சனி, 24 ஆகஸ்ட், 2013

நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்


இன்றைய இளம் தலைமுறையினரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் குறைந்து வருவதாக பெரியவர்கள் பலரும் கவலை கொள்கின்றனர். தினந்தோறும் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
சாலையில் நாம் செல்லும் பொழுது நமக்கான பாதையில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது.  நமக்கான நேரம் முடிவதற்கு இன்னும் சில நொடிகளே இருக்கிறது, நாம் சாலை சந்திப்பை கடந்து கொண்டிருக்கிறோம், அந்த நேரத்தில் எதிர்ப் பக்கம் பச்சை விளக்கு எரிவதற்கு சில நொடிகள் இருக்கிறது அதற்குள்ளாகவே அந்த பக்கத்தில் இருந்து அதிவேகத்துடன் வரும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நம்மை சற்று தடுமாற வைத்து செல்கிறது. இதனைக் கண்டு "அதற்குள் என்ன அவசரம் 2, 3 நொடிகள் காத்திருக்கக்கூட முடியாதா?" என்று நம்மில் எத்தனை பேர் அந்த நேரத்தில் கோபம் கொண்டிருப்போம். ஆனால் அதே நேரத்தில், நாம் அதே போன்று எதிர்ப்பக்கத்தில் இருந்தோம் என்றால், நம்மில் எத்தனை பேர் அந்த நேரத்தில் பச்சை விளக்கிற்காக காத்திருப்போம்? அல்லது எத்தனை பேர் பச்சை விளக்கு எரிவதற்குள்ளாக வாகனத்தை இயக்கியிருப்போம்?
காரணம் நிதானமின்மை. எதையும் உடனடியாக செய்ய வேண்டும், அவசரமாக செல்ல வேண்டும், நேரமில்லை, பல வேலைகள் இருக்கின்றன... என்பது போன்ற காரணங்கள் நம்மில் ஒவ்வொருவரிடமும் இருக்கும். சரி பெரியவர்களுக்கு பல பொறுப்புகள் இருக்கிறது அவர்களால் சில நொடிகள் கூட காத்திருக்க முடியாது என ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். படிக்கும் கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கூட பொறுமையில்லாமல் அவசரப்படுவதன் காரணம் என்ன? அவர்கள் ஏதோ அவசரமாக செல்கிறார்கள் என்று எண்ணுவதை விட, இப்பொழுதே இப்படி செல்பவர்கள் இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமாக சாலை விதிகளை மீறுவார்களே? அடுத்து வரும் தலைமுறையினரும் இவர்களைப் பின்பற்றினால் சட்டம் ஒழுங்கு எப்படி மேம்படும்? இதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும், போக்குவரத்துத் துறைக்கும் மட்டுமா இருக்கிறது? இல்லை. 
ஒரு பிரச்சனையை அப்பொழுது சரி செய்வதை விட, இனி அது போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கான சரியான தீர்வை கண்டுபிடிப்பது தான் மிகச்சரியாக இருக்க முடியும். சரியான தீர்வு என்பது, அந்த பிரச்சனைக்கான மூல காரணம் என்ன என்று கண்டுகொள்வதாகும். மேற்கண்ட பிரச்சனையை மட்டுமல்ல பல ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்தோம் என்றால் அது பெற்றோர், பள்ளி, ஆசிரியர், பாடங்கள் என்று விரிவாக செல்லும். நிதானமின்மைக்கும், அவசரத்திற்கும், திட்டமிடல் இல்லாததற்கும் எப்படி பள்ளிக்கூடமும், ஆசிரியர்களும் பெற்றோரும் காரணமாக இருக்க முடியும்?
நமது கல்வி அமைப்பு, நமது வாழ்க்கைக்கான கல்வியை எந்த அளவுக்கு சொல்லித் தருகிறது என்பது கேள்விக்குறியே. நமது கல்விக்கூடங்களில் ஒரு சில அறிவுறுத்தல்களை நாம் பெற்றுக்கொண்டாலும் அதற்கடுத்து நாம் வேலை பார்க்கும் இடங்களிலோ, வேலை தவிர்த்து வாழ்க்கைக் கல்வியை கற்றுத்தரும் வகையில் எந்தவித செயல்பாடும் இருப்பதில்லை. அப்படியென்றால் இதை கற்றுக்கொடுக்கவேண்டியது யார் பொறுப்பு? இதற்கான பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் இருக்கிறது அல்லவா.
எத்தனையோ ஆசிரியர்கள் பாட வேளையின் கடைசி 5 நிமிடங்களையோ, 10 நிமிடங்களையோ பொது அறிவுக்கெனவும், தனித்திறனுக்கெனவும் ஒதுக்கி மாணவர்கள் அறிவை வளர்ப்பதற்கு உதவி வருகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்கள் அமையாதவர்கள், கற்றுக்கொள்வதில் இழப்பை சந்திக்கிறார்கள். புதிய புதிய பாடங்களை கற்றுத்தரும் பல மெட்ரிக் பள்ளிகளும் வாழ்க்கைக்கல்விக்கான பாடங்களை கற்றுத்தருவது குறித்து சிந்திப்பதில்லை. செல்லம் கொடுத்து வளர்க்கும் பெற்றோரும் பொது ஒழுக்கங்களை தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதில் போதிய அக்கறை காட்டுவதில்லை.
என்ன கற்றுக்கொடுத்தாலும். நாம் கற்ற பல விஷயங்களை, பாடங்களை அந்தந்த வகுப்பை கடந்தவுடனேயே மறந்து விடுகிறோம். ஏனென்றால் மனித இயல்பின் படி, நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. இந்த நினைவூட்டல் நமக்கு வாழ்க்கை முழுவதுமே தேவைப்படுகிறது. ஆசிரியர், பெற்றோர், நண்பர்கள், வேலை தரும் நிறுவனம் என ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு காலக்கட்டத்தில்   நினைவூட்டுவதற்கான கடமையும் பொறுப்பும் இருக்கிறது. இது எனக்கான வேலை இல்லை என ஒதுங்குவதும், ஒதுக்குவதும் நல்ல குடிமகன் உருவாவதற்கான வாய்ப்பை தடுப்பதற்கான குற்றத்திற்கு நம்மை பொறுப்பாக்கும்.
எனவே, வகுப்பில் பாடங்களை கற்றுத்தரும் வேளையில், ஒரு சில நிமிடங்களை சாலைப் போக்குவரத்து, பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், சாலையில் செல்லும் ஓவ்வொரு நொடியிலும் தேவைப்படும் பாதுகாப்பு, கவனம் குறித்த தகவல்களையும், பயணங்கள் நமக்கு கற்றுத்தரும் பாடங்களையும், வேகத்தை விட பயணத்தின் நோக்கம் பெரிது போன்ற போக்குவரத்து சார்ந்த அறிவையும், ஒழுக்க நடவடிக்கைகளையும் கற்றுக்கொடுக்க ஆசிரியப் பெருமக்கள் முன் வர வேண்டும்.
மிதிவண்டியோ, மோட்டார் சைக்கிளோ எதுவானாலும் வாகனம் வாங்கி கொடுப்பதோடு தன் கடமை முடிந்து விட்டது என இருந்துவிடாமல் நல் ஆலோசனைகளை தொடர்ந்து பிள்ளைகளுக்கு நினைவுபடுத்தவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும் இருக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களை இளம் வயதில் கற்றுக்கொண்டால்தான் அவை நம் எதிர்கால வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக அமையும்.
கல்வி மலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக