புதன், 29 ஜனவரி, 2014

முன்னேற்றத்திற்கான வழி: நேர மேலாண்மை

மாணவர்கள், வேலை தேடும் இளையோர்கள் என ஒவ்வொருவருக்கும் தேவையான நேரம் காலத்திற்கு தகுந்தவாறு மாற்றம் காண்கிறது.
பள்ளி செல்லும் மாணவருக்கு அன்றைய வீட்டுப்பாடங்களை தூங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என்பதும், கல்லூரி மாணவருக்கு பரீட்சை காலத்தில் தங்கள் பாடங்களை படித்து முடிக்க வேண்டும் என்ற அவசரமும், வேலை தேடுவோருக்கு வயதாகிக் கொண்டே போகிறது விரைவாக வேலையினைப் பெற்று வருமானத்தை பெற வேண்டும் என்பன  போன்ற தேவைகள் இருக்கின்றது.
தனிப்பட்ட தேவைகளுக்காக ஓவ்வொருவரும் செலவழிக்கும் நேரமும், தேவையான நேர அளவும் மாறுபடுகிறது. தேவைப்படும் நேரத்தை சரியாக கணக்கிட்டு, மிச்சமிருக்கும் நேரத்தை உபயோகமான வகையில் பயன்படுத்திக்கொள்வதுதான் அறிவை வளர்க்கும் செயல். ஜப்பானியர்கள் பயணத்தின் போது கிடைக்கும் நேரத்தை தூங்குவதற்கு பயன்படுத்திவிட்டு, கிடைக்கும் நேரத்தை வேறு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
நாமும் அதுபோன்று இருக்க வேண்டும் என்பது அல்ல. இது ஜப்பானியர்களின் நேர மேலாண்மை குறித்த ஒரு பதிவே. நமக்கானத் தேவைகள், பயணங்கள், சூழ்நிலைகள், காலங்கள் வேறு மாதிரியானவை. நாம் அப்படியே பிறரின் நேர மேலாண்மையை பின்பற்றினால், அது வெற்றிகரமாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. கிடைக்கும் நேரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு நாமே ஒரு திட்டமிடலை உருவாக்க வேண்டும்.
* என்னென்ன வேலைகளுக்காக எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்?
* தேவையில்லாமல் பொழுதை போக்கும் நேரங்கள்.
* தேவைக்கும் குறைவாக இருக்கும் நேரங்கள்
* வருங்காலத் தேவைகள்
* வருங்காலத்திற்காக தயாராக என்ன செய்யலாம்?
* தன்னிடம் குறைவாக இருக்கும் திறனை, கிடைக்கும் நேரத்தைக் கொண்டு * எப்படி மேம்படுத்துவது?

போன்ற கேள்விகளுக்கான விடைகளை ஆராய்ந்தால், நேர திட்டமிடல் குறித்த ஒரு தெளிவான வரையறைக்குள் வர முடியும். திட்டமிடல் குறித்த இந்த வரையறை எதிர்காலத்திற்கான முடிவுகளை எடுக்கும்போது மிகவும் துணை புரியும்.
எனேனில் உங்கள் மூளைக்குள் எப்பொழுதும் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் நீங்கள் முடிவுகளை எடுக்கும்பொழுது அது உங்களை வேகமாக இயங்க கட்டாயப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக இரண்டு நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கிறது, நீங்கள் எந்த நிறுவனம் சிறந்த நிறுவனம் என்று ஆய்வு செய்கிறீர்கள், எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதில் தெளிவு காண்கிறீர்கள். மூளையின் செயல் திறன் சிறப்பாக இருந்தால்தான் தெளிவான முடிவுகளை விரைவாக எடுக்க முடியும்.
நேர மேலாண்மையே சுறுசுறுப்பையும், செயல் திறனையும் அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கிடைக்கும் சுறுசுறுப்பும், தெளிவான திட்டமிட்ட செயல் வேகமும் நம்மை முன்னேற்றத்திற்கான வழியில் அழைத்துச் செல்லும்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22343&cat=1

செவ்வாய், 28 ஜனவரி, 2014

குழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே...


குழந்தைகள் திறனுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கிறது. குழந்தைகளை செயல்திறன் உள்ளவர்களாக மாற்றுவதற்காக ஒவ்வொரு பெற்றோரும் எடுக்கும் முயற்சிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. குழந்தைகளின் வருங்காலம் கல்வியையும் கடந்து வெற்றிகரமாக அமைவதற்கு ஒரு சில முயற்சிகளை பெற்றோர்கள் செய்ய வேண்டும். அவை...
தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்
தன்னம்பிக்கைதான் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு செயலையும் செய்ய சிந்திக்கும்பொழுதே, தன்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையோ அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், தன்னால் சரிவர செய்ய முடியுமா போன்ற எண்ணங்கள் குழப்பத்திற்குள்ளாக்கலாம்.
அது போன்ற நேரங்களில், சிறு வயதில் தங்கள் குழந்தைகளைப் போன்று இருந்து  பிற்காலத்தில் சாதித்தவர்களின் வரலாறுகளை  எடுத்துக்கூறி அவர்களாலும் எளிதாக சாதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்துங்கள். உங்களோடு உங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து,  நேரடியாக இல்லாமல் மறைமுகமாக குழந்தையின் திறமைகள் குறித்து குழந்தைகளுக்கு முன்னால் உற்சாகமாக பேசுங்கள். இது குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.  
நண்பர்களை உருவாக்கிக்கொடுங்கள்
தனது பெற்றோருடன், உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூற முடியாததை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள கிடைத்திருக்கும் ஒரு நபராக மட்டும் நண்பர்கள் இல்லாமல், பொதுவான குணங்களை மெருகேற்றுவதற்கும், விளையாட்டு, கூடுதல் திறன்களை வளர்த்தல், பயிற்சிகள் போன்றவற்றில் தோள் கொடுப்பவராகவும் இருக்கிறார்.
குழந்தைகளின் வளர்ச்சியில் நண்பர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. "உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்" என்பது நாம் அறிந்த பொன்மொழி. நண்பர்கள் இல்லாதவர்கள் தங்கள் எண்ணங்களை மனதிற்குள்ளாகவே வைத்து மன நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். நல்ல நண்பர்கள் உடையவர்கள் மகிழ்ச்சிகரமாக செயல்படுகின்றனர். நண்பர்கள் இல்லாமல் இருப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாதன விளையாட்டுப் பொருட்களின் உதவியுடன் தங்கள் நேரத்தைக் கழிக்கின்றனர். இதன் மூலம் வெளி உலகத் தொடர்புகள் இயற்கையாகக் கிடைப்பதில்லை. நண்பர்கள் ஒரு தொடர்புச்சாதனமாக பயன்படுகிறார்கள்.
குழு செயல்பாட்டை அதிகப்படுத்துங்கள்
நண்பர்களோடு இணைந்து விளையாடுவதற்கு அனுமதி அளியுங்கள். நடனம், சேவை சார்ந்த செயல்கள், நாடகம் போன்றவற்றில் பங்குகொள்வதற்கு உற்சாகம் அளியுங்கள். ஏனெனில் குழுச்செயல்பாடுகள் மற்றவர்களை அறிந்துகொள்ள உதவும். மேலும் பல்வேறு எண்ணங்கள் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் பல பாடங்களை கற்றுத் தரும். ஒற்றுமையுணர்வும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், பொறுமையும் வருங்காலத் தலைமுறைக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனை வளர்ப்பதற்கு குழு செயல்பாடுகள் தான் துணை புரியும்.
தலைமைப் பண்பை உருவாக்குங்கள்
முடிவெடுத்தல் தான் ஒரு மனிதனை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்செல்கிறது. தானாக முடிவெடுக்கும் நிலையை குழந்தைப்பருவத்திலேயே வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.  அப்பொழுதுதான் எதிர்காலம் குறித்த பயம் நீங்கி, எதையும் சந்திக்கும், சாதிக்கும் துணிச்சல் அதிகமாகும். சிறிய சிறிய செயல்பாடுகளில் அவர்களாகவே முடிவெடுக்க வைத்து அதன் விளைவுகள் எப்படி இருக்கிறது, எப்படி இருந்தால் நல்லது என அன்புடன் உணர வையுங்கள்.   
பாதுகாப்பு & அன்பு மிகுந்த சூழலை அளியுங்கள்
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குழந்தைகள் குறித்த கவலையை பெற்றோர்களிடம் அதிகரித்திருக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை முறையால் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். கிடைக்கும் குறைவான நேரத்தையும் தொலைக்காட்சி பார்த்தல், தங்களின் தனிப்பட்ட வேலைகளைப் பார்ப்பதற்கே செலவிட்டுவிடுகின்றனர்.  குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர்களோடு அமர்ந்து ஒரு நண்பனாக பேசுவதில்லை. இதன் மூலம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.
பெற்றோர் தங்களை உற்சாகப்படுத்தி பேசுவதும், தங்கள் பிரச்சனைகள் குறித்து அக்கறை செலுத்துவதும் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். பாதுகாப்பின்மையை குழந்தைகள் உணர்ந்தாலும் அன்பு மிகுந்த நட்பான சூழ்நிலையில் பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதற்கு தயாராக இருப்பர்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22325&cat=1

புதன், 15 ஜனவரி, 2014

பண்டிகைக் கால விடுமுறைகளும், மாணவப் பருவமும்...


மாணவர்களுக்கு பரீட்சை காலம் எப்படி கடினமானதோ அதற்கு நேர் எதிரானது விடுமுறைகளும், பண்டிகைக் காலங்களும்.
விடுமுறைகள் என்றால் விளையாட்டுக்களோடும், பொழுது போக்குகளோடும் மட்டும் கடந்து செல்லும். ஆனால் பண்டிகைக்கால விடுமுறைகள் அப்படிப்பட்டது அல்ல. புதிய உடை, பல்சுவை பலகாரங்கள், உணவு வகைகள், கொண்டாட்டம் என மற்ற விடுமுறைகளை விட மாறுபட்டு அதிக மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
ஆண்டுதோறும் ஒரே விதமான பண்டிகைகளே இருந்தாலும், ஓவ்வொரு ஆண்டுக்குமான பண்டிகைக் கொண்டாட்டங்களானது சூழ்நிலைகள், வயது ஆகியவற்றைப் பொருத்து மாற்றம் காண்கிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பண்டிகைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் படிக்கும் காலத்தில் பொதுவானதாக இருக்கிறது. பண்டிகைகளின் போது மற்ற நண்பர்களையும் அழைத்து பலகாரங்களை உண்ண வைப்பது, உணவு வழங்குவது என நட்பையும், ஒற்றுமையையும் அதிகப்படுத்துவதாக அந்தக் காலங்கள் விளங்குகிறது.
வார இறுதிகளில் வரும் பண்டிகைகள் மாணவர்களிடையே "ஒரு விடுமுறை குறைந்து விட்டதே" என சிறு சோர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும் கொண்டாட்டங்களில் மட்டும் மாற்றம் இருப்பதில்லை. பொங்கல் கால விடுமுறைகள் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை, எப்படி இருந்தாலும் உறுதியாக 4 நாட்கள் தொடர் விடுமுறையாக கிடைக்கும் வகையில் வந்துவிடுகிறது.
பலகாரங்கள் பரிமாற்றம்
ஒவ்வொரு பண்டிகைக்குமான தின்பண்டங்களுக்கு நண்பர்கள் மத்தியில் போட்டியே இருக்கும். தீப ஒளித்திருநாளாக இருந்தால் முறுக்கு, அதிரசம், சீடை போன்ற பலகாரங்களும், கிறிஸ்துமஸ் என்றால் கேக்குகளும், ரம்ஜான் என்றால் பிரியாணிகளுமாக உடன் படிக்கும் நண்பர்களால் வீடுகள் களை கட்டும். பாரபட்சம், விருப்பு, வெறுப்புகளின்றி பகிர்ந்து உண்ணும் பண்டிகைக் காலங்கள் இனிப்புகளோடு இனிமையையும் தருகிறது.
தமிழர் திருநாள்
அனைத்து தரப்பினராலும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படும் பண்டிகையாக, ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை இருப்பதால், தமிழகத்தின் அனைத்து வீடுகளும் இதனை எதிர்நோக்கி இருக்கின்றன.  மாணவர்களைப் பொறுத்த வரையில் மாறிவரும் கல்வி முறைகளும், பயிற்சி மையங்களும் பண்டிகைகளை ஒரு சுதந்திரமான நாளாக உணரும் வகையில் மட்டுமே மாற்றி இருக்கிறது. மேலும் தொலைக்காட்சி அலைவரிசைகள் வீட்டிற்கு வெளியே செல்லாத வகையில் வீட்டிற்குள்ளேயே கட்டிப்போடும் வேலையை செய்கின்றன. செயற்கையான பொழுதுபோக்குகள் அதிகரிக்க அதிகரிக்க பண்டிகைகள் தனது அடிப்படையை இழந்து வருகின்றது.
ஒரு பண்டிகைக்கான சாராம்சங்கள் உணரப்பட்டால்தான் பண்டிகையின் நோக்கம் நிறைவேறும். மனிதனை கவலைகள், துன்பங்களிலிருந்து மீட்டு வந்து, மரபினை மங்காமல் வளர்ச்சியடைய வைக்கும் பணியினை சிறப்பாக செய்வதற்குத்தான் பண்டிகைகள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. விடுமுறை நாள் என்று பார்க்காமல் பண்டிகைகளை, அது ஏன் உருவாக்கப்பட்டது? என ஆராய்ந்து அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் நம்மை உண்மையான வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் பாடங்கள் வேலை வாய்ப்பினை முன்னிறுத்தி அளிக்கப்படுகிறது. அவை வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களை அளிப்பதில்லை. ஆனால் அவற்றுள் சிலவற்றை பண்டிகைகள் நமக்கு கற்றுத் தருகிறது.
அடிப்படையை உணர வேண்டும்
எடுத்துக்காட்டாக பொங்கல் பண்டிகை இயற்கையை போற்றுவதற்கும், அதனை பாதுகாக்கும் உழவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இது போன்ற நாட்களில் கிடைக்கும் நேரங்களை, மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் பகுதிகளில் மரங்கள், செடிகள் நட்டு பராமரிப்பதற்கான பணிகளை தொடங்கலாம்.  விலங்குகள், பறவைகள் வாழ்வதற்கு இடைஞ்சல் இல்லாமலும், அவைகளுக்குமான முக்கியத்துவத்தை நமது வாழ்க்கையில் அளிக்கலாம்.
மேலும் பொங்கல் விடுமுறைகளில்தான் பெரும்பாலான நகர்ப்புற மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இளம் மாணவர்களுக்கும் அப்போழுதுதான் தங்கள் ஊரை, உறவினர்களை, புதிய வாழ்க்கை சூழலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. உறவினர்களோடு இருக்கும் மகிழ்ச்சியானது உறவுகளை வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும். தனது மரபு வழி இங்கே இருந்துதான் தொடங்குகிறது என்பதை உணர்ந்து, தனது வருங்கால வளர்ச்சியின் போது ஊரின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உறுதிகொள்ள வேண்டும்.
விடுமுறை மட்டுமல்ல...
ஏனெனில் பண்டிகைகள் வாரம்தோறும் வந்து போகும் விடுமுறைகள் மட்டுமல்ல,  சக மனிதனின் அன்பையும், மண்ணின் ஈரத்தையும் நம்மில்  உணரச்செய்யும் நல்ல ஆசிரியருமாகும்.
கல்வி மலர்