வெள்ளி, 31 மே, 2013

முடிவெடுக்கும் காலம்




மாணவர்கள் புதிய புதிய எண்ணங்களுடன் எதிர்பார்ப்புகளுடனும் கல்லூரியை தேர்வு செய்யும் அவசரத்திலும், நினைத்த கல்லூரி கிடைக்குமா? என்ற குழப்ப மிகுதியாலும் தவிப்புடன் வலம் வரும் காலம் தான் தேர்வு முடிவு வந்ததிலிருந்து, கல்லூரியில் சேரும் வரை உள்ள காலமாகும். மிகவும் குறிப்பிடத் தகுந்த எதிர்காலத்திற்கான முன் அடித்தளமாக இருப்பதும் இந்தக் காலம்தான்.
இந்த காலத்தில் நாம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் எந்த ஊரில், எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்கிறோம். அதன் மூலம் ஒரு புதிய ஊர் அறிமுகமாகிறது. புதிய பழக்க வழக்கங்கள் கொண்ட மாறுபட்ட பேச்சு வழக்கை கொண்ட மக்கள் அறிமுகமாகிறார்கள். சேரும் கல்லூரியின் மூலம் புதிய நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். புதிய நண்பர்கள் பலரும் பல ஊர்களைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக புதிய சிந்தனைகள், கருத்து பரிமாற்றங்கள் என வாழ்க்கை புதிய ஒரு பரிமாணத்தை காணுகிறது.
இந்த பரிமாணம் நம் வயது, அனுபவங்கள், கற்றுக்கொண்ட தகவல்கள், செயல்பாடுகளைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்த பரிமாணத்தால் நாம் மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறோமா அல்லது மாற்றங்களின் வழி செல்லாமல் கட்டுப்பாட்டுடன் சுய அறிவுடன் நடந்துகொள்கிறோமா என்பதை மையமாகக் கொண்டு, நம் வாழ்க்கை எதிர்காலத்தில் அமைய வாய்ப்பிருக்கிறது. மாற்றங்கள் என்பது எப்போதும் எளிதானதாக இருப்பதில்லை.
ஏனெனில் கல்லூரி வாழ்க்கை என்றவுடன் மாணவர்களுக்கு சுதந்திரம் என்ற வார்த்தை தான் ஞாபகத்திற்கு வருகிறது. அது எல்லோருக்கும் அமைவதில்லை, அப்படியே அமைந்தாலும் கிடைக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துபவர்களுக்குதான் எதிர்காலம் சிறப்பானதாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கல்லூரி காலங்களில் காலத்தை வீணாக பயன்படுத்தியவர்கள் கூட அதன் பிறகு தங்கள் தவறை உணர்ந்து வெற்றியடைகின்றனர். 
எனவே, இந்த அருமையான காலத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி நம்மை சீர்படுத்தும் கல்லூரியையும், நண்பர்களையும் சரியாக தேர்ந்தெடுத்து, காலத்தை கணக்கிட்டு பயன்படுத்தியும் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்ற முயற்சி செய்வோம்.
கல்வி மலர் 

புதன், 8 மே, 2013

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?



பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக இருக்கும். குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடை கண்டுகொள்ளலாம். அதற்கு முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை காண வேண்டும்.
எப்படி திறன்களை கண்டுகொள்வது?
உங்களுக்கு எந்த துறையில் ஈடுபாடு உள்ளது என கண்டு கொள்ளுங்கள். திடீரென்று அந்தத் துறையின் மேல் ஆர்வம் வந்திருக்கிறதா? அல்லது இயற்கையாகவே அந்தத்துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறதா என்பதை காணவும்.
எடுத்துக்காட்டாக சிறு வயதில் இருந்தே அதிக அக்கறையுடன் பணம் மற்றும் நிதி நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொண்டிருக்கிறீர்கள் எனில், அந்ததுறையின் மீதும் ஈடுபாடும் இருக்கிறது என்றால் நிதித்துறையை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.
பெற்றோர்கள்/ ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கலாமா?
உங்கள் தனித்திறமையை, அக்கறை கொண்ட ஆசிரியர்கள் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் கணிதத்தில் திறமையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது அறிவியலில் ஈடுபாடு கொண்டவரா? மொழித் திறமையுடையவரா? என்பதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளலாம்.
அதே போன்று சிறு வயதில் இருந்து உங்களை கவனித்து வரும் பெற்றோரிடம் உங்கள் தனிப்பட்ட திறமைகள், கவனம், ஈடுபாடு குறித்து ஆலோசனை செய்வதால், சரியான வழியை கண்டுகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
எந்த மாதிரியான ஆலோசகர்களை அணுகலாம்?
பல்வேறு வகைகளில் உங்களை பரீட்சித்து பார்த்து, நீங்கள் அந்த குறிப்பிட்ட துறைக்கு ஏற்றவரா? என்பதை ஆராய்ந்து கண்டறிபவர்களாக இருக்க வேண்டும். உங்கள் திறமையை, ஆளுமையை கண்டு கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் திறமைகள் எந்த துறைக்கானவை என்பதை கண்டுகொண்டு அந்தத்துறையில் என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெளிவாக சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் எது?
படிப்புகள் அனைத்துமே அதிகம் வருமானம் தரக்கூடியதுதான். படித்த படிப்பினை எப்படி நம் திறமையின் மூலம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. அதனால் இந்தப் படிப்புதான் வருமானம் தரக்கூடியது என கூற முடியாது.
ஆர்வத்துடன் படிப்பதற்கு அவசியமானவை என்ன?
மிகுந்த ஈடுபாடு.
அர்ப்பணிப்பு உணர்வு.
படிப்பின் மேல் காதல்.
புரிந்து கொள்ளும் ஆர்வம்.
சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை.

கல்வி மலர்