புதன், 28 ஆகஸ்ட், 2013

பண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்...




"டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சி" என்பதை பத்தோடு பதினொன்றான செய்தியாக பார்க்கும் மனப்பான்மைதான் மக்களிடம் அதிகமாக உள்ளது. டாலர் மதிப்பு என்பது ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், பங்குச்சந்தை வணிகம் சம்பந்தப்பட்டது, பெரும் வணிகர்கள் சம்பந்தப்பட்டது என்ற எண்ணம் தான் பெரும்பான்மை மக்களிடையே காணப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்பொழுது, மகிழ்ச்சி அடைபவர்கள் என்று சொல்வதை விட சற்றே திருப்தி அடைபவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தான்.  பாதிக்கப்படுபவர்கள் என்று எடுத்துக்கொண்டால், இன்றைய சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.
பாதிக்கப்படுபவர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால்  எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?
இந்தியாவிலிருந்து அமெரிக்க நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் படிப்பிற்காக மாணவர்கள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் இந்திய ரூபாயை எடுத்துச் செல்ல முடியாது. அந்த நாட்டின் பணத்தைத் தான் எடுத்துச்செல்ல வேண்டியதாக இருக்கும். அப்பொழுது அந்த நாட்டின் ரூபாய் மதிப்பும், இந்திய நாட்டு மதிப்பும் சமமாக இருந்தால் நமக்கு பாதிப்பில்லை.
ஆனால் பொருளாதாரம், வணிகம், தங்கம் கையிருப்பு போன்ற காரணிகளால் ரூபாய் மதிப்பு நிகராக இருப்பதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் இவை மாறுபட்டு இருப்பதால் பெரும்பாலும் எந்த நாட்டு பண மதிப்பும் மற்றோரு நாட்டின் பண மதிப்புக்கு நிகராக இருப்பதில்லை. பண மதிப்பில் மாற்றங்கள் வரும்பொழுது, நமது பணத்தின் மதிப்பு நாம் மாற்றும் பண மதிப்பிற்கு குறைவாக இருந்தால் அதிக ரூபாயும், அதிகமாக இருந்தால் குறைவான அளவில் ரூபாயும் கொடுக்க வேண்டியது இருக்கும்.
எடுத்துக்காட்டாக, இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 54 ரூபாயாக இருந்தது. அதாவது நமக்கு ஒரு அமெரிக்க டாலர் வேண்டுமானால், நாம் அதற்கு 54 ரூபாய் கொடுக்க வேண்டும். அதே போன்றுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ மதிப்பும்.
ஜனவரி 2013ல்
53 ரூபாய் = 1டாலர்
72 ரூபாய் = 1 யூரோ
ஆகஸ்டு 2013ல்
65 ரூபாய் = 1 டாலர்
87 ரூபாய் = 1 யூரோ

தற்பொழுது டாலருக்கு 12 ரூபாயும், யூரோவுக்கு 15 ரூபாயும் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவரின் கல்விச்செலவு எடுத்துக்காட்டாக 10,000 டாலர் அல்லது யூரோவாக இருந்தால்,
ஜனவரி 2013ல்
10,000 டாலர் = 5,30,000 ரூபாய்
10,000 யூரோ = 6,50,000 ரூபாய்
ஆகஸ்டு 2013ல்
10,000 டாலர் = 7,20,000 ரூபாய்
10,000 யூரோ = 8,70,000 ரூபாய்
எட்டு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பவர்கள் 1,20,000 ரூபாய் அதிகமாகவும், ஐரோப்பிய நாடுகளில் படிப்பவர்கள் 1,50,000 ரூபாய் அதிகமாகவும் கொடுக்க வேண்டியுள்ளது.
தொழில் புரிபவர்களே இநதிய ரூபாய் 50 பைசா வீழ்ச்சி அடைந்தாலும் பாதிக்கப்படும்பொழுது, கடன் வாங்கி, வீட்டை, நகையை அடமானம் வைத்து பெரும் கனவுகளோடு தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி இருக்கும் பெற்றோர் ரூபாய் மதிப்பு இவ்வளவு  வீழ்ச்சி அடைந்தால் எவ்வளவு பாதிக்கப்படுவர்.
கல்விக் கட்டணம், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், இந்தியாவிற்கு வந்து போகும் செலவு என ஒவ்வொரு செலவும் இந்த விலை வீழ்ச்சியினால் அதிகரிக்கிறது. வருடத்திற்கு எட்டு லட்சம் என்று கணக்கிட்டு பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிய பெற்றோர், இன்று கூடுதலாக 1.80 லட்சத்திற்கும் அதிகமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். மூன்று வருட இளநிலை படிப்பிற்கு சென்றவராயிருந்தால், அடுத்த இரு வருடத்திற்கும் சேர்த்து 3.60 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நடக்கும் மாணவர் சேர்க்கையில் மேல் படிப்பிற்கு செல்லலாம் என்று திட்டமிட்டு இருக்கும் பல மாணவர்களும் தங்கள் ஆசைகளை கைவிடும் நிலையில் உள்ளனர்.  ஏற்கனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோரும் மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கின்றனர்.
ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார சூழ்நிலைகளே வாய்ப்புகளையும், வாய்ப்பின்மையையும் ஏற்படுத்துகின்றது. மக்கள் தொகைப் பெருக்கம், தேவைப்பாடு, வேலைவாய்ப்பு, லட்சியத்திற்கான வாய்ப்புகள், ஒரே பாடப்பிரிவை பலரும் எடுக்கும் நிலை, கல்வித்தரம் என பல்வேறு காரணங்களால் ஒரு நபர் தங்கள் நாட்டை விட்டு வெளி நாடுகளுக்கு செல்லும் முடிவை எடுக்கின்றனர். இந்தத் தேவைகள் இங்கேயே கிடைத்தால் வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருக்காது. ஆனால் அதற்காக நாம் நீண்டதூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது.
என்ன செய்யலாம்?
முடிந்த வரையில் செலவுகளை குறைத்தும், திட்டமிட்டும் ஒரளவு இந்த பண வித்தியாசத்தை சரி செய்யலாம்.  அதற்காக சில முன், பின்  தயாரிப்புகளை மாணவர்களும் பெற்றோர்களும் செய்யவேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ வெளிநாட்டு கல்விக்கு தயாராகும்பொழுது திட்டமிடும் தொகையை விட கூடுதலாக 25 சதவிகிதத் தொகையை கணக்கிடுங்கள். அதே போன்று பண மதிப்பு குறித்து தெளிவுடையவராக இருந்தால்,  பண மதிப்பு அதிகரிக்கும்பொழுது தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கணக்குக்கு தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலுத்துங்கள். சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வரும் பொழுது, பண மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
மாணவர்களும் தங்கள் பெற்றோரின் இக்கட்டான சூழ்நிலையை நினைவில் கொண்டு சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் தான் பெற்றோருக்கும் பேருதவியாக் இருக்கும்.
1) கல்லூரி உணவகங்களில் மட்டும் சாப்பிடுங்கள்.
2) வீட்டில் சமையுங்கள்.
3) உணவகங்களில் "ஹேப்பி ஹவர்" என ஒதுக்கப்படும் நேரத்தில் சாப்பிடுங்கள், அந்த நேரத்தில் உணவுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
4) பசியுடன் பொருட்கள் வாங்காதீர்கள், ஏனெனில் அந்த நேரத்தில் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்குவீர்கள், அது செலவினை அதிகப்படுத்தும்.
6) விலை குறைவான கடைகளில் பொருட்களை வாங்குங்கள்.
7) அத்தியாவசியமான பொருட்கள் எது என தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
8) கடைகளில் தரப்படும் தள்ளுபடி காலங்களுக்காக காத்திருங்கள்.
9) மாணவர்களுக்கான அடையாள அட்டையைப் பயன்படுத்தி பயணங்களில் சேமியுங்கள்.
10) தேவையில்லாத பயணங்கள், சுற்றுலாக்களை தவிருங்கள்.
11) இரவு நேர கொண்டாட்டங்களைத் தவிருங்கள்.
12) மாணவர் சலுகைகளை தேடிப் பெறுங்கள்.
கல்வி மலர்

சனி, 24 ஆகஸ்ட், 2013

நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்


இன்றைய இளம் தலைமுறையினரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் குறைந்து வருவதாக பெரியவர்கள் பலரும் கவலை கொள்கின்றனர். தினந்தோறும் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
சாலையில் நாம் செல்லும் பொழுது நமக்கான பாதையில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது.  நமக்கான நேரம் முடிவதற்கு இன்னும் சில நொடிகளே இருக்கிறது, நாம் சாலை சந்திப்பை கடந்து கொண்டிருக்கிறோம், அந்த நேரத்தில் எதிர்ப் பக்கம் பச்சை விளக்கு எரிவதற்கு சில நொடிகள் இருக்கிறது அதற்குள்ளாகவே அந்த பக்கத்தில் இருந்து அதிவேகத்துடன் வரும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நம்மை சற்று தடுமாற வைத்து செல்கிறது. இதனைக் கண்டு "அதற்குள் என்ன அவசரம் 2, 3 நொடிகள் காத்திருக்கக்கூட முடியாதா?" என்று நம்மில் எத்தனை பேர் அந்த நேரத்தில் கோபம் கொண்டிருப்போம். ஆனால் அதே நேரத்தில், நாம் அதே போன்று எதிர்ப்பக்கத்தில் இருந்தோம் என்றால், நம்மில் எத்தனை பேர் அந்த நேரத்தில் பச்சை விளக்கிற்காக காத்திருப்போம்? அல்லது எத்தனை பேர் பச்சை விளக்கு எரிவதற்குள்ளாக வாகனத்தை இயக்கியிருப்போம்?
காரணம் நிதானமின்மை. எதையும் உடனடியாக செய்ய வேண்டும், அவசரமாக செல்ல வேண்டும், நேரமில்லை, பல வேலைகள் இருக்கின்றன... என்பது போன்ற காரணங்கள் நம்மில் ஒவ்வொருவரிடமும் இருக்கும். சரி பெரியவர்களுக்கு பல பொறுப்புகள் இருக்கிறது அவர்களால் சில நொடிகள் கூட காத்திருக்க முடியாது என ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். படிக்கும் கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கூட பொறுமையில்லாமல் அவசரப்படுவதன் காரணம் என்ன? அவர்கள் ஏதோ அவசரமாக செல்கிறார்கள் என்று எண்ணுவதை விட, இப்பொழுதே இப்படி செல்பவர்கள் இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமாக சாலை விதிகளை மீறுவார்களே? அடுத்து வரும் தலைமுறையினரும் இவர்களைப் பின்பற்றினால் சட்டம் ஒழுங்கு எப்படி மேம்படும்? இதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும், போக்குவரத்துத் துறைக்கும் மட்டுமா இருக்கிறது? இல்லை. 
ஒரு பிரச்சனையை அப்பொழுது சரி செய்வதை விட, இனி அது போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கான சரியான தீர்வை கண்டுபிடிப்பது தான் மிகச்சரியாக இருக்க முடியும். சரியான தீர்வு என்பது, அந்த பிரச்சனைக்கான மூல காரணம் என்ன என்று கண்டுகொள்வதாகும். மேற்கண்ட பிரச்சனையை மட்டுமல்ல பல ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்தோம் என்றால் அது பெற்றோர், பள்ளி, ஆசிரியர், பாடங்கள் என்று விரிவாக செல்லும். நிதானமின்மைக்கும், அவசரத்திற்கும், திட்டமிடல் இல்லாததற்கும் எப்படி பள்ளிக்கூடமும், ஆசிரியர்களும் பெற்றோரும் காரணமாக இருக்க முடியும்?
நமது கல்வி அமைப்பு, நமது வாழ்க்கைக்கான கல்வியை எந்த அளவுக்கு சொல்லித் தருகிறது என்பது கேள்விக்குறியே. நமது கல்விக்கூடங்களில் ஒரு சில அறிவுறுத்தல்களை நாம் பெற்றுக்கொண்டாலும் அதற்கடுத்து நாம் வேலை பார்க்கும் இடங்களிலோ, வேலை தவிர்த்து வாழ்க்கைக் கல்வியை கற்றுத்தரும் வகையில் எந்தவித செயல்பாடும் இருப்பதில்லை. அப்படியென்றால் இதை கற்றுக்கொடுக்கவேண்டியது யார் பொறுப்பு? இதற்கான பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் இருக்கிறது அல்லவா.
எத்தனையோ ஆசிரியர்கள் பாட வேளையின் கடைசி 5 நிமிடங்களையோ, 10 நிமிடங்களையோ பொது அறிவுக்கெனவும், தனித்திறனுக்கெனவும் ஒதுக்கி மாணவர்கள் அறிவை வளர்ப்பதற்கு உதவி வருகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்கள் அமையாதவர்கள், கற்றுக்கொள்வதில் இழப்பை சந்திக்கிறார்கள். புதிய புதிய பாடங்களை கற்றுத்தரும் பல மெட்ரிக் பள்ளிகளும் வாழ்க்கைக்கல்விக்கான பாடங்களை கற்றுத்தருவது குறித்து சிந்திப்பதில்லை. செல்லம் கொடுத்து வளர்க்கும் பெற்றோரும் பொது ஒழுக்கங்களை தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதில் போதிய அக்கறை காட்டுவதில்லை.
என்ன கற்றுக்கொடுத்தாலும். நாம் கற்ற பல விஷயங்களை, பாடங்களை அந்தந்த வகுப்பை கடந்தவுடனேயே மறந்து விடுகிறோம். ஏனென்றால் மனித இயல்பின் படி, நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. இந்த நினைவூட்டல் நமக்கு வாழ்க்கை முழுவதுமே தேவைப்படுகிறது. ஆசிரியர், பெற்றோர், நண்பர்கள், வேலை தரும் நிறுவனம் என ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு காலக்கட்டத்தில்   நினைவூட்டுவதற்கான கடமையும் பொறுப்பும் இருக்கிறது. இது எனக்கான வேலை இல்லை என ஒதுங்குவதும், ஒதுக்குவதும் நல்ல குடிமகன் உருவாவதற்கான வாய்ப்பை தடுப்பதற்கான குற்றத்திற்கு நம்மை பொறுப்பாக்கும்.
எனவே, வகுப்பில் பாடங்களை கற்றுத்தரும் வேளையில், ஒரு சில நிமிடங்களை சாலைப் போக்குவரத்து, பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், சாலையில் செல்லும் ஓவ்வொரு நொடியிலும் தேவைப்படும் பாதுகாப்பு, கவனம் குறித்த தகவல்களையும், பயணங்கள் நமக்கு கற்றுத்தரும் பாடங்களையும், வேகத்தை விட பயணத்தின் நோக்கம் பெரிது போன்ற போக்குவரத்து சார்ந்த அறிவையும், ஒழுக்க நடவடிக்கைகளையும் கற்றுக்கொடுக்க ஆசிரியப் பெருமக்கள் முன் வர வேண்டும்.
மிதிவண்டியோ, மோட்டார் சைக்கிளோ எதுவானாலும் வாகனம் வாங்கி கொடுப்பதோடு தன் கடமை முடிந்து விட்டது என இருந்துவிடாமல் நல் ஆலோசனைகளை தொடர்ந்து பிள்ளைகளுக்கு நினைவுபடுத்தவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும் இருக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களை இளம் வயதில் கற்றுக்கொண்டால்தான் அவை நம் எதிர்கால வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக அமையும்.
கல்வி மலர் 

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

ஆகாயத்தைத் தொடும் வளர்ச்சி தரும் ஆராய்ச்சி துறை




ஓவ்வோரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட துறைகள் முன்னோக்கிச் செல்வதாக மாணவர்களாலும், பெற்றோர்களாலும் கருதப்பட்டு படிக்கும் பாடப்பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நிலையான வளர்ச்சியும் பெரும் புகழும், வரலாற்றில் தம் பெயரை இடம்பெற வைப்பதற்கு துணை புரியும் துறை ஆராய்ச்சி துறை தான்.
நாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் பாடங்கள், வேலைக்கு தயார்படுத்தும் தேர்வுகளின் கேள்விகள், உபயோகப்படுத்தும் வீட்டு உபகரணங்கள், போக்குவரத்து, கட்டிடம் என நம் வாழ்வில் காணும் எல்லாவற்றையும் தனது பரந்த கரங்களால் பிணைத்து கொண்டிருப்பது, ஆராய்சியாளர்களின் உழைப்பால் உருவான கண்டுபிடிப்புகளின்  சாராம்சமே. 
ஆராய்ச்சி, ஆராய்ச்சியாளர்கள் என்றாலே ஆய்வகங்கள், ரசாயனம் என்று மக்களால் உருவகப்படுத்தப்பட்ட நிலை மாறி, அவற்றையும் கடந்து சாதனை புரிபவர்களை ஊக்கப்படுத்தும் மன நிலை மக்கள் மத்தியில் இன்று அதிகரித்துள்ளது.
ஏனெனில் ஆராய்ச்சி என்பது பரந்து விரிந்த விண்வெளி, பெரும் வாகனங்கள், ஆச்சரியம் தரும் ஆழ்கடல் அதிசயங்கள், இயற்கையின் வெளிப்பாடுகள், கடந்த கால வரலாற்றை அறியும் தொல்லியல் ஆராய்ச்சிகள் மட்டும் அல்ல; நாம் அணியும் சட்டையின் வடிவமைப்பு, காலணிகளின் வடிவமைப்பு, சமையலறைப் பொருட்களின் மேம்பட்ட வடிவங்கள், அமரும் இருக்கைகளின் வடிவங்கள் என நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே ஆராய்ச்சியின் விளைவாக பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் பயன்கள் என்பதை நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.
இப்படிப்பட்ட ஆராய்ச்சி துறை குழந்தைகளால் சிறு வயதில் விருப்பத்தில் கொள்ளப்பட்டாலும், நாளடைவில் பலரும் அந்த எண்ணங்களை மறந்து விடுகின்றனர். இதற்கு பெற்றோரும் ஒரு காரணம். ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் என்றாலே அவர்கள் சமூகக் கட்டமைப்போடு ஒட்டாமல் அமைதியாக, தன்னந்தனியே தூக்கம், தண்ணீர் இன்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் என நினைப்பது தான்.
யாரோ ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் எல்லாத் துறையிலும் இருகிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறை மாணவர்கள் ஆராய்ச்சி துறையின் தேவைகள், தங்கள் செயல்பாடுகள், தங்கள் தேவைகள் போன்றவற்றை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் தற்போது ஆராய்ச்சி துறையை தங்கள் எதிர்காலமாக தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகில் இந்தியர் இல்லாத  ஆராய்ச்சி மையங்களே இல்லை, என்று கூறும் அளவுக்கு உலகம் முழுவதும் இந்திய மாணவர்கள் சென்று ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் ஆராய்ச்சியின் தேவையை உணர்ந்து அரசும், பெரிய உற்பத்தி நிறுவனங்களும், நிறுவன மற்றும் சமூக முன்னேற்றம் நிலை பெற ஆராய்ச்சி மையங்களை ஏற்படுத்தி இத்துறைக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.
கல்வி மலர்