கல்வி என்பது கல்விக்கூடத்தில் மட்டுமல்ல, கல்வி நிலையத்தையும் கடந்து மாணவப் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் அதிகமுள்ளது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் நம்மை நிதான படுத்திக்கொள்ளவும், செயல் திறனை வளர்த்துக் கொள்ளவும் அவசியமாக இருப்பது தனித்திறன்கள்தான்.
இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையை எளிதாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனையே குறிக்கோளாக கொண்டு அதன் பாதையிலே நடை போட முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த மாணவன்/ மாணவி கல்வி பயிலும் காலத்தைக் கடந்து வேலைக்கு சென்ற பின், அந்த துறையில் தொடர்ந்து போட்டிகளை எதிர்கொண்டு, தங்களை நிலை நிறுத்திக்கொள்ள தேவை, தனித்திறனே ஆகும்.
தனித்திறன் என்பது என்ன?
நன்றாக பாடங்களை புரிந்து மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெறுவதுதான் தனித்திறனா? இல்லை. தனித்திறன் என்பது உலக அறிவை, உடல் நலனை சார்ந்த செயல்களாகும். இவை எப்படி தனித்திறனை வளர்க்கும்?
"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்ற வாக்கியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு மாணவன் என்னதான் நன்றாக படித்தாலும், அவன் உடல் நிலை நலமாக இருந்தால்தான் படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும். சிறு வயதிலேயே நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் உடல் சோர்வு போன்ற நோய்களால் அவதிப்படுகிறவர்களை நாம் காண்கிறோம். சம்பாதிக்கும் பணத்தை இப்படி நோய்க்கு செலவழித்தால் அந்த வருமானத்தால் என்ன பயன்?
படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை படிப்பது மட்டும் தான். ஆனால் வேலைக்கு சென்ற பின் பெரும் நிறுவனத்தின் பெயரை நிலை நாட்ட வேண்டும், குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கடமைகள் வரும் பொழுது அதனை வெறும் படிப்பறிவால் எதிர்கொள்ள முடியுமா?
ஒரு வங்கிக்கு சென்றால் எத்தனை பேருக்கு அதன் செயல்பாடுகள் தெரிகிறது? எத்தனை மாணவர்களுக்கு வேலைக்கான Application -ஐ நிரப்ப தெரிகிறது? இவையெல்லாம் படிப்பறிவினால் மட்டும் தெரிந்து கொள்ள முடியுமா?
வேலைப்பளுவினால் மனம் அழுத்தம் அடையும்பொழுதும், ஒரே மாதிரியான வேலையிலும் நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் நாம் கற்றுக் கொண்டோமா?
இதனை எல்லாம் அந்த நெருக்கடியான சூழ்நிலையில் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அமையுமா? ஒரு சிலருக்கு கிடைக்கலாம். ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் நிலை மேலும் சிக்கலாகத்தானே அமையும். இதனை எல்லாம் சந்தித்து வரும் பெற்றோர் தான் தங்கள் பிள்ளைகளுக்கு மாணவப் பருவத்திலேயே போதிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நல்ல உடல் நலத்துக்கு விளையாட்டும், மனம் புத்துணர்வு பெற இசையும் கலையும், சவால்களை எதிர்கொள்ள நடைமுறை நிகழ்வுகள் போன்ற தனித்திறன்களை மாணவப் பருவம் முதற்கொண்டே கற்றுக்கொண்டால் தானே எதிர்கால வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.
கல்வி மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக