வியாழன், 17 அக்டோபர், 2013

சிந்திக்க நேரம் இருக்கிறதா?




வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதாக தொழிற்துறையினரும், இளம் தலைமுறையினரும் கூறி வருகின்றனர்.
"தொழில்நுட்பங்கள் பயணத் திட்டங்களை எளிதாக்குகிறது, வேலையினை எளிதாக முடிக்க வசதியாக இருப்பதால் தேவையில்லாத அலைச்சலைக் குறைக்கிறது, உலகின் எந்த மூலையில் இருக்கும் நபர்களையும் தொடர்பு கொள்வது எளிதான ஒன்றாக இருக்கிறது" என பலதரப்பட்ட காரணங்களை தொழில்நுட்பத்துக்கு ஆதரவாக இளம் தலைமுறையினர் கூறுகிறார்கள்.
"தொழில்நுட்பங்கள் அருகில் இருக்கும் மனிதன் மேல் உள்ள நம்பிக்கையை அழித்து, தெரியாத மனிதன் மேல் நம்பிக்கையை உருவாக்க காரணமாக இருக்கிறது.  விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதைத் தவிர்த்து கணினியில் விளையாடுவதற்கு ஊக்கம் கொடுப்பதும், இயற்கையை விட்டு மனிதனை தூர விலக வைப்பதில் பெரும் வெற்றி கண்டிருப்பதுதான் தொழில்நுட்பத்தின் வெற்றி" என்பது அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் கருத்தாக இருக்கிறது.
தொழில்நுட்பங்கள் குறித்து இருவேறு கருத்துகள் இருந்தாலும், பல சம்பவங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் இடையூறுகளையே ஏற்படுத்துகின்றன, என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
மனிதன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை ஏதோ ஒரு வேலைக்குள் தன்னை உட்படுத்திக் கொள்கிறான். மேலும், வேலை பார்க்கும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாலும், இன்றைய பணியாளர்களுக்கு வேலையானது தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. அது தவிர வீட்டு வேலைகள், இதர பணிகள் என பல்வேறு சூழ்நிலைகளுக்கிடையில் செல்பேசியில், இணையதளத்தின் வழியாக சமூக வலைதளங்களில் என பல்வேறு செயல்களுக்கிடையில் ஒரு நாளைக்கான நேரம் என்பது போதுமானதாக இருப்பதில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிந்திப்பதற்காக நேரம் கிடைக்காமலே போய்விடுகிறது. "ஒரு சமூகம், நாடு வளர்ச்சி அடைவதற்கு சீரிய சிந்தனைகளே துணை புரிகின்றன" என்பது மனோ தத்துவவியலாளர்களின் கருத்து.
சிந்தனை வறட்சியை போக்குவதற்காக, சிந்தனைகளை வளர்க்கும் நடவடிக்கைகளை பள்ளிகளும், கல்லூரிகளும், தொழில் நிறுவனங்களும் எடுக்க ஆரம்பித்துள்ளன. பள்ளிகளைப் பொறுத்த அளவில் தற்பொழுது "ப்ளே ஸ்கூல்ஸ்" போன்ற குழந்தைகளின் மன ஓட்டத்திலேயே பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள வைப்பதற்காக, புதிய புதிய நடைமுறைகளில் பாடங்கள்  கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
கல்லூரிகளிலும் பிரச்சனைகளை தீர்க்கும் விதத்தில் "பிராப்ளம் சால்விங்" முறையில் பாடங்கள் அளிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால், பணியில் சேர்ந்தவுடன் இது போன்ற வாய்ப்புகள் அனைத்தும் தடைபட்டு போய்விடுகின்றது. மூளையின் வளர்ச்சி வேலை பெறுவதற்கு மட்டுமானது, என பலரும்  நினைப்பதால் வேலை கிடைத்தவுடன் மூளைக்கான உணவை கொடுக்க மறந்துவிடுகிறோம்.
ஆனாலும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் நலனை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறை செலுத்துகின்றன. அப்படிப்பட்ட நிறுவனங்கள் காலை நேரத்தில் அலுவல் சம்பந்தமான மின்னஞ்சல்களை தங்கள் ஊழியர்களுக்கு அனுப்புவதில்லை என முடிவெடுத்துள்ளன.  ஜெர்மனியின் "வோல்க்ஸ்வேகன்" நிறுவனம் தங்களுடைய மின்னஞ்சல் சர்வரின் இயக்கத்தையே இரவு நேரத்தில் நிறுத்தி வைத்து விடுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் முதற்கொண்டு தொழில்புரிவோர் வரை பெரும்பாலோனோர் இரண்டிலிருந்து நான்கு அலைபேசி வரை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்களின் கவனம் சிதறடிக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை.
காலை நேரம் சிந்திப்பதற்கு உகந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் இரவு மிகத் தாமதமாகத் தான் தூங்குகின்றனர். காலையிலும் அலுவலகத்திற்கோ, கல்லூரிக்கோ செல்வதற்கான நேரத்திற்கு அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகத் தான் படுக்கையிலிருந்து எழும்பி கிளம்புகின்றனர். இதிலே சிந்திப்பதற்கான நேரம் எங்கு கிடைக்கிறது?
ஒரு தனியார் நிறுவனம் தங்கள் அலுவலக பணியாளர்களுக்கு காலையில் அன்று செய்யக்கூடிய  வேலைகள் குறித்து சிந்திக்கவும், அடுத்ததாக அவசரமான அல்லது முக்கியமான  பணிகளை ஆற்றவும் அறிவுறுத்துகிறது. ஏனெனில் பணியை எளிதாக, நெருக்கடி இல்லாமல் முடிப்பதற்கு இது துணை புரிவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
வாழ்க்கை இன்றைக்கானது மட்டுமல்ல, கடந்த காலத்தின் பாடங்களிலிருந்து வருங்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு. மானவர்களே, வாய்ப்பினை நாம் உபயோகமாகப் பயன்படுத்தினால் மட்டுமே வளர்ச்சி சரிவிகிதத்தில் இருக்கும். சிந்திப்பதற்கான நேரம் என்பது தானாக கிடைக்காது, நாம்தான் அதற்கான நேரத்தை ஒதுக்கியாக வேண்டும்.   
கல்வி மலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக