செவ்வாய், 1 அக்டோபர், 2013

அறுவடையின் பலனை எதிர் நோக்கி பயிர் செய்யுங்கள்...

புதிய கலாச்சாரத்திற்குள் மனிதன் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும்பொழுது தன்னோடு தனது குடும்பம், தன்னைச் சார்ந்தவர்கள் என பலரையும் சேர்த்து அந்த புதிய கலாச்சாரத்திற்குள் இழுத்துச் செல்கிறான்.
இந்த மாற்றம் பிறராலும் கவனிக்கப்பட்டு, தங்கள் நலத்திற்காக அதன் பின் விளைவுகளை கண்ணோக்காமல் நன்மைகள் என்ற ஒரு பார்வையிலேயே புதிய பழக்க வழக்கங்களை தனதாக்கிக் கொண்டு விடுகின்றனர்.
"முருங்கையை நொடித்து வளர்க்கணும், பிள்ளையை அடித்து வளர்க்கணும்" என்பது காலங்காலமாக நம்மோடு புழங்கிய வார்த்தைகள். ஆனால் இன்று தனது குழந்தை என்றவுடன் எதையும், அதாவது அந்தக் குழந்தை செய்யும் சிறு தவறையும் சரி செய்வதை விட்டு ரசிக்கும் தன்மை வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் பெரிய வீட்டு பிள்ளைகளிடம் தவறுகள் நடப்பது சகஜம் என்பது பெரும்பான்மையானோரின் கருத்தாக இருந்தது. ஆனால் இன்று அனைத்து தரப்பினரிடமும் சகலவிதமான கெட்ட பழக்கவழக்கங்களும் சாதாரணமாக தென்படுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்பம் என கூறப்பட்டாலும், சரியான கண்காணிப்பு, கண்டிப்பு இல்லாததே முக்கிய காரணமாக இருக்க முடியும். குழந்தைகளுக்கு பாசத்தையும், அன்பையும் ஊட்டி வளர்க்க வேண்டும் என்றாலும், அந்த அன்பும், பாசமும் குழந்தை வாலிபனான பிறகும் இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள் நமக்கு வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன? பாசத்தை ஊட்டி வளர்த்த வசதி படைத்த பெற்றோர் நாகரிக வளர்ச்சியின் தொடர்ச்சியாகத் தான் முதியோர் இல்லங்களில் தனிமையில் வாடுகிறார்களா?
காலங்கள் முடிந்த பின்னர் குழந்தை வளர்ப்பைப் பற்றி சிந்தித்து பயன் இல்லை.  மரம் வளர்ப்பது அவசியமும் தேவையானதுமானதாக இருந்தாலும் இடைஞ்சலாக இருக்கும் சிறு சிறு கிளைகளை வெட்டி, மரத்தை சீராக வளர்க்க முயற்சி செய்கிறோம்.
அதே போன்று தான் வாழ்க்கையும், சிறு வயதிலேயே குழந்தைகளின் தவறுகளை சரி செய்தால் தான் பெரியவனான பின் அவனால் பெற்றெடுத்த பெற்றோருக்கும், அவன் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கும் நலம் உண்டாக்கும்.
கல்வி மலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக