செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கற்றல்: வளர்ச்சிக்கான முதல் படி


மனித வாழ்வானது கற்றுக்கொள்வதின் அடிப்படையிலேயே வளம் பெறுகிறது. கற்ற நல்லவற்றை செயல்படுத்தியதன் மூலம் வீட்டிலும், நாட்டிலும் சாதனைகள் புரிந்தவர்கள்தான், மற்றவர்களின் வழிகாட்டிகளாக விளங்கி வருகின்றனர்.
கற்கும்பொழுது நாம் விரும்பாவிட்டாலும் நல்லவற்றோடு, கெட்டவற்றையும் கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில் மிகத் தெளிவுடன் கற்றலை அணுக வேண்டியது இருக்கிறது.
கற்றலை முழுமையடைய வைப்பவையாக கவனித்தல், நினைவில் நிறுத்துதல், இவற்றின் மூலம் அடையக்கூடிய நிலை போன்றவை இருக்கிறது. ஒன்றை கற்றால் மட்டுமே அதனை செயல்படுத்த முடியும். அதே நேரம் சிறப்பாக கற்றவர்களால் மட்டுமே, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியும். கற்றல் என்பது ஒரு நிலையோடோ அல்லது குறிப்பிட்ட மனிதர்கள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவோ நின்றுவிடக்கூடியது அல்ல; தொடர்ந்து தலைமுறைதோறும், காலங்களைக் கடந்தும் மெருகேறுவதாகவே இருக்கிறது.
கவனித்தல்
ஒன்றை கற்றுக்கொள்கிறோம் என்றால்,  அதில் ஈடுபாடும், புரிதலும் இருந்தால்தான் ஆர்வத்துடன் கவனிக்க முடியும். ஒன்றில் ஈடுபாட்டை கொண்டு வருவது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய செயல் அல்ல. ஏனெனில் "மனித மனம் குரங்கைப் போன்றது, அது ஒரே சிந்தனையில் நிலையாக இருக்காது" என்று பெரியவர்களும், படித்த புத்தகங்களும் கூறும் கருத்தாகும். இப்படிப்பட்ட மனதினை ஒரு நிலைப்படுத்தி பாடங்களை கவனிக்க வைப்பதுதான் முக்கியமானது.
நினைவில் நிறுத்துதல்
கவனித்த நிகழ்வுகள் எல்லாம் எப்போதும் நினைவில் இருப்பதில்லை. ஒரு சிலருக்கு கவனிக்கும்பொழுது புரிந்த மாதிரி தெரிந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு கற்ற தகவல் மெதுவாக மறந்து விடும். இப்படிப்பட்ட நிலையில், கற்றதை மீண்டும் நினைவுபடுத்தவோ அல்லது புரிய வைக்கவோ வேண்டியது இருக்கிறது. தொடர்ந்து நினைவில் இருப்பதுதான் கற்றல் முழுமை அடைவதற்கான நிலை. முழுமையாக நினைவில் இருந்தால்தான் புரிந்துகொண்டதை அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்க முடியும்.
நினைவுத் திறனே ஒருவரின் அடுத்த இலக்கை நோக்கிய செயல்பாடுகளை  வெற்றிகரமாக்க துணை புரிகிறது.
கற்பதில் இருக்கும் ஆர்வம் வளர்ச்சியை உண்டாக்குகிறது. வளர்ச்சி அறிவியல், ஆற்றல், வாழ்வியல் என அனைத்திலும் புதிய உருவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23259&cat=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக