், இளம் தலைமுறையினரும் கூறி வருகின்றனர்.
"தொழில்நுட்பங்கள் பயணத் திட்டங்களை எளிதாக்குகிறது, வேலையினை எளிதாக முடிக்க வசதியாக இருப்பதால் தேவையில்லாத அலைச்சலைக் குறைக்கிறது, உலகின் எந்த மூலையில் இருக்கும் நபர்களையும் தொடர்பு கொள்வது எளிதான ஒன்றாக இருக்கிறது" என பலதரப்பட்ட காரணங்களை தொழில்நுட்பத்துக்கு ஆதரவாக இளம் தலைமுறையினர் கூறுகிறார்கள்.
"தொழில்நுட்பங்கள் அருகில் இருக்கும் மனிதன் மேல் உள்ள நம்பிக்கையை அழித்து, தெரியாத மனிதன் மேல் நம்பிக்கையை உருவாக்க காரணமாக இருக்கிறது.  விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதைத் தவிர்த்து கணினியில் விளையாடுவதற்கு ஊக்கம் கொடுப்பதும், இயற்கையை விட்டு மனிதனை தூர விலக வைப்பதில் பெரும் வெற்றி கண்டிருப்பதுதான் தொழில்நுட்பத்தின் வெற்றி" என்பது அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் கருத்தாக இருக்கிறது.
தொழில்நுட்பங்கள் குறித்து இருவேறு கருத்துகள் இருந்தாலும், பல சம்பவங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் இடையூறுகளையே ஏற்படுத்துகின்றன, என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
மனிதன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை ஏதோ ஒரு வேலைக்குள் தன்னை உட்படுத்திக் கொள்கிறான். மேலும், வேலை பார்க்கும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாலும், இன்றைய பணியாளர்களுக்கு வேலையானது தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. அது தவிர வீட்டு வேலைகள், இதர பணிகள் என பல்வேறு சூழ்நிலைகளுக்கிடையில் செல்பேசியில், இணையதளத்தின் வழியாக சமூக வலைதளங்களில் என பல்வேறு செயல்களுக்கிடையில் ஒரு நாளைக்கான நேரம் என்பது போதுமானதாக இருப்பதில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிந்திப்பதற்காக நேரம் கிடைக்காமலே போய்விடுகிறது. "ஒரு சமூகம், நாடு வளர்ச்சி அடைவதற்கு சீரிய சிந்தனைகளே துணை புரிகின்றன" என்பது மனோ தத்துவவியலாளர்களின் கருத்து.
சிந்தனை வறட்சியை போக்குவதற்காக, சிந்தனைகளை வளர்க்கும் நடவடிக்கைகளை பள்ளிகளும், கல்லூரிகளும், தொழில் நிறுவனங்களும் எடுக்க ஆரம்பித்துள்ளன. பள்ளிகளைப் பொறுத்த அளவில் தற்பொழுது "ப்ளே ஸ்கூல்ஸ்" போன்ற குழந்தைகளின் மன ஓட்டத்திலேயே பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள வைப்பதற்காக, புதிய புதிய நடைமுறைகளில் பாடங்கள்  கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
கல்லூரிகளிலும் பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தில் "பிராப்ளம் சால்விங்" முறையில் பாடங்கள் அளிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால், பணியில் சேர்ந்தவுடன் இது போன்ற வாய்ப்புகள் அனைத்தும் தடைபட்டு போய்விடுகின்றது. மூளையின் வளர்ச்சி வேலை பெறுவதற்கு மட்டுமானது, என பலரும்  நினைப்பதால் வேலை கிடைத்தவுடன் மூளைக்கான உணவை கொடுக்க மறந்துவிடுகிறோம்.
ஆனாலும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் நலனை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறை செலுத்துகின்றன. அப்படிப்பட்ட நிறுவனங்கள் காலை நேரத்தில் அலுவல் சம்பந்தமான மின்னஞ்சல்களை தங்கள் ஊழியர்களுக்கு அனுப்புவதில்லை என முடிவெடுத்துள்ளன.  ஜெர்மனியின் "வோல்க்ஸ்வேகன்" நிறுவனம் தங்களுடைய மின்னஞ்சல் சர்வரின் இயக்கத்தையே இரவு நேரத்தில் நிறுத்தி வைத்து விடுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் முதற்கொண்டு தொழில்புரிவோர் வரை பெரும்பாலோனோர் இரண்டிலிருந்து நான்கு அலைபேசி வரை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்களின் கவனம் சிதறடிக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை.
காலை நேரம் சிந்திப்பதற்கு உகந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் இரவு மிகத் தாமதமாகத் தான் தூங்குகின்றனர். காலையிலும் அலுவலகத்திற்கோ, கல்லூரிக்கோ செல்வதற்கான நேரத்திற்கு அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகத் தான் படுக்கையிலிருந்து எழும்பி கிளம்புகின்றனர். இதிலே சிந்திப்பதற்கான நேரம் எங்கு கிடைக்கிறது?
ஒரு தனியார் நிறுவனம் தங்கள் அலுவலக பணியாளர்களுக்கு காலையில் அன்று செய்யக்கூடிய  வேலைகள் குறித்து சிந்திக்கவும், அடுத்ததாக அவசரமான அல்லது முக்கியமான  பணிகளை ஆற்றவும் அறிவுறுத்துகிறது. ஏனெனில் பணியை எளிதாக, நெருக்கடி இல்லாமல் முடிப்பதற்கு இது துணை புரிவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
வாழ்க்கை இன்றைக்கானது மட்டுமல்ல, கடந்த காலத்தின் பாடங்களிலிருந்து வருங்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு. மானவர்களே, வாய்ப்பினை நாம் உபயோகமாகப் பயன்படுத்தினால் மட்டுமே வளர்ச்சி சரிவிகிதத்தில் இருக்கும். சிந்திப்பதற்கான நேரம் என்பது தானாக கிடைக்காது, நாம்தான் அதற்கான நேரத்தை ஒதுக்கியாக வேண்டும்.   
கல்வி மலர் 

வியாழன், 10 அக்டோபர், 2013

வான்வெளியில் வரலாறு படைக்க...



பரபரப்பான நகர வாழ்க்கை வாழும் நபர்கள் வானத்தை பார்க்கும் தருணங்கள் மிகவும் குறைவு. எப்பொழுது வானத்தை பார்த்தீர்கள்? என்று கேட்டால், எத்தனை நாட்களுக்கு முன் பார்த்தோம்? என்று சிந்திக்க மாட்டார்கள், எத்தனை மாதங்களுக்கு முன் பார்த்தோம்? என்றுதான் தங்கள் சிந்தனையை செலுத்துவார்கள்.
ஆனால் சிற்றூர்களில் வாழும் மக்கள் வானத்தை காணாத நாட்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கும். பரந்து விரிந்த வானமும் அதற்கு அப்பால் உள்ள அண்ட வெளியும் பல பேருண்மைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
வானமானது மழையை, காற்றை, வெயிலை, குளிரை முன்னதாகவே கண்டுகொள்வதற்கான காலக் கண்ணாடியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. வானம் அளவில்லாத அற்புதங்களைக் கொண்டது.

அதிசயங்களை கண்டுகொள்வதற்கான ஆர்வமும், நிதானமான பொறுமையும், ஆராய்வதற்கான ஈடுபாடும் கொண்டவர்களுக்கு வானம் ஒரு அறிவுச் சுரங்கமாக தன்னை வெளிப்படுத்தி வந்து கொண்டிருக்கிறது.
பறவையை கண்டு விமானம் படைத்தான். விமானத்திற்கு அடுத்து என்ன என்று சிந்தித்ததன் விளைவாக கிரகங்களை தாண்டி ஆராய்ச்சிகள் சென்றுகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளில் உங்கள் பங்களிப்பையும் செலுத்த விரும்புகிறீர்களா? வரலாறு படைக்க ஆசையா? ஒவ்வொரு நாளையும் புதிய கோணத்தில் காண ஆர்வமா? அப்படியெனில் தேர்ந்தெடுங்கள் வான்வெளி பொறியியல் துறையை.
கல்வி மலர் 

செவ்வாய், 1 அக்டோபர், 2013

அறுவடையின் பலனை எதிர் நோக்கி பயிர் செய்யுங்கள்...

புதிய கலாச்சாரத்திற்குள் மனிதன் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும்பொழுது தன்னோடு தனது குடும்பம், தன்னைச் சார்ந்தவர்கள் என பலரையும் சேர்த்து அந்த புதிய கலாச்சாரத்திற்குள் இழுத்துச் செல்கிறான்.
இந்த மாற்றம் பிறராலும் கவனிக்கப்பட்டு, தங்கள் நலத்திற்காக அதன் பின் விளைவுகளை கண்ணோக்காமல் நன்மைகள் என்ற ஒரு பார்வையிலேயே புதிய பழக்க வழக்கங்களை தனதாக்கிக் கொண்டு விடுகின்றனர்.
"முருங்கையை நொடித்து வளர்க்கணும், பிள்ளையை அடித்து வளர்க்கணும்" என்பது காலங்காலமாக நம்மோடு புழங்கிய வார்த்தைகள். ஆனால் இன்று தனது குழந்தை என்றவுடன் எதையும், அதாவது அந்தக் குழந்தை செய்யும் சிறு தவறையும் சரி செய்வதை விட்டு ரசிக்கும் தன்மை வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் பெரிய வீட்டு பிள்ளைகளிடம் தவறுகள் நடப்பது சகஜம் என்பது பெரும்பான்மையானோரின் கருத்தாக இருந்தது. ஆனால் இன்று அனைத்து தரப்பினரிடமும் சகலவிதமான கெட்ட பழக்கவழக்கங்களும் சாதாரணமாக தென்படுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்பம் என கூறப்பட்டாலும், சரியான கண்காணிப்பு, கண்டிப்பு இல்லாததே முக்கிய காரணமாக இருக்க முடியும். குழந்தைகளுக்கு பாசத்தையும், அன்பையும் ஊட்டி வளர்க்க வேண்டும் என்றாலும், அந்த அன்பும், பாசமும் குழந்தை வாலிபனான பிறகும் இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள் நமக்கு வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன? பாசத்தை ஊட்டி வளர்த்த வசதி படைத்த பெற்றோர் நாகரிக வளர்ச்சியின் தொடர்ச்சியாகத் தான் முதியோர் இல்லங்களில் தனிமையில் வாடுகிறார்களா?
காலங்கள் முடிந்த பின்னர் குழந்தை வளர்ப்பைப் பற்றி சிந்தித்து பயன் இல்லை.  மரம் வளர்ப்பது அவசியமும் தேவையானதுமானதாக இருந்தாலும் இடைஞ்சலாக இருக்கும் சிறு சிறு கிளைகளை வெட்டி, மரத்தை சீராக வளர்க்க முயற்சி செய்கிறோம்.
அதே போன்று தான் வாழ்க்கையும், சிறு வயதிலேயே குழந்தைகளின் தவறுகளை சரி செய்தால் தான் பெரியவனான பின் அவனால் பெற்றெடுத்த பெற்றோருக்கும், அவன் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கும் நலம் உண்டாக்கும்.
கல்வி மலர்