குழந்தைகள் திறனுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கிறது. குழந்தைகளை செயல்திறன் உள்ளவர்களாக மாற்றுவதற்காக ஒவ்வொரு பெற்றோரும் எடுக்கும் முயற்சிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. குழந்தைகளின் வருங்காலம் கல்வியையும் கடந்து வெற்றிகரமாக அமைவதற்கு ஒரு சில முயற்சிகளை பெற்றோர்கள் செய்ய வேண்டும். அவை...
தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்
தன்னம்பிக்கைதான் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு செயலையும் செய்ய சிந்திக்கும்பொழுதே, தன்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையோ அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், தன்னால் சரிவர செய்ய முடியுமா போன்ற எண்ணங்கள் குழப்பத்திற்குள்ளாக்கலாம்.
அது போன்ற நேரங்களில், சிறு வயதில் தங்கள் குழந்தைகளைப் போன்று இருந்து பிற்காலத்தில் சாதித்தவர்களின் வரலாறுகளை எடுத்துக்கூறி அவர்களாலும் எளிதாக சாதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்துங்கள். உங்களோடு உங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து, நேரடியாக இல்லாமல் மறைமுகமாக குழந்தையின் திறமைகள் குறித்து குழந்தைகளுக்கு முன்னால் உற்சாகமாக பேசுங்கள். இது குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
நண்பர்களை உருவாக்கிக்கொடுங்கள்
தனது பெற்றோருடன், உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூற முடியாததை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள கிடைத்திருக்கும் ஒரு நபராக மட்டும் நண்பர்கள் இல்லாமல், பொதுவான குணங்களை மெருகேற்றுவதற்கும், விளையாட்டு, கூடுதல் திறன்களை வளர்த்தல், பயிற்சிகள் போன்றவற்றில் தோள் கொடுப்பவராகவும் இருக்கிறார்.
குழந்தைகளின் வளர்ச்சியில் நண்பர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. "உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்" என்பது நாம் அறிந்த பொன்மொழி. நண்பர்கள் இல்லாதவர்கள் தங்கள் எண்ணங்களை மனதிற்குள்ளாகவே வைத்து மன நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். நல்ல நண்பர்கள் உடையவர்கள் மகிழ்ச்சிகரமாக செயல்படுகின்றனர். நண்பர்கள் இல்லாமல் இருப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாதன விளையாட்டுப் பொருட்களின் உதவியுடன் தங்கள் நேரத்தைக் கழிக்கின்றனர். இதன் மூலம் வெளி உலகத் தொடர்புகள் இயற்கையாகக் கிடைப்பதில்லை. நண்பர்கள் ஒரு தொடர்புச்சாதனமாக பயன்படுகிறார்கள்.
குழு செயல்பாட்டை அதிகப்படுத்துங்கள்
நண்பர்களோடு இணைந்து விளையாடுவதற்கு அனுமதி அளியுங்கள். நடனம், சேவை சார்ந்த செயல்கள், நாடகம் போன்றவற்றில் பங்குகொள்வதற்கு உற்சாகம் அளியுங்கள். ஏனெனில் குழுச்செயல்பாடுகள் மற்றவர்களை அறிந்துகொள்ள உதவும். மேலும் பல்வேறு எண்ணங்கள் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் பல பாடங்களை கற்றுத் தரும். ஒற்றுமையுணர்வும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், பொறுமையும் வருங்காலத் தலைமுறைக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனை வளர்ப்பதற்கு குழு செயல்பாடுகள் தான் துணை புரியும்.
தலைமைப் பண்பை உருவாக்குங்கள்
முடிவெடுத்தல் தான் ஒரு மனிதனை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்செல்கிறது. தானாக முடிவெடுக்கும் நிலையை குழந்தைப்பருவத்திலேயே வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்காலம் குறித்த பயம் நீங்கி, எதையும் சந்திக்கும், சாதிக்கும் துணிச்சல் அதிகமாகும். சிறிய சிறிய செயல்பாடுகளில் அவர்களாகவே முடிவெடுக்க வைத்து அதன் விளைவுகள் எப்படி இருக்கிறது, எப்படி இருந்தால் நல்லது என அன்புடன் உணர வையுங்கள்.
பாதுகாப்பு & அன்பு மிகுந்த சூழலை அளியுங்கள்
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குழந்தைகள் குறித்த கவலையை பெற்றோர்களிடம் அதிகரித்திருக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை முறையால் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். கிடைக்கும் குறைவான நேரத்தையும் தொலைக்காட்சி பார்த்தல், தங்களின் தனிப்பட்ட வேலைகளைப் பார்ப்பதற்கே செலவிட்டுவிடுகின்றனர். குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர்களோடு அமர்ந்து ஒரு நண்பனாக பேசுவதில்லை. இதன் மூலம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.
பெற்றோர் தங்களை உற்சாகப்படுத்தி பேசுவதும், தங்கள் பிரச்சனைகள் குறித்து அக்கறை செலுத்துவதும் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். பாதுகாப்பின்மையை குழந்தைகள் உணர்ந்தாலும் அன்பு மிகுந்த நட்பான சூழ்நிலையில் பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதற்கு தயாராக இருப்பர்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22325&cat=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக