வியாழன், 28 நவம்பர், 2013

வளர்ச்சிக்கு உரமாகும் அரை மணி நேரம்...


பொருளாதாரத் தேவைகள் அதிகமாகிவிட்ட நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றாகிவிட்டது. பொருளாதாரப் போட்டிகளோடு பயணிக்கும் வாழ்க்கையில், நகரப் பயணம் அதிகமான நேரத்தை விழுங்கிவிடுகிறது.
வேலைச் சோர்வும், பயணக் களைப்பும் ஒன்று சேர்ந்துவிடுவதால், வீட்டிற்கு வந்தவுடன் உணவருந்தி தூங்குவதையே உடல் விரும்புகிறது. உணவிற்கும், தூக்கத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே குழந்தைகளை கவனிக்க முடிகிற்து.
காலை நேர பரபரப்பு அலுவலகத்திற்கும், பள்ளிக்கூடத்திற்கு கிளம்புவதற்கும் மட்டுமே பயன்படுகிறது. இரவு நேரம் ஒரு சில வார்த்தைகளோடு முடிந்துவிடுகிறது. பல பெற்றோர்  தங்கள் குழந்தைகள் தாமாகவே படிக்கும் அறிவு பெற்றவர் என்று எண்ணிவிடுகிறார்கள். ஒரு சிலர் தங்கள் பிள்ளைகள் பயிற்சி வகுப்புகளில் சிறப்பாக  பாடம் படித்துவிடுவார்கள் என்று நிம்மதி அடைந்துவிடுகின்றனர். பெற்றோர்கள் பலரது நிலையும் என்னவென்றால் பிள்ளைகளுக்கு படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே பிரச்சனைகள் இருக்கும், அந்த பிரச்சனைகளை பள்ளிக்கூடங்களும், பயிற்சி நிலையங்களும் தீர்த்து விடும் என்று நினைப்பதுதான்.
தொலைக்காட்சி பார்ப்பதன் மூலமும், தவறான நண்பர்கள் நட்பின் மூலமும் வீணாக பொழுதை கழிக்கும் மாணவர்களுடைய எண்ணங்கள் எப்படி இருக்கிறது என்றால், பெற்றோர் தங்கள் செலவுக்கு பணம் கொடுத்தால் மட்டும் போதும் வேறு எதை பற்றியும் கேள்வி கேட்கக்கூடாது என்றே நினைக்கின்றனர். தொழில்நுட்ப அறிவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தாக்கமும், பிள்ளைகளின் மனதில் தங்கள் பெற்றோருக்கு தற்போதைய சூழ்நிலைகள் பற்றிய புரிந்துணர்வு இருப்பதில்லை, அவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை, அந்த காலத்திலேயே இருக்கிறார்கள் என்ற  மனநிலையை ஏற்படுத்தி கோபத்தை உருவாக்கி விடுகிறது.
 
இதற்கான தீர்வு என்ன? நேரமில்லை என்பதைவிட அரை மணிநேரம் கிடைத்தால் கூட குழந்தைகளோடு அவர்கள் படிப்பினை கடந்து, அவர்கள் நட்பு வட்டம், விருப்பம், இலட்சியம், திட்டம், பள்ளிக்கூடத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள், பயிற்சி நிலையங்கள் குறித்த குறைகள், பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிள்ளைகளின் வளர்ச்சிகள் குறித்த தங்களின் பெருமை, சந்தோசம் போன்றவறை நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டாலே போதும். அந்த அரை மணி நேரம் பிள்ளைக்ளின் 24 மணி நேர உற்சாகத்திற்கு நிச்சயமாக உரமாக அமையக்கூடும்.

பெற்றோர் இரு பக்கங்களிலும் உள்ள குறைகள், நிறைகளை ஆராய்ந்து தீர்வை கண்டுகொள்வதில் ஆர்வம் செலுத்தினால்தான் இன்றைய இளைய சமுதாயம் எதிர்காலத்தில் பன்முக வளர்ச்சி கொண்ட கட்டமைப்பான குடும்ப அமைப்பில் சிறந்து விளங்கும்.
கல்வி மலர் 

ஞாயிறு, 24 நவம்பர், 2013

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?


வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. தான் நினைக்கும் எண்ணங்களை தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும் பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம் மகிழ்ச்சியான தருணங்களிலும், விளையாட்டுகளிலும் அதிகமாக ஈடுபடுவதும் மாணவப்பருவத்திலேதான்.
பகைமையை எளிதாக மறப்பதும், பாசத்தை உருவாக்குவதுமான சூழ்நிலைகள் அதிகமாக ஏற்படுவதும் மாணவப்பருவத்திலேதான். தன்னுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதாகக் கருதும் இரண்டு கட்டங்களான பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றை காண்பதும் மாணவப் பருவத்திலேதான். இப்படிப்பட்ட அருமையான மாணவப்பருவத்தை எந்த அளவுக்கு நாம் ரசித்து வாழ வேண்டும். ஆனால் ரசிக்கும்படியாகவா இருக்கிறது பள்ளிப்பருவம்?
தமிழ்ப் பள்ளிக்கூடங்களை விட, ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களுக்கு அதிகம் மன நெருக்கடிகள் ஏற்படுகிறது. ஏனெனில் தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களைவிட ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் தவிர்த்து, கூடுதலான பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது. அது போக பெற்றோரும் போதாக்குறைக்கு பள்ளி விட்டு வந்தவுடன், பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புகின்றனர். பிள்ளைகளும், பெற்றோரும் சந்திக்கும் வேளைகள் குறைந்து விடுகின்றது.
சனி, ஞாயிறுகளிலும் செல்லக்கூடிய சிறப்பு வகுப்புகள் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து மட்டுமல்லாது, உறவினர்களிடம் இருந்தும் தள்ளி வைத்து விடுகின்றது. அது தவிர்த்து முக்கியமான விசேஷ நாட்களில் விடுமுறை எடுப்பதற்கும் பள்ளி நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை.
சில பண்டிகைகளின் போது அந்த குறிப்பிட்ட மதத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கிறார்கள். பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களும், கல்வி நிலையத்தை நடத்தும் கல்விமான்களும் கல்வியை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த நடைமுறைகளே சாட்சி. பண்டிகைகள் என்பதே கொண்டாடும் சமூகத்தவர் பிற சமூகத்தினருடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், சமத்துவத்தை பேணுவதற்கும் உதவுவதுமாகும். அப்படிப்பட்ட நாட்களில் மாணவப் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகளின் மன நிலையை எண்ணிப் பாருங்கள்.
பல திறமைகளை வெளிப்படுத்தும் வயதில், சிறிது கூட ஒய்வின்றி ஒரே பாடங்களை மட்டும் கற்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வீட்டில் யாரேனும் கடைக்கு போகச்சொன்னாலும், அவன் பிளஸ் 2 படிக்கிறான் அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என பதில் கிடைக்கும். உறவினர்களின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால்தானே அவர்களுக்கும் யார் உறவினர்கள் என்று தெரியும்.
பள்ளிக்கூடங்களும், பயிற்சி வகுப்புகளும் மட்டுமே பாடம் படிக்கும் இடங்கள் அல்ல. இது போன்ற உறவினர் வீடுகளும், மகிழ்ச்சியும் துக்கமுமான சம்பவங்கள் கூட வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுத்தரும் சிறப்புவாய்ந்த இடங்கள் அல்லவா. யார் உறவினர்கள் என்றே தெரியாமல் இந்தத் தலைமுறை வளர்வதற்கு பயிற்சி வகுப்புகளும், அதனை மறைமுகமாக ஊக்குவிக்கும் பள்ளிக்கூடங்களும் மட்டுமே காரணம்.
படிக்கும் நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறைகள் கிடைப்பதில்லை என்றால் படிப்பு முடிந்தவுடன் வரக்கூடிய ஏப்ரல், மே விடுமுறைகளிலும் கூட மாணவர்களின் மகிழ்ச்சி பறிபோகிறது என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். விடுமுறைக் காலங்கள் ஓய்வு காலம் மட்டுமல்ல, பல நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு, உறவினர் வீடுகளுக்கு சென்று உறவைப் புதுப்பித்தல், புதிய ஊர்களுக்கு சுற்றுலா சென்று அந்த ஊர்களையும், மனிதர்களையும் கண்டுகொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் வெகுமதியான காலங்கள் அவை. அப்படிப்பட்ட நாட்களின் சுவையை அறிய முடியாத வகையில் பள்ளிக்கூடங்கள் மாணவர்களை கட்டிப்போட்டுவிடுகின்றன.
ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்களின் நிலையும், பதினொன்றாம் வகுப்பு முடித்த மாணவர்களின் நிலையும், இன்று ஐ.ஏ.எஸ்.க்கு தயாராகுபவர்களை விடவும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களின் பணியை விட கடுமையான ஒன்றாக பார்க்கும் மனோநிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
இப்படி மாணவர்களின் மனதை வளப்படுத்த வேண்டிய பள்ளிகள், நஞ்சை விளைவிக்கும் வகையில் செயல்படுவது எதிர்கால சமுதாயத்திற்கு நல்லதா? பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும், நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதை மட்டும் விரும்புகிறார்களா? அல்லது சமுதாய அக்கறை உள்ள நல்ல குடிமகனாக, இயற்கையை, மனிதனை, மொழியை நேசிப்பவானாகவும், அன்பும் பண்பும் மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்குபவனாகவும் வளர வேண்டும் என விரும்புகிறார்களா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பள்ளிக்கூடங்களும், தங்கள் மாணவர்கள் வருமானம் ஈட்டக்கூடிய இயந்திரங்களாக உருவாக வேண்டுமா? தலைமுறைகளை கடந்தும் பயன்படக்கூடிய நற்குணங்களை உடைய மண்ணின் மைந்தர்களாக, பண்பாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரமிது.
கல்வி மலர் 

சுயமாக தொழில் தொடங்குங்கள் பட்டதாரிகளே...


தமிழகக் கல்விக்கூடங்களிலிருந்து ஆண்டுதோறும் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் படித்து வெளியேறுகின்றனர். இன்றைக்கு இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையில், பெரும்பான்மையானவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையை பெற முடிவதில்லை, அதே போன்று பலருக்கும் வேலையும் கிடைப்பதில்லை, என்பதே உண்மை.
அப்படிப்பட்ட நிலையில் சுயமாக தொழில் தொடங்க சரியான ஆலோசனையும், வழிகாட்டுதலும் இன்றி பலரும் தவிக்கின்றனர். அவர்கள் சுருக்கமாக தெரிந்துகொள்ளும் வகையில் சில கருத்துக்களை காணலாம்.
 
துறை
 
நமக்கு பிடித்தத் துறை எதுவோ அந்தத் துறை நமக்கு எளிதானதாக இருக்கும். அனுபவம் இருப்பது அவசியம் என்றாலும், சரியான திட்டமிடுதல்களோடு, துறை சார்ந்த நிபுணர்களின் அனுபவ அறிவைக்கொண்டு செயல் திட்டங்களை வகுத்தால் அனுபவம் இல்லையென்றாலும் சாதிக்க முடியும். பொருள் உற்பத்தித்துறையோ, மனித வளத்துறையோ எதுவாக இருந்தாலும் தற்போதைய தேவைப்பாடு, கடந்த கால வளர்ச்சி, எதிர்கால வளர்ச்சி, அந்தத்துறை குறித்த அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.
 
அவை நமக்கு முழு திருப்தி அளித்தவுடன் மட்டுமே களத்தில் இறங்க வேண்டும். எங்கே இருந்து ஆரம்பிப்பது, எப்படி நம்மை வெளிப்படுத்துவது என்பதில் தெளிவான பார்வை இருப்பது அவசியம்.
 
அளவு

தொழில் நிறுவனங்களை ஆரம்ப கட்டத்தில் இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை சிறிய நிறுவனம், பெரிய நிறுவனம் என்பன ஆகும். நம்மிடம் இருக்கும் முதலீட்டைப் பொறுத்து நாம் ஆரம்பிக்கும் நிறுவனத்தின் அளவும் மாறுபடும். பெரிய அனுபவமின்றி ஒரு தொழிலை அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்பிக்கும்பொழுது பொருளாதார வசதி அதிகம் இருந்தாலும், சிறு நிறுவனமாக ஆரம்பிப்பது நல்லது. ஏனென்றால், அறிக்கைகளை விட நடை முறை வேலை சற்று கடினமாக இருக்கலாம். மன ரீதியில் நாம் அதற்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம்? என்பதைப் பொறுத்து தான் நமது உற்சாகம் இருக்கும்.
 
பெரிய நிறுவனமாக ஆரம்பிக்கும்பொழுது, வேலைப்பளு, கண்காணிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மற்றும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகிக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் போன்றவற்றை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோமா? என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானித்துக்கொள்வது நல்லது.
 
சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கும்பொழுது நிறுவனம் முழுவதும் நமது கட்டுப்பாட்டிலேயே இருக்கும். சந்திக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் நிர்வாக அமைப்பை மாற்றுவது எளிதானதாக இருக்கும்.  பொருளாதாரத் தேவைகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஒரு வேளை நிறுவனம் வெற்றிகரமாக இயங்காமல் போனாலும், இழப்பு குறைவானதாக இருக்கும். 
 
இயக்கம்
 
பெரிய நிறுவனங்களில் பல தடைகள் இருக்கும். குறிப்பிட்ட எல்லையைக் கடந்து செயல்பட முடியாது. நாம் அனைத்துத் துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கான நேரம் கிடைக்காது. ஆனால் சிறு நிறுவனங்களில் அந்தத் தடைகள் இருக்காது. எந்த எல்லை வரை சென்றும், எல்லா விதமான வேலைகளையும் செய்யலாம். அதில் நமக்கு ஆர்வம் இருக்கிறதா? என்பதுதான் முக்கியம்.
 
அவ்வவ்பொழுது தொழில் ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஏற்கனவே தொழில் செய்தவர்கள், அனுபவ சாலிகள் போன்றவர்களிடம் ஆலோசனை பெறுவது தொழில் நிறுவனத்தின் இயக்கம் தடைபடாமல் இருக்க உதவும். நாம் மட்டும் எடுக்கும் முடிவுகள் எப்பொழுதும் சரியானதாக இருக்காது. வேறு கோணங்களில் சிந்தித்து திட்டங்களை தீட்டுவதற்கு, சரியான நபர்களின் ஆலோசனைகள் மட்டுமே உதவியாக இருக்கும். அதுவும் குறிப்பாக தொழிலே தெரியாதவர்களிடமெல்லம் ஆலோசனைகள் கேட்பது, முடிவெடுக்க முடியாத சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும்.
 
கட்டமைப்பு
 
நிறுவனங்களைப் பொறுத்தவரை நிர்வாகம் என்பது இன்றைக்கு எளிதானதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழைய காலங்களைப் போன்று பல்வேறு கட்ட நிலைகளைக் கடந்து முடிவெடுக்கப்படும் நிலை பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் ஆன் லைன் முறையிலேயே கோரிக்கைகள், செயல் திட்டங்கள், அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே உள்ள நிறுவனங்களை ஆராய்ந்து, அவை எந்த மாதிரியான நிறுவனம், எப்படி செயல்படுகிறது, நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டிகள், அதற்காக அந்த நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள், என பல கோணங்களில் சிந்தித்து, அதற்கேற்ற வகையில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். 
 
குறிப்பிட்ட ஒரு வேலைக்கு, ஒரு தனி நபரை மட்டும் சார்ந்திருக்காதவாறு நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் திடீரென்று ஒரு நபர் வேலையை விட்டு நின்றாலும், நிறுவன வேலைகள் தடைபடாமல் தொடர்ந்து இயங்கும்.
 
கலாச்சாரம்
 
நிறுவனத்தின் கலாச்சாரம் எப்படி இருக்கிறதோ, அதற்கேற்றவாறு வேலை புரிவோரின் மனநிலையும் இருக்கும். எந்த மாதிரியான நிறுவனமாக இருந்தாலும், அந்தந்த நிறுவனத்திற்கு ஏற்றவாறு வேலையும் இருக்கும். நமது நிறுவனம் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து செயல்படக்கூடிய நிறுவனமா? அல்லது விரைவாக வேலைகளை முடிக்கும் வகையைச் சேர்ந்த நிறுவனமா? என்பதைப் பொறுத்து அலுவலக நடைமுறைகளை அமைத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். அதுபோன்று உடலுழைப்பை கொடுத்து உழைக்கும் நிறுவனத்திற்கும், சிந்தனைத்திறனை மட்டும் கொடுத்து வேலை செய்யும் நிறுவனத்திற்கும் ஏற்ப ஊழியர்களின் மன நிலையும் அமையும்.
 
            தொழில் ஆரம்பிக்கும் புதிதில் கடின உழைப்பு தேவைப்படும். அந்த நேரத்தில் சுதந்திரமான அணுகுமுறை பொருளாதார ரீதியாக பாதிப்பை உண்டாக்கலாம். எனவே ஆரம்பத்தில் உழைக்கும் ஊழியர்களிடம், எதிர்காலத்தில் நிறுவனம் வளர்ச்சியை காணும்பொழுது,  குறிப்பிட்ட சலுகைகள், அலுவலக கலாச்சாரம் ஆகியவை மாற்றி அமைக்கப்படும் என உறுதிமொழி கூறலாம்.
 
பாதுகாப்பு
 
தொழிலில் பாதுகாப்பு என்பது நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாப்பது மட்டுமல்ல நிறுவனத்தையே பாதுகாப்பதாகும். நிறுவனம் என்பது அலுவலகச் சொத்துக்கள், வேலை பார்ப்போர், பொருளாதாரம், திட்டங்கள், தொழில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், என நிறுவனம் சார்ந்த அனைத்தையும் பாதுகாத்து வழி நடத்த வேண்டும். ஏதேனும் ஒன்றை இழந்தாலும் அது தொழிலின் வளர்ச்சி தடைபட வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு பிரிவையும், ஒரு துறையாக நினைத்து செயல்பட வேண்டியது அவசியம்.
 
நிறுவனம் சற்று தளர்ச்சியையோ, வளர்ச்சி குறைவையோ சந்திக்கும்பொழுது வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பிரச்சனைகள் எழலாம். எனவே அதற்கேற்றவாறு பண இருப்பு அவசியம். தொழில் ஆரம்பிக்கும்பொழுதே  ஒரு குறிப்பிட்டத் தொகையை தனியாக வங்கியில் இருப்பு வைப்பது, தொடர்ச்சியான தொய்வில்லா நிர்வாகத்திற்கு வசதியாக இருக்கும்.
 
எதிர்காலம்
 
வளர்ச்சி அடையும் நிறுவனத்திற்கு, எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை இருப்பது அவசியம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி சக பணியாளர்களிடம் விவாதித்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். சிறிய நிறுவனம் தானே, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என் தள்ளிப்போடுவது வளர்ச்சிக்கு பாதகமாக அமையும். மாதத்திற்கு ஒருமுறையேனும் பணியாளர்களின் கருத்துக்களை வெளிப்படையாக அறிவது நல்லது. வளர்ச்சியினால் வரும் பொருளாதாரம் அனைத்தையும், செலவுக்கு மட்டுமே பயன்படுத்துவதும் கூடாது. எதிர்கால செயல்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வரவேண்டும். அப்படி செய்தால்தான் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான பணத்தேவையை எளிதாக சந்திக்க முடியும்.
 
உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையோடும், நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து சரியான திட்டமிடுதல்களோடு செயல்பட்டால் வெற்றியும், வளர்ச்சியும் நமதாகும்.

கல்வி மலர் 

செவ்வாய், 19 நவம்பர், 2013

தலைமைப் பண்பு


தலைமைப் பண்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. பலரும் நினைப்பது போன்று அது பெரும் நிர்வாகிக்கும், தலைவருக்கும் உரியது மட்டுமல்ல. ஏனெனில் தலைமைப் பண்பை முடிவெடுப்பது, செயல்படுத்துவது என்ற கோணத்தில் பார்க்கலாம்.
ஒரு குழந்தை வளர்கிறது, படிக்கும்பொழுது இந்தப்படிப்பு தனக்கு சரி வரும் என்று படிப்பை தேர்ந்தெடுக்கிறது, பள்ளிப் படிப்பிற்கு பின் எதிர்காலம் குறிப்பிட்ட துறையில் தான் இருக்க வேண்டும் என தனக்கான எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கிறான், தனக்கான வேலையை கண்டுபிடிக்கின்றான், துணையை தேர்ந்தெடுத்தவுடன், இந்த உலகம் அவனுக்கு குடும்பத்தலைவன்/ தலைவி என்ற பட்டத்தை வழங்குகிறது, தனது குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் பொறுப்புள்ளவனாகிறான். சமூகத்திற்கு தேவையானவற்றை பிறரோடு இணைந்து கேட்டுப்பெறும் அக்கறையுள்ளவனாகிறான்.
இப்படி பல பொறுப்புகளை ஒவ்வொரு மனிதனும் கடந்து வரும்பொழுது, நமக்கு, நம்மோடு உள்ளவர்களுக்கு நல்வழி காட்டும் பொறுப்பும், பின்னால் வருகிறவர்களுக்கு சரியான வழியை காட்டும் வழிகாட்டியாகவும் இருக்ககூடிய நம் அனைவருக்கும் தலைமைப்பண்பு அவசியமானதாகிறது. அப்படிப்பட்ட தலைமைப் பண்பை வளர்ப்பதற்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
தலைமைப் பண்பு என்றவுடன், அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதே நேரம் தலைமைப் பண்புகள் சிறந்து விளங்கும் நபர் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வை அடைகிறார். தலைமைப் பண்பை வளைர்க்காமல் தலைமைப் பொறுப்பை அடைந்த ஒரு சிலரும் அந்தத் திறனை  மெருகேற்றாததன் விளைவாக நிர்வாகத்தில் தோல்வியை சந்திக்கின்றனர். அப்படிப்பட்ட அவசியமான தலைமைப் பண்பிற்கு தேவையான தகுதிகள் என்ன?
 
தொடர்ந்து செயல்படுங்கள்

இந்த உலகத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருத்தல் அவசியமாக இருக்கிறது. புதுப்புது தொழில்நுட்பங்களும், தொழில்முறைகளும், துறை சார்ந்த உட்பிரிவுகளும் தொடர்ந்து அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. நாம் அவை பற்றி அக்கறை கொள்ளாமல் இருந்தால், நாம் பின் தங்கியவர்களாகி விடுவோம்.

எனவே ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளுதல் என்பது அவசியமானதாகி விடுகிறது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தன்னுடன் இணைந்து பணியாற்றும் சக ஊழியர்கள் சோர்வின்றியும், கால விரயமின்றியும் வேலைத்திட்டங்களை விரைவாகவும், பிழைகளின்றியும் முடிப்பதற்கு அவ்வவ்பொழுது வரக்கூடிய எளிதான முறைகளை அறிந்து, அதனை பிற ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து வேலைகளை முடிக்கவேண்டும்.
சக ஊழியர்கள், தொடர்ச்சியான செயல்பாட்டினால் சலிப்படைவது வெற்றிக்கான பயணம் மெதுவாக செல்வதற்கு வழி வகுக்கும். எனவே அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அலுவலக நடைமுறைகள் எளிதானதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டுமென்றால் நாம் அவற்றை அறிந்திருக்க வேண்டும்.
ஆகையால் நாம் உயர் பதவியில் இருக்கிறோம் என்பதற்காக முடிவுகள் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் செயல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எந்த அளவுக்கு நம்மிடம் தகவல்கள் இருக்கிறதோ, அதற்கேற்ற வகையில்தான் நமது செயல்படுதலின் வேகமும் இருக்கும். எனவே தலைமைப் பொறுப்பை விரும்புபவர்கள் பலதரப்பட்ட செய்திகளையும் அறிந்து, அதில் தெளிந்து புதிய அறிமுகங்களை தொடர்ந்து செயல்படுத்துவது தலைமைப் பண்பின் அடையாளம்.
 
கண்டுபிடியுங்கள்

            
ஒவ்வொருவரிடமும் தனித்திறமை இருக்கும். ஒரு நபர் செய்யும் வேலைக்கும், அவரிடம் உள்ள திறமைக்கும் சம்பந்தமிருக்காது. குறிப்பிட்ட நபரிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து, அதனை தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என  ஆராய வேண்டும். நிறுவனத்தின் தனிப்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது முக்கியமான நெருக்கடி காலகட்டங்களிலோ அவர்களின் தேவைகள் பயன்படும். அதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் தேவைகள் என்ன? அவை வெளியில் இருந்து கொண்டு வரப்பட வேண்டுமா? அல்லது நம்மிடமே இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். தான் மட்டுமே சிந்திக்காமல், நிறுவனத்தின் பல மட்ட தொழிலாளர்களின் சிந்தனைத்திறனையும் அக்கறையோடு கண்டுகொள்ள முயற்சிக்க வேண்டும்.
புதிய வேகத்தில் செல்ல சரியான இலக்குகளை கண்டுகொள்ள வேண்டும். பொருள் உற்பத்தித்துறையாக இருந்தால், பொருளின் வடிவமைப்பு, உபயோகத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என ஆராயலாம். நிர்வாகத்துறையாக இருந்தால் எந்த வேலைக்கு எந்த நபரை தேர்ந்தெடுக்கலாம் என தீர்மானிக்கலாம்.
  
வெற்றி


ஒரு பெரிய பொறுப்பு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்த பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகத்தானே தவிர, தோல்வி அடையச் செய்து நிலைகுலைய செய்வதற்காக அல்ல. பெரும் மனித வளமும், பொருளாதார காரணிகளும் நம்மை, நம் முடிவுகளை வைத்தே இயங்குகிறது என்பதை, நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளின் போதும் உணர்ந்திருக்க வேண்டும். தோல்வியை எவரும் விரும்புவதுமில்லை, அதுவும் தனி மனித தோல்வியை விட நிர்வாகத்தின் தோல்வி என்பது, வேலை பார்க்கும் நபர்கள், நிறுவனத்தின் கட்டமைப்பு, பொருளாதார நிலை, எதிர்கால இலக்குகள் என முழு நிறுவனத்தையும் காயப்படுத்திவிடும்.
முடிவெடுப்பது என்பது ஒரு நொடியில் எடுப்பது அல்ல. நீண்ட ஆய்வு, சரியான திட்டமிடல், தொலைநோக்கு பார்வை, தேவைகள், நிதி நிலைமை,  பயன்கள், விளைவுகள், பிரச்சனைகள் என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வெற்றியை விட தோல்விக்குத்தான் நாம் அதிகம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பது தான் உண்மை. தோல்வி எளிது. வெற்றி கடினம். வெற்றிதான் நமக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். வெற்றியைத்தான் நம்மிடம் நிறுவனமும் எதிர்பார்க்கிறது. தயக்கத்தை விட, தன்னம்பிக்கையோடு முடிவெடுத்தால், நாம் தோல்வி அடைந்தாலும், நம்மை திரும்பவும் எழச்செய்வதற்கான உற்சாகத்தைத் தரும்.
 
பொறுப்புகளைப் பெறுங்கள்


தொடர்ச்சியான பயிற்சியும், கற்றலும், அனுபவங்களின் மூலம் தெரிந்து கொண்டதும், தன்னம்பிக்கையும் எல்லாவற்றிற்கும் மேலாக பொறுப்பேற்றலும் நம்மை தலைமைக்குரிய பாதையில் பயணிக்கச் செய்யக்கூடிய காரணிகள். படிக்கும் காலத்திலேயே பள்ளி, கல்லூரி மற்றும் சமுதாய அளவில் சிறு சிறு பொறுப்புகளைப் பெற்று செயல்பட ஆரம்பித்தோமானால், வேலைக்குச் செல்லும் பொழுது நம்மிடம் தயக்கம் இருக்காது, அதற்கு பதில் சாதிக்கத் துடிக்கும் உற்சாகம்  இருக்கும்.
கல்வி மலர் 

ஞாயிறு, 17 நவம்பர், 2013

எண்ணங்கள் தெளிவானால், வாழ்வினில் வெற்றி வசமாகும்


மனிதன் தனிமையிலே எதை சிந்திக்கிறானோ அது தான் அவன் குணமாக இருக்கும் என்பது மனோதத்துவ இயலாளர்களின் கருத்து. படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என ஒவ்வோருவரும் தாங்கள் சிந்திக்கும் விதத்தாலேதான் வெற்றி அடைகிறார்கள்.
மனிதன் தன் வாழ்வில் லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறான். மனிதனின் சிந்தனை இடத்திற்கு தகுந்தவாறும், வயதிற்கு ஏற்றவாறும் மாறுகிறது. சிந்தனைகள் பெரும்பாலும் இப்படி நடந்தால்? அல்லது இப்படி நடக்க வேண்டும் என்பன போன்றதாகவே இருக்கிறது.
சிறுவன் சிந்தனை செய்யும்பொழுது அவனுக்கு உலகம் தெரிவதில்லை, பல விஷயங்களும் புரிவதில்லை, ஆகையால் சிறுவனின் சிந்தனைகளானது கற்பனைக்கு எட்டாத ஒன்றை மையமாக வைத்து பறந்து விரிகிறது.
ஒரு பதின் பருவ மாணவன் சிந்திக்கும்பொழுது, அவன் தனது படிப்பு, தான் நாயகனாக நினைக்கும் மனிதர், தனது லட்சியக் கனவு என தான் படித்த பாடங்கள், கதைகள், திரைப்படங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சிந்தனைகளை விரிவுபடுத்துகிறான்.
பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் ஒருவன் கல்வி குறித்த குழப்பங்களுடனும், தன்னால் எதையும் சாதிக்க முடியும் அதீத தன்னம்பிக்கையுடனான எண்ணங்களைக் கொண்டு அவனது சிந்தனைகள் அமைகிறது.
கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞனுக்கு வேலை வாய்ப்பு, எதிர்காலம் என பயம் நிறைந்த சிந்தனைகளும், தன்னைச் சார்ந்தவர்கள், தனது பொறுப்புகள் குறித்த கவலைகளே அவன் சிந்தனையில் வெளிப்படுகிறது.
இது போன்ற சிந்தனைகள் ஒரு சாதாரண மனிதன் சிந்திப்பதாகும். ஆனால், இது போன்ற சிந்தனைகளை தவிர்த்து மாறுபட்டு சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை முக்கியமாக இரு வகைப்படுத்தலாம். முதல் வகையைச் சார்ந்தவர்கள் சாதனையாளர்களாகவும், இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களுமாக மாறுகிறார்கள்.
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து குறுக்கு வழியில் வெற்றியை அடைய வேண்டும், பலனை பெற வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இது போன்றவர்களின் எண்ணங்கள் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களின் முன்னேற்றத்தையும் விரைவாக, அதே நேரம் பிறர் பாதிப்படைந்தாலும் பரவாயில்லை எனும் நோக்கத்தோடு சிந்தித்து அடைய முயற்சி செய்வதாக இருக்கும்.
இப்படி சிந்திப்பவர்களால் தான் சமூகக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. மற்றொன்று, இது போன்றவர்கள் தங்கள் எண்ணங்களால் விளைந்த சம்பவங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பெரும்பாலும் சிந்திப்பதில்லை.
இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் பொது நலன், தான் என்ன சாதிக்கலாம், தனது லட்சியங்கள், இவற்ரை அடைந்தால் அடையும் நிலை என அனைத்து விதமான செயல்பாடுகள் குறித்தும் சிந்திக்கின்றனர். இவர்கள் சமுகத்தின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குகின்றனர்.
இன்னும் பல வகைகள் இருக்கின்றன. அவை சிறு சிறு கிளைகளாக பறந்து விரியும். நமக்கு மிகவும் முக்கியமானது சிந்தனைகள் நல்லவிதமாக இருக்க வேண்டும், அதன் பயனாய் நன்மைகள் நிறைவாக கிடைக்க வேண்டும் என்பதுதான். பள்ளி, கல்லூரி மாணவர்களை எடுத்துக்கொண்டால் தங்கள் சிந்தனைகளை கட்டுப்பாட்டில் வைக்காததாலேயே, வகுப்பில் கவனத்தை சிதறவிடுகின்றனர்.
பாடம் படிக்கும்பொழுது எண்ணங்களை அலைபாய விடுவதனால் பாடத்தை படிக்க முடியாத சூழ்நிலைக்கும், நினைவில் வைக்க முடியாத நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். வீணான எண்ணங்களால் பொழுதுகள் கடந்து போகுமே தவிர, தேவையான செயல்பாடுகள் நடைபெறாது.
எண்ணங்களை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு முதலில் நமக்கு தற்போது எது தேவை? எதிர்காலத்திற்கு என்ன தேவை? அவசரமும், அவசியமுமானது என்ன? என முதலில் கண்டு கொள்ளுங்கள். தேவை இல்லாத சிந்தனைகளால் அப்போதைக்கு நன்றாக இருப்பது போன்று தோன்றினாலும், பெரும் மதிப்புள்ள காலத்தை வீணாக்கிதான் தேவை இல்லாத சிந்தனைகள் தன்னை ஆக்கிரமிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
தங்களின் தற்போதைய தேவை பாடம் படிப்பது என்றால், பாடத்தை எப்படி படிப்பது என்று மட்டுமே சிந்தியுங்கள், வகுப்பில் இருந்தால் எதைப்பற்றிய சிந்தனைகளும் தேவையில்லை என்பதை உணர்ந்து, பாடத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினையுங்கள். தொடர்ந்து நினைக்க, நினைக்க அச்சிந்தனைகள் உங்களில் வலுப்படுத்தப்பட்டு உங்களை படிப்பின் மேல் ஈடுபாடு உள்ளவராக மாற்றும்.
தங்கள் சிந்தனைகளால் ஏதேனும் செயல்பாடு நடக்குமா? நடந்தால் அது நல்ல பயன்களை உருவாக்குமா? அல்லது காலத்தை வீணாக்குமா? என உங்களுக்குள்ளேயே கேள்விகள் கேட்டு சிந்தனையில் தெளிவு கண்டு வாழ்க்கையில் வெற்றி காணுங்கள்.
கல்வி மலர் 

சனி, 16 நவம்பர், 2013

வெளிநாட்டுக் கல்வி: நாடும், கால நிலையும்



நாடுகள் பலவாயினும் விருப்பத்திற்குறிய நாடுகள் என்பது ஒரு சிலவாகத்தான் இருக்கிறது. நாடுகள் இயற்கையின் அடிப்படையிலும், மக்களின் குண நலன்களின் அடிப்படையிலும் விருப்பத்திற்குறியதாக அமைகிறது. ஏனெனில் இது போன்ற காரணிகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.
கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வது என்பது, வேறு ஒரு ஊருக்கு செல்வது போன்று எளிதானதாக மாறிவிட்டது. கல்வி கற்க நாடுகளை தேர்ந்தெடுப்பது ஒரு சில நேரங்களில் ஏமாற்றத்தையும் அளித்துவிடுகிறது. மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த விபரங்களை வைத்து நாடுகளையும், மக்களின் பழக்கவழக்கங்களையும் கணிக்கின்றனர். ஆனால் அங்கே சென்ற பிறகு, தங்கள் எண்ணங்களுக்கு மாறானதாக அந்தப் பகுதி இருக்கும் பொழுது படிப்பின் ஆர்வத்தை கூட இழக்கும் நிலைக்கு உள்ளாகின்றனர்.
இந்தியா போன்று பன்முகத் தன்மையை ஒரளவு கொண்ட நாடுகளில் கூட வித்தியாசங்கள் பெரிய அளவில் இருக்கும். நமது நாட்டிலே மாநிலங்களுக்கு மாநிலம் மொழி, கலாச்சாரம் மாறுகிறது என்பது நம் கருத்து. ஆனால் உண்மையில் ஊருக்கு ஊர் இந்த வித்தியாசங்கள் அதிக அளவில் இருக்கின்றன.
எல்லா பகுதிகளும் ஒன்று அல்ல
எடுத்துக்காட்டாக நீலகிரி மாவட்டத்தைப் பற்றி படிப்பவர்கள் தமிழகம் முழுவதும் நீலகிரியைப் போன்று நில அமைப்பு, காலநிலை இருக்கும் என்று நினைப்பதும், சென்னையைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் தமிழகம் முழுவதும் நெருக்கடியும், தூசியுமாக இருக்கும் என்று கணிப்பதும் மிகவும் தவறான முடிவு என்பது நமக்குத் தெரியும். ஆனால் வெளி தேசத்தவர்களால் ஒரு பெரும் நிலப்பரப்பை ஒரு சில மணி நேரங்களிலோ, ஏன் சில நாட்களிலோ தெரிந்து கொள்வது மிகச் சரியாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.
அதே போன்றுதான் ஒரு நாட்டினைப் பற்றி தெரிந்துகொள்வது என்பதும். நாம் அறிய விரும்பும் நாட்டின் தலை நகரத்தை பற்றியோ அல்லது பொதுவான சுற்றுலாத் தலங்கள் பற்றியோ தெரிந்துகொண்டு தாங்கள் படிக்கச் செல்லும் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியும் இது போன்றுதான் இருக்கும் என்று கணிப்பது தவறாகிவிட வாய்ப்புள்ளது.
நாம் படிக்க விரும்பும் பாடத்தை தேர்ந்தெடுத்த பின்னர், அந்த படிப்பிற்கு எந்த நாடுகள் சிறப்பானதாக இருக்கும் என பொருளாதார ரீதியிலும், காலநிலை, கலாச்சாரம் போன்றவை என அனைத்தை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து ஒரு தேசத்தினை தேர்வு செய்வது பொதுவாக நடைபெறக்கூடியது.
இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்
படிக்க விரும்பும் தேசத்தினை பற்றிய அறிமுகங்களை இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளும்போதும், ஏற்கனவே படித்தவர்கள் மூலமாக தகவல்களை அறிந்துகொள்ளும்போதும் குறிப்பிட்ட நாட்டைப் பற்றிய பொதுவான தகவல்களை அறிந்து கொண்ட பின்னர், தான் படிக்க போகும் பல்கலைக்கழகம், தங்குவதற்கான வசதிகள், அந்தப் பகுதியில் நிலவும் காலநிலை, போக்குவரத்து, மருத்துவ வசதிகள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்துங்கள்.
ஏற்கனவே படித்தவர்கள் உங்களுக்கு தெரியாது என்றால், அந்த நாட்டின் தூதரகம் சென்னையில் இருக்கிறதா என்பதைப் பார்த்து, நேரிலோ அல்லது வேறு பகுதியில் இருந்தால் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக உங்களின் தனிப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஒரு நண்பரிடம் பேசுவதைப் போன்று அனைத்துவிதமான சந்தேகங்களையும் தெளிவாகக் கேளுங்கள், கூச்சம் வேண்டாம்.
மேலும் இணையதளம் மூலமாக தகவல்களை தெரிந்து கொள்ள தேடும்பொழுது பலவிதமான தகவல்கள், மதிப்பீடுகள் உங்களுக்கு கிடைக்கும். அவற்றின் உண்மைத் தன்மையை அவை எந்த மாதிரியான இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை வைத்தும், மேலும் அந்த தகவல்களைச் சார்ந்து தேடும்பொழுதும் கண்டுகொள்ளலாம்.
எந்த பகுதியாக இருந்தாலும் காலநிலையையும், மக்கள் பழக்க வழக்கங்களையும் சரியாக தெரிந்துகொண்டால் மிரட்சியும், கலக்கமும் இன்றி கல்வி எனும் பயணத்தில் சீராக பயணிக்கலாம்.
கல்வி மலர் 

புதன், 6 நவம்பர், 2013

உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்


 



நம் மகிழ்ச்சி, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும். நமது கவலை உடன் இருப்பவர்களுக்கும் கவலையையும், தளர்வையும் ஏற்படுத்தும். ஒரு மனிதனிடமிருந்து பரவும் தொற்றுநோயைப் போன்றது இது. நம்மிடமிருந்து தொற்றுவது நன்மைகளும், மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
பள்ளி செல்லும் வயதில் வெள்ளிக்கிழமை மாலையில் ஏற்பட ஆரம்பிக்கும் உற்சாகம் திங்கள் கிழமை காலையில் மறைந்து விடுகிறது. கல்லூரிக் காலத்தில் விடுமுறைகளில் உற்சாகம் குறைந்து கல்லூரி நாட்களில் உற்சாகம் அதிகரிக்கிறது. வேலை தேடும் காலங்களில் மிகுந்த ஆவலுடன் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் நாட்களும், முதல் நாள் வேலைக்கு செல்லும் நாளும் உற்சாகம் மிகுந்தது.
உற்சாகங்கள் வயதிற்கு தகுந்தவாறும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் மாறுகிறது. ஆனாலும் ஒரு சில நாட்களைத் தவிர பெரும்பாலும் மனம் உற்சாகத்துடன் நம்மை இயங்க வைப்பதில்லை. சூழ்நிலைகள்தான் உற்சாகத்தை தருகின்றதே தவிர, நம் மனது தானாக உற்சாகத்தை உருவாக்குவதில்லை.
மனிதன் பிறந்தது முதல் ஏதோ ஒன்றை தேடி அலைவதற்கே வாழும் காலங்கள் சரியாகிவிடுகிறது. எப்போதும் இருக்கும் இந்தத் தேடலில் உற்சாகத்தை உறங்க வைத்துவிடுகிறோம். தேடல் எந்த அளவுக்கு அவசியமோ, அதே போன்று உற்சாகமும் அவசியம். உற்சாகம் இருந்தால்தான் தேடல் நிறைவு பெறும்.
உற்சாகம் என்பது ஏதோ ஒன்றை சார்ந்தது அல்ல, ஒன்றிலிருந்து மற்றொன்று என விரியும் சங்கிலித் தொடரின் இறுதியே உற்சாகமாகும். மனம்தான் உற்சாகம் என்று பலரும் நினைக்கின்றனர், மனம் ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும் அதன் தொடர்ச்சியாக உடல் நலம், எண்ணங்கள், செயல்பாடுகள் என தொடரும் அது ஒரு சங்கிலித் தொடர்.
சத்தான உணவுகள்
உடல் நலத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும். உடல் நலத்திற்கு சத்தான உணவுகள் அவசியம். சத்தில்லாத உணவுகள் உடலின் செயல்பாட்டை மந்தமாக்குகிறது. மந்தமான உடல் சிந்தனையிலும் மந்தத்தை உருவாக்குகிறது. சத்தான சரிவிகித உணவு உடல் நலத்தையும், சுறுசுறுப்பையும் தருகிறது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்றவுடன் மணிக்கணக்காக செய்யும் உடற்பயிற்சி என்றோ, எடைகளை தூக்கி கடுமையாக செய்யும் உடற்பயிற்சி என்றோ நினைக்க வேண்டாம், கால் மணி நேர பயிற்சியே போதும். உடற்பயிற்சியே செய்யாமல் இருக்கும் நிலையில் 15 நிமிடம் என்பது போதுமானது. 15 நிமிடத்தில் என்ன செய்வது? கைகள், கால்கள், தலை, இடுப்பு, முதுகு, விரல்கள் என உடலின் அனைத்து பாகங்களையும் "ஸ்ட்ரெச்சிங்" என்று சொல்லக்கூடிய சோம்பல் முறிக்கும் பயிற்சியை செய்யுங்கள்.
நடை பழகுங்கள்
எங்களுக்குத் தான் நடக்கத் தெரியுமே என்கிறீர்களா? நடக்கத் தெரியும் என்றாலும் நாம் நடப்பதற்கு ஆவல் கொள்வது இல்லை, அதுவும் குறிப்பாக காலை நேரத்தில். காலையில் அதிக தூரம் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு 15 நிமிடம் நடந்தாலே போதும். காலை நேரத்தில் உற்சாகமாக செயல்படும் ஒவ்வோருவரின் உற்சாகமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
இயற்கையை ரசியுங்கள்
இயற்கையை ரசிக்க தொலை தூரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. நகரத்தில் வாழ்ந்தாலும், கிராமத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளையும் இயற்கையின் துணையோடுதான் கழிக்கிறோம். ஆனால் அதை நாம் உணர்வதில்லை என்பது உண்மையிலும் உண்மை. காலை நேரத்தின் பனியையும், தென்றலையும், வெயிலையும், அமைதியையும், சாலையின் அழகையும் உணர்வதற்கு ஒரு சில நிமிடங்கள் போதும்.
நகர வாழ்க்கையின் இரவில் நிலவை, நட்சத்திரங்களை எத்தனை பேர் பார்த்திருப்போம். ஒரு மூன்று நிமிடம் ஒதுக்கி வானத்தை ஆராயுங்கள் அது கொடுக்கும் அடுத்த நாளுக்கான உற்சாகத்தை.
இருக்கும் இடத்தில் மனதை செலுத்துங்கள்
தண்ணீரானது அது இருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. அது போன்று பள்ளியில், கல்லூரியில் இருக்கும்போது பாடங்களை பற்றியும், விளையாட்டு மைதானத்தில் விளையாட்டும், சாப்பிடும் பொழுது சாப்பாட்டிலும், படுக்கையில் தூக்கத்தை மட்டுமே நினையுங்கள். சிந்தனைகள் இருக்கும் இடத்திற்கு சம்பந்தமில்லாமல் விலகிச் செல்லும்பொழுது பதட்டங்களும், கவலைகளும் அதிகமாக வாப்பிருக்கிறது. எனவே மனதை திசை திருப்பி கொண்டு செல்லாதீர்கள்.
நேர்மறையாக எண்ணுங்கள்
இந்த உலகம் நன்மைகளாலும், தீமைகளாலும் நிரம்பி இருக்கிறது. நமக்குத் தேவையானவற்றை நாம் தான் தேடிப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வசந்த காலமும், இலையுதிர் காலமும், பனிக் காலமும், மழைக்காலமும், வேனிற் காலமும் நிரந்தரமாக இருப்பதில்லை. வருடம் முழுவதும் மாறி மாறி வருகின்றது. அதே போன்றுதான் பிரச்சனைகளும், மகிழ்ச்சியும். பிரச்சனைகளை எண்ணி அதிகம் கவலை கொள்வது, அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்துமே தவிர உற்சாகத்தை தராது. இவற்றை கடந்து விடலாம் அல்லது இது கடந்து போகும் என்று எந்த நிலையிலும் நினையுங்கள்.
நம்மை நாமே மாற்ற முயன்றாலும், மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்துவிட வாய்ப்புகள் குறைவு. பருகப் பருக பாலும் புளிக்கும் என்பது பழமொழி; எனவே தினந்தோறும் நிகழ்வுகளை தனதாக்கிக் கொண்டால் தான் நீடித்த உற்சாகம் தனதாகும்.
கல்வி மலர்

செவ்வாய், 5 நவம்பர், 2013

யார் கற்றுத்தருவது?




கற்றல் என்ற வார்த்தைக்கு இருக்கும் வீரியமானது வேறு எந்த வார்த்தைக்கும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் மனிதன் பிறந்தது முதல் தனது இறுதி காலம் வரை ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறான். கற்றலானது தானாக சென்று அறியாவிட்டாலும், சூழ்நிலைகளானது வாய்ப்புகளை ஏற்படுத்தி ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்வதற்கான சிறு சிறு வாய்ப்புகளையும் அளித்துவிடுகிறது.
தாயிடமிருந்து கற்க ஆரம்பிக்கும் கல்வியானது தந்தை, மூத்தோர், ஆசிரியர்கள், நண்பர்கள், சந்தித்த நிகழ்வுகள், புத்தகங்களில் இருந்து படித்தது என பல்வேறு வகைகளில் வாய்ப்புகள் தானாகவும், நாமே விரும்பியும், விரும்பாமல் சென்றும் கற்றுக்கொள்வதற்கான நிகழ்வுகள் நடந்துவிடுகிறது.
பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்கள் பாடங்களை கற்றுத்தந்தாலும், மாணவர்கள் அதனை பெரியவிதமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் கல்லூரி வாழ்க்கை முடிந்த பின்னர் கற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தங்கள் வேலை உருவத்தில் வந்து கற்றலுக்கான கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு வேலைக்கு சென்றவுடன் அந்தப்பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதற்காக பெரிய நிறுவனங்கள் குறந்த கால பயிற்சியை அளிக்கின்றன. சிறிய நிறுவனங்கள் பயிற்சி என எதுவும் தனிப்பட்ட முறையில் அளிக்காவிட்டாலும், ஓவ்வொரு வேலையாக கற்றுக்கொடுக்கப்பட்டு நன்கு பழகிய பின்னர் குறிப்பிட்ட பணி ஒதுக்கப்படுகிறது.
வேலை தேடி களைத்திருந்த மனமானது புதிய வேலை கிடைத்தவுடன் சோர்வுகள் நீங்கி புதிய உற்சாகத்தில் இருக்கும். அந்த உற்சாகம் மறைந்து போகும் வகையில் தான், வேலைக்கு சேர்ந்த புதிய நாட்கள் பலருக்கும் அமைகிறது. ஏனெனில் பணிச்சுழலுக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் புதியவராக இருப்பதால், ஏற்கனவே இருந்தவர்கள் புதியவரின் குணம், பழக்க வழக்கம், திறன்கள் குறித்து ஏற்கனவே இருப்பவர்கள் சந்தேகத்துடனேயே பார்ப்பர்.
அதுவும் ஒரு சில நிறுவனங்களில் புதியதாக சேர்ந்தவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணிகள் ஒப்படைத்தாலும், பணியில் வரக்கூடிய அடிப்படைச் சிக்கல்கள், நடைமுறைகள் குறித்து கற்றுத் தருவதற்கு ஒரு சில பணியாளர்கள் முன் வருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் யார் கற்றுத் தருவது?
பணி குறித்த குழப்பமான நிலையில் புதிய பணியாளர் தயக்கமின்றி சக பணியாளர்களிடம் கேட்டு சந்தேகத்தை தீர்ப்பது நல்லது. ஒரு சில நேரங்களில் தாமாகவே முடிவெடுப்பது கெட்ட பெயரை உருவாக்கி விட வாய்ப்பிருக்கிறது. அதே போன்று ஆரம்பத்தில் செய்யும் சிறு சிறு தவறுகளை வருத்தத்திற்குரிய நிகழ்வாக பாராமல் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக கருதினால் தான் மகிழ்ச்சி தொடரும்.
அதற்காக அனைத்து தவறுகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொன்றின் சூழ்நிலைகள் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தெளிவு இருப்பது அவசியம். ஏனெனில் ஒரு பணி அதற்கான பொறுப்பாளர்கள், அந்த பணியாளர்களின் நிலை போன்றவையும் ஒரு நிகழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வேலைக்கு தயாராகும்பொழுது இளைஞர்கள் இது போன்ற நிலைகளையும் நினைவில் கொண்டு மனதினை தயார்படுத்த வேண்டும். வேலை தான் ஒரே நோக்கம் என்று இருக்கும் இளைய சமுதாயம் வேலை கிடைத்தவுடன் அதற்கடுத்த விஷயங்களை பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மைதான் அதிகமாக இருக்கிறது.
ஏனெனில் பொதுவாக மாணவப்பருவமாக இருந்தாலும், வேலை தேடும் காலங்களாக இருந்தாலும், அதற்குப் பின்னதான வாழ்க்கை எதுவாக இருந்தாலும் "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்ற மனப்பான்மை பெரும்பாலோரிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த மனப்பான்மைதான் கற்றலுக்கு இருக்கும் பெரும் இடையூறு.
சிறிய விஷயங்களில் கவனத்தை செலுத்துவதன் மூலம் நமக்குள் இருக்கும் உற்சாகத்தையும், சுறு சுறுப்பையும் வெளிக்கொண்டு வர முடியும். கவனம் என்பது பதட்டமாகவோ, படபடப்பாகவோ மாறிவிடக்கூடாது. நிதானமும், தெளிவும் தீர்க்கமான பார்வையும் சிறப்பான பணிக்கும், வெற்றிகரமான வாழ்க்கை பயணத்திற்கும் அடிப்படையாக இருக்கும்.
எனவே கற்றல் என்பது மற்றவர்கள் நமக்கு கற்றுத் தந்த காலங்களைக் கடந்த பின்னர், நமக்கான முன்னேற்றத்திற்கு நாமாகவே முன் வந்து கற்றல் என்பது அவசியமாகிறது. கற்றல் தொடரவில்லையென்றால் மனித வாழ்வு இயந்திரத்தனமானதாக மாறிவிடும். ஏனெனில் கற்றல் என்பது உற்சாகம், புதிய தொடக்கம் மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கு அடித்தளமிடும் வளர்ச்சியுமாகும்.
நமக்கான உற்சாகத்திற்கு நாம்தான் தயாராக வேண்டும். எனவே கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுப்பதற்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்த நாமே நம்மை தயார்படுத்த தயாராவோம்.
கல்வி மலர்