தமிழகக் கல்விக்கூடங்களிலிருந்து ஆண்டுதோறும் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் படித்து வெளியேறுகின்றனர். இன்றைக்கு இருக்கும் வேலைவாய்ப்பு சந்தையில், பெரும்பான்மையானவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையை பெற முடிவதில்லை, அதே போன்று பலருக்கும் வேலையும் கிடைப்பதில்லை, என்பதே உண்மை.
அப்படிப்பட்ட நிலையில் சுயமாக தொழில் தொடங்க சரியான ஆலோசனையும், வழிகாட்டுதலும் இன்றி பலரும் தவிக்கின்றனர். அவர்கள் சுருக்கமாக தெரிந்துகொள்ளும் வகையில் சில கருத்துக்களை காணலாம்.
துறை
நமக்கு பிடித்தத் துறை எதுவோ அந்தத் துறை நமக்கு எளிதானதாக இருக்கும். அனுபவம் இருப்பது அவசியம் என்றாலும், சரியான திட்டமிடுதல்களோடு, துறை சார்ந்த நிபுணர்களின் அனுபவ அறிவைக்கொண்டு செயல் திட்டங்களை வகுத்தால் அனுபவம் இல்லையென்றாலும் சாதிக்க முடியும். பொருள் உற்பத்தித்துறையோ, மனித வளத்துறையோ எதுவாக இருந்தாலும் தற்போதைய தேவைப்பாடு, கடந்த கால வளர்ச்சி, எதிர்கால வளர்ச்சி, அந்தத்துறை குறித்த அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.
அவை நமக்கு முழு திருப்தி அளித்தவுடன் மட்டுமே களத்தில் இறங்க வேண்டும். எங்கே இருந்து ஆரம்பிப்பது, எப்படி நம்மை வெளிப்படுத்துவது என்பதில் தெளிவான பார்வை இருப்பது அவசியம்.
அளவு
தொழில் நிறுவனங்களை ஆரம்ப கட்டத்தில் இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை சிறிய நிறுவனம், பெரிய நிறுவனம் என்பன ஆகும். நம்மிடம் இருக்கும் முதலீட்டைப் பொறுத்து நாம் ஆரம்பிக்கும் நிறுவனத்தின் அளவும் மாறுபடும். பெரிய அனுபவமின்றி ஒரு தொழிலை அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்பிக்கும்பொழுது பொருளாதார வசதி அதிகம் இருந்தாலும், சிறு நிறுவனமாக ஆரம்பிப்பது நல்லது. ஏனென்றால், அறிக்கைகளை விட நடை முறை வேலை சற்று கடினமாக இருக்கலாம். மன ரீதியில் நாம் அதற்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம்? என்பதைப் பொறுத்து தான் நமது உற்சாகம் இருக்கும்.
பெரிய நிறுவனமாக ஆரம்பிக்கும்பொழுது, வேலைப்பளு, கண்காணிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மற்றும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகிக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் போன்றவற்றை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோமா? என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானித்துக்கொள்வது நல்லது.
சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கும்பொழுது நிறுவனம் முழுவதும் நமது கட்டுப்பாட்டிலேயே இருக்கும். சந்திக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் நிர்வாக அமைப்பை மாற்றுவது எளிதானதாக இருக்கும். பொருளாதாரத் தேவைகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஒரு வேளை நிறுவனம் வெற்றிகரமாக இயங்காமல் போனாலும், இழப்பு குறைவானதாக இருக்கும்.
இயக்கம்
பெரிய நிறுவனங்களில் பல தடைகள் இருக்கும். குறிப்பிட்ட எல்லையைக் கடந்து செயல்பட முடியாது. நாம் அனைத்துத் துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கான நேரம் கிடைக்காது. ஆனால் சிறு நிறுவனங்களில் அந்தத் தடைகள் இருக்காது. எந்த எல்லை வரை சென்றும், எல்லா விதமான வேலைகளையும் செய்யலாம். அதில் நமக்கு ஆர்வம் இருக்கிறதா? என்பதுதான் முக்கியம்.
அவ்வவ்பொழுது தொழில் ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஏற்கனவே தொழில் செய்தவர்கள், அனுபவ சாலிகள் போன்றவர்களிடம் ஆலோசனை பெறுவது தொழில் நிறுவனத்தின் இயக்கம் தடைபடாமல் இருக்க உதவும். நாம் மட்டும் எடுக்கும் முடிவுகள் எப்பொழுதும் சரியானதாக இருக்காது. வேறு கோணங்களில் சிந்தித்து திட்டங்களை தீட்டுவதற்கு, சரியான நபர்களின் ஆலோசனைகள் மட்டுமே உதவியாக இருக்கும். அதுவும் குறிப்பாக தொழிலே தெரியாதவர்களிடமெல்லம் ஆலோசனைகள் கேட்பது, முடிவெடுக்க முடியாத சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும்.
கட்டமைப்பு
நிறுவனங்களைப் பொறுத்தவரை நிர்வாகம் என்பது இன்றைக்கு எளிதானதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பழைய காலங்களைப் போன்று பல்வேறு கட்ட நிலைகளைக் கடந்து முடிவெடுக்கப்படும் நிலை பெருவாரியாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் ஆன் லைன் முறையிலேயே கோரிக்கைகள், செயல் திட்டங்கள், அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள நிறுவனங்களை ஆராய்ந்து, அவை எந்த மாதிரியான நிறுவனம், எப்படி செயல்படுகிறது, நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டிகள், அதற்காக அந்த நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள், என பல கோணங்களில் சிந்தித்து, அதற்கேற்ற வகையில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு வேலைக்கு, ஒரு தனி நபரை மட்டும் சார்ந்திருக்காதவாறு நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் திடீரென்று ஒரு நபர் வேலையை விட்டு நின்றாலும், நிறுவன வேலைகள் தடைபடாமல் தொடர்ந்து இயங்கும்.
கலாச்சாரம்
நிறுவனத்தின் கலாச்சாரம் எப்படி இருக்கிறதோ, அதற்கேற்றவாறு வேலை புரிவோரின் மனநிலையும் இருக்கும். எந்த மாதிரியான நிறுவனமாக இருந்தாலும், அந்தந்த நிறுவனத்திற்கு ஏற்றவாறு வேலையும் இருக்கும். நமது நிறுவனம் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து செயல்படக்கூடிய நிறுவனமா? அல்லது விரைவாக வேலைகளை முடிக்கும் வகையைச் சேர்ந்த நிறுவனமா? என்பதைப் பொறுத்து அலுவலக நடைமுறைகளை அமைத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். அதுபோன்று உடலுழைப்பை கொடுத்து உழைக்கும் நிறுவனத்திற்கும், சிந்தனைத்திறனை மட்டும் கொடுத்து வேலை செய்யும் நிறுவனத்திற்கும் ஏற்ப ஊழியர்களின் மன நிலையும் அமையும்.
தொழில் ஆரம்பிக்கும் புதிதில் கடின உழைப்பு தேவைப்படும். அந்த நேரத்தில் சுதந்திரமான அணுகுமுறை பொருளாதார ரீதியாக பாதிப்பை உண்டாக்கலாம். எனவே ஆரம்பத்தில் உழைக்கும் ஊழியர்களிடம், எதிர்காலத்தில் நிறுவனம் வளர்ச்சியை காணும்பொழுது, குறிப்பிட்ட சலுகைகள், அலுவலக கலாச்சாரம் ஆகியவை மாற்றி அமைக்கப்படும் என உறுதிமொழி கூறலாம்.
பாதுகாப்பு
தொழிலில் பாதுகாப்பு என்பது நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாப்பது மட்டுமல்ல நிறுவனத்தையே பாதுகாப்பதாகும். நிறுவனம் என்பது அலுவலகச் சொத்துக்கள், வேலை பார்ப்போர், பொருளாதாரம், திட்டங்கள், தொழில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், என நிறுவனம் சார்ந்த அனைத்தையும் பாதுகாத்து வழி நடத்த வேண்டும். ஏதேனும் ஒன்றை இழந்தாலும் அது தொழிலின் வளர்ச்சி தடைபட வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு பிரிவையும், ஒரு துறையாக நினைத்து செயல்பட வேண்டியது அவசியம்.
நிறுவனம் சற்று தளர்ச்சியையோ, வளர்ச்சி குறைவையோ சந்திக்கும்பொழுது வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பிரச்சனைகள் எழலாம். எனவே அதற்கேற்றவாறு பண இருப்பு அவசியம். தொழில் ஆரம்பிக்கும்பொழுதே ஒரு குறிப்பிட்டத் தொகையை தனியாக வங்கியில் இருப்பு வைப்பது, தொடர்ச்சியான தொய்வில்லா நிர்வாகத்திற்கு வசதியாக இருக்கும்.
எதிர்காலம்
வளர்ச்சி அடையும் நிறுவனத்திற்கு, எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை இருப்பது அவசியம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி சக பணியாளர்களிடம் விவாதித்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். சிறிய நிறுவனம் தானே, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என் தள்ளிப்போடுவது வளர்ச்சிக்கு பாதகமாக அமையும். மாதத்திற்கு ஒருமுறையேனும் பணியாளர்களின் கருத்துக்களை வெளிப்படையாக அறிவது நல்லது. வளர்ச்சியினால் வரும் பொருளாதாரம் அனைத்தையும், செலவுக்கு மட்டுமே பயன்படுத்துவதும் கூடாது. எதிர்கால செயல்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வரவேண்டும். அப்படி செய்தால்தான் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கான பணத்தேவையை எளிதாக சந்திக்க முடியும்.
உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையோடும், நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து சரியான திட்டமிடுதல்களோடு செயல்பட்டால் வெற்றியும், வளர்ச்சியும் நமதாகும்.
கல்வி மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக