வியாழன், 27 பிப்ரவரி, 2014

கல்வி எனும் தேவை




கல்வி குறிப்பாக அறிவியல் நமக்கு உலகைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. காலை எது? மாலை எது? மழை ஏன் பொழிகிறது? நீராதாரங்கள் போன்றவற்றைப் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்தது கல்விதான்.
ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர் வளர்ச்சியாக அறிவை கொண்டு செல்வதும் கல்விதான். பெரும் கண்டுபிடிப்புகளை கண்டறிந்த திறமையானவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதும், அதனை புரிந்து கொள்ள உதவியதும் கல்விதான்.
முந்தைய வரலாறுகளிலிருந்து தேவையான பாடங்களை அளிக்க வேண்டியது ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தின் கடமையாகும். பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய திறனை மனிதத்தன்மையோடு அளிப்பதிலும் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
கடந்த காலத்தைப் பற்றி வயதானவர்களிடத்தில் கேட்டோம் என்றால், அப்பொழுது இருந்ததை விட இப்பொழுது ஏதேனும் ஒன்றாவது ஏற்றம் கண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வார்கள். அதே நேரம் சட்ட மீறல், ஊழல் என குற்றங்கள் பெருகி வருவதையும் கண்கூடாகக் காண்கிறோம். ஆனாலும் பலவற்றில் இளைஞர்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
இன்றைக்கு மாணவர்கள் பல இடங்களுக்கும் செல்கின்றனர். பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது, சமூகப் பிரச்சனைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், அதற்கான தீர்வுகளை கண்டறிவதற்கான திறமையையும் பெற்றிருக்கிறார்கள். தொன்றுதொட்டு நமது குருகுலங்களும், பல்கலைக்கழகங்களும் நல்ல குணநலன்களை வளர்ப்பதையே முக்கிய  நோக்கமாகவும், மேலும் வாழ்வின் உண்மையை தேடுவதையுமே முக்கிய கொள்கையாக, இன்று வரை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
கல்வி நமக்கு பலவற்றை கற்றுத் தந்திருக்கிறது. பலவற்றை கற்றுக்கொள்ள  உறுதுணையாகவும் இருந்திருக்கிறது.  நன்மை எது? தீமை எது? என்பதை கண்டுகொள்ள கல்வி நமக்கு துணைபுரிந்துகொண்டிருக்கிறது. எனவே கற்றவற்றின் மூலம் இந்த சமூகத்திற்கு தேவையான நன்மைகளை செய்வதற்கு நமக்கு கடமை உண்டு.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22835&cat=1

புதன், 26 பிப்ரவரி, 2014

பொறியியல் மாணவர்களின் நிலை கேள்விக்குரியதா?



வரும் மே மாதத்தில் தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து முடித்து வெளியேற இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வேலை உறுதியாக காத்திருக்கிறதா என்பது கேள்விக்குரியதே.
இதில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் முதுநிலை படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை என குறிப்பிடத்தகுந்த அளவான மாணவர்கள் மட்டும் வேலைவாய்ப்பை எதிர்பார்க்காமல் இருக்கலாம்.
தகவல் தொழில்நுட்பத்துறை
பொறியியல் பாடங்களில் முக்கியத்துவமான பாடமாக பார்க்கப்பட்டு 2002ம் ஆண்டு முதல் 2008 வரை பெரும் முன்னேற்றம் கண்ட துறையாக விளங்கியது தகவல் தொழில்நுட்பத்துறையாகும். 2008க்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பித்ததும்,  ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி வளாகத்தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்ததும்  ஆர்வத்துடன் படிக்க வந்த மாணவர்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது. 
ஆனால், அதே நேரம் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கும் ஊதியத்தின் அளவும் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு அதிகமான ஊதியத்துடன் கிடைத்த வாய்ப்புகள் மற்ற கல்லூரி மாணவர்களிடையே ஏக்கத்தையும், வியப்பையும் உருவாக்கியுள்ளது. அதே போன்று சிறந்த தனியார் கல்லூரிகள், தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நடக்கும் வளாகத்தேர்விலும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் சிறப்பான ஊதியத்தை  பெறுகின்றனர்.
மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், கூகுள், விப்ரோ, டி.சி.எஸ்., அக்செஞ்சர், கோக்னிசன்ட், இன்ஃபோசிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றன. இது சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும்,  பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடுகிறது. இந்த நிலை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.
ஆட்தேர்வில் மாற்றம்
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை கணக்கில் எடுத்தால் 3 ஆயிரத்தை கடந்து செல்லும். இதில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை பெறுவது சந்தேகமே. தற்பொழுது நிறுவனங்களும் ஆள் எடுப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றன. மாணவர்களை தேர்ந்தெடுத்து, பின்னர் அவர்களுக்கு பயிற்சியளித்து பணிக்கு அமர்த்துகின்றனர். பயிற்சிக்கு செலவழிக்கும் தொகை அதிகமாக இருப்பதால், பயிற்சி அளிப்பதை நிறுத்தி நேரடியாக பணிக்கு தயாராக இருப்பவர்களை மட்டும் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் நிலைப்பாட்டை கல்வியாளர்கள் குறை கூறுகின்றனர். ஏனெனில் வருடம்தோறும் புதிய புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து வருகிறது.
பாதிப்பிற்கான காரணம்
"இருக்கின்ற கல்வி நிறுவனங்கள் போதிய கட்டமைப்புகளோடு இல்லாத நிலையிலும், மாணவர்கள் வேலை பெறுவதற்கான திறன்களை மேம்படுத்த பல கல்வி நிறுவனங்கள் முயற்சி செய்யாத நிலையிலும், தேவைக்கு அதிகமாக கல்லூரிகள் உள்ள நிலையிலும் புதிய கல்லூரிகள் உருவாவது நாட்டின் எதிர்காலத்திற்கும் உகந்தது அல்ல" என்பதே கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரே துறை சார்ந்து அதிகமான கல்வி நிறுவனங்கள் உருவாவது பிற துறைகளின் வளர்ச்சியை பாதிப்பதோடு, சமூக வளர்ச்சியிலும் ஒரு சம நிலையை உருவாக்குவதில் மறைமுகமான தடைகளாக இவை இருக்கிறது.
சரிவிகித வளர்ச்சி அவசியம்
தமிழகத்தைப் பொறுத்த வரை 2005களில் 200களில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2013ல் 550ஐ கடந்து சென்றுவிட்டது. இந்த அபரிவித வளர்ச்சிக்கு தகுந்த வகையில் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடுவதும், குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் தொழில் நிறுவனங்களைப் போன்றது அல்ல கல்வி நிறுவனம். படிக்கும் இளையோர்களின் எதிர்காலம் அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமாக இருக்கிறது.

கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22800&cat=1

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உலகத் தாய்மொழிகள் தினம் - வையத் திறன் கொள்



தாய்மொழி மட்டும் கற்று வந்த நிலை மாற்றம் பெற்று கூடுதலாக வேலைக்காகவும், இருக்கும் இடத்திற்காகவும் மேலும் பல மொழிகளை கற்கும் சூழ்நிலையில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர்.
பல மொழிகள் அறிந்திருப்பது பயணிக்கும் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, ஒரே இடத்தில் இருந்து மொழிபெயர்த்தல், புரிந்து கொள்ளுதல், வணிகம் சார்ந்த செயல்கள் போன்றவற்றுக்காக அதிகமான மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இன்றைய தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது.
மொழி அறிமுகம்
மொழியை கற்றுக்கொள்வது மழலைப் பருவத்தில் ஆரம்பமாகிறது. குழந்தை முதலில் தனது தாய்மொழியை கற்றுக்கொள்கிறது. காரணம் குழந்தையைச் சுற்றி இருக்கும் அனைவரும் தாய்மொழியில் வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வதால், அதனைக் கேட்டு கேட்டு புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகிறது. அதற்கடுத்ததாக தொலைக்காட்சி, நண்பர்கள், பள்ளிக்கூடம் மூலமாக ஆங்கில மொழிக்கு அறிமுகமாகிறது.
ஒரு மொழி பேசும் இடத்தில் வளரும் குழந்தையை விட, சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்தில் வசிக்கும் பெற்றோரின் குழந்தைகள் கூடுதலாக மேலும் ஒரு மொழியை எளிதாக தெரிந்துகொள்கிறது. தமிழகத்தில் உள்ள ஒரு குழந்தை டில்லியில் வளரும்பொழுது வீட்டில் தமிழ், வெளியில் இந்தி, பள்ளியில் ஆங்கிலம் என மூன்று மொழிகளை எந்தவித கட்டாயமும் இல்லாமல் தானாகவே தெரிந்துகொள்கிறது.
வாய்ப்புகள் ஏற்படுத்தும் சூழல்
பெற்றோர்கள் தங்கள் பணிக்காக மாநிலம் விட்டு மாநிலம் மாறும்பொழுதோ அல்லது ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்லும்பொழுதோ பெற்றோரை விட குழந்தைகள் விரைவாக அந்த இடத்தில் பேசக்கூடிய மொழியை உள்வாங்கிக்கொள்கிறது. வெளிநாட்டுக்கு கல்விக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் பள்ளியில் அல்லது பள்ளி படிப்பின் இறுதி காலத்தில் தாங்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு ஏற்ப பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளை கற்றுக்கொள்கின்றனர்.
இதன்மூலம் ஒரு மாணவன் சர்வதேச அளவில் பணியாற்றுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறான். கட்டாயத்தால் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதற்கும்,  இயற்கையான சூழலால் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதற்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கிறது. முதலாவது உள்ளது சற்று கடினமானது, இரண்டாவது உள்ளது வழக்கம்போல் உள்ள ஒரு நிகழ்வைப் போன்றது. குழந்தைப் பருவத்தில் பல மொழிகளைக் கற்றுக்கொள்வது வயது, சூழ்நிலை, வாய்ப்புகள் போன்ற காரணிகளால் எளிதாகிறது.
மொழியை உணர வேண்டும்
பல மொழிகளைக் கற்கும்பொழுது அனைத்து மொழிகளிலும் சிறப்பான முறையில் எழுதுவதும், பேசுவதும் கட்டாயம். மேலோட்டமாக மொழிகளைக் கற்பதால் பயன் ஒன்றும் இல்லை.  கற்பதற்கான தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஒரே மொழி பேசும் மாநிலத்திற்குள் மட்டுமே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களும் தாய்மொழியைக் கடந்து மற்ற மொழியை கற்பது பல்வேறுபட்ட தகவல்களை அறிந்துகொள்வதற்கு துணைபுரியும்.
பல மொழிகள் கற்கும்பொழுது அந்தந்த மொழிகளிகளின் இலக்கியம், அறிவு சார் புத்தகங்கள், குறிப்பிட்ட மொழி பேசுபவர்களுடன் எளிதாக பழகுவது என பல நன்மைகள் கிடைக்கின்றன.  எந்த மொழி பேசினாலும் "தாய்மொழி போல சிறப்பான மொழி எதுவுமில்லை" என அந்தந்த மொழி பேசுபவர்களால் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து கொள்ளப்பட்ட உண்மை.
குழந்தைப் பருவத்தில் தாய்மொழியை தெளிவாக பேசுவதற்கும், பிழையின்றி எழுதுவதற்கும் உற்சாகப்படுத்தும் அதே நேரத்தில், மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதற்குமான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22730&cat=1

புதன், 12 பிப்ரவரி, 2014

நலமான வளத்தை தரும் வாசிக்கும் பழக்கம்




பொழுதுபோக்கு அம்சங்கள் பெருகப்பெருக பொழுதினை போக்குவது எளிதானதாகிவிட்டது. ஆனால் கடந்து சென்ற பொழுதுகள் கற்றுத்தந்தது என்ன என சிந்தித்தால் பலன் ஒன்றும் மிஞ்சியிருக்காது. இதற்கு முக்கிய காரணம் பயன்தராத பொழுதுபோக்கு அம்சங்கள்.
தற்போதுள்ள இளம் தலைமுறையினர் வளர்ச்சியை விரைவாக அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். நிதானமாக, தெளிவுடன் ஒரு செயலை செய்து படிப்படியாக அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலை மாறி வருகிறது. வாய்ப்புகள் இருக்கிறது வளமாகிக்கொள்வோம் என்று நினைப்பதில் தவறில்லை என்றாலும், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் நல்ல வழியை கொண்டது என்று சொல்ல முடியாத நிலையில் இன்றைய உலகின் நிலை இருக்கிறது.
நகர வாழ்க்கையின் நெருக்கடிகள் பணத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.  பொருளாதாரத்தால் சாதித்தவர்களை கண்டு பிறரும் அந்த பாதையை பின்பற்ற தொடங்குகின்றனர். வாழ்க்கையே பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும்தான் என்ற நினைப்பு மேலோங்கி இருக்கிறது. பொருளாதாரத்தைக் கடந்த வாழ்வியலை மறந்துகொண்டிருக்கிறோம்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அதிகமான ஊதியத்தை தரக்கூடிய படிப்பு, வேலையை வரவேற்கும் வகையில் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்கின்றனர். இதற்கு முக்கிய அடிப்படைக் காரணமாக "பொதுநலன், இரக்கம் போன்றவை குறைந்து வருவதும், சுயநலன் பெருகி வருவது" போன்றவை இருப்பதாக உளவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பொதுநலன், இரக்கம் போன்றவை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் நம்மைச் சுற்றி இருக்க வேண்டும் அல்லது அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மறைந்து வரும் வேளையில் சூழ்நிலைகள் இயற்கையாகவே அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. வளரும் இளம் தலைமுறைக்கு தேவையானதை கற்றுக்கொடுப்பதின் மூலமே சுயநலத்தை இல்லாததாக்க முடியும். கற்றுக்கொடுத்தல் என வரும்பொழுது அதில் பெரும் பங்கு வகிப்பது புத்தகங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி தெரிவதைப்போல் தெரிவதை மாற்றக்கூடிய திறன் புத்தகங்களுக்கு உண்டு. ஏனெனில் புத்தகங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான பார்வையையோ, கருத்துக்களையோ, கொள்கைகளையோ கொண்டிருப்பதில்லை. அவை மாறுபட்ட கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கும் பணியை வெற்றிகரமாக செய்கிறது. ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டோம் என்றால் அந்த புத்தகம் நாம் விரும்பும் நேரமெல்லாம் அதன் கருத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. மற்றொரு புத்தகத்தை படிக்கும்பொழுது அது வேறு ஒரு கோணத்தில் இந்த உலகை பார்ப்பதற்கு உதவி செய்கிறது.
படித்த மாறுபட்ட புத்தகங்கள் சிந்தனையைத் தூண்டுகிறது. சிந்தனை தேடுதலை உன்டாக்குகிறது. தேடுதல் நாம் அறிந்திராத பல கண்டுபிடிப்புகளை நம்மை கண்டுகொள்ள வைக்கிறது. ஒரு இயல்பான வாழ்க்கை முறையை மாற்றி செயல்திறன் வாய்ந்த புதிய வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லும் பணியை புத்தகங்கள் சிறப்புற செய்கின்றன. நாம் சந்தித்திராத மனிதர்களின் வாழ்க்கையை, தெரியாத அறிவியலை, புரியாத வரலாற்றை, உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கலையை, மரபுகளை புத்தகங்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது.
இளம் தலைமுறைக்கு மின் சாதனங்களிலிருந்து விடுதலை அளித்து புத்தகங்களை கையில் எடுக்க வைப்பது அவசியமாக இருக்கிறது. கண்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பாதிப்பைத் தரும் அவற்றை விட்டு, புத்தக வாசிப்பு பழக்கத்திற்கு அழைத்து வருவது ஒரே நாளில் வந்துவிடாது. அதனை சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்.
வாசிக்கும் திறனை மேம்படுத்த குழந்தை பருவத்தில் உள்ளவர்களுக்கு, ஆரம்பத்தில் படங்கள் நிறைந்த புத்தகத்தை அளித்து, விளையாடுவதற்கு அளிக்கலாம்.  தொடர்ந்து படிப்படியாக படக்கதைகள் அடுத்து புத்தகங்கள் என மேம்படுத்தலாம். இளம் வயது மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடம், துறை, கதைகள் குறித்த புத்தகங்கள் வாங்கி தினமும் 10 நிமிடமாவது ஒதுக்கி வாசிக்க ஆரம்பிக்கலாம். நிச்சயம் முன்னேற்றம் காணப்படும்.
எல்லோருக்கும் அவசியமானது தினந்தோறும் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்வது. நாளிதழை படிப்பதன் மூலம் வாசிக்கும் ஆர்வம் நிச்சயம் அதிகமாகும். ஆரம்பத்தில் விருப்பமான செய்திகளை மட்டும் படிக்கும் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல மற்ற செய்திகளையும் படிக்க தோன்றும். இதன் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வு புத்தக வாசிப்பிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
புத்தக வாசிப்பானது விழிப்புணர்வு, சிந்தனை, ஆர்வம், ரசிக்கும் தன்மை, ஆராயும் குணம், மனிதத்தன்மை, போராட்ட குணம் என வாழ்வியலின் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு களம்.
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22569&cat=1

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நண்பர்களைத் தேர்ந்துகொள்ளும் உரிமை




பயணங்கள் நமக்கு அளவில்லாத பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. மனிதனின் வாழ்க்கையில் இடப்பெயர்வானது பிறந்தது முதல் ஆரம்பித்துவிடுகிறது. மருத்துவமனை, வீடு, பள்ளிக்கூடம், பயிற்சி மையம், கல்லூரி, நிறுவனம் என ஒன்றிலிருந்து ஒன்றாக கிளை விட்டு வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. நகர்தல் பெரும்பாலும் இறுதியில் நகரத்திற்கு அழைத்து வந்துவிடுகிறது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்பொழுது புதியவற்றை கற்றுக்கொள்கிறோம். புதிய நண்பர்களை கண்டுகொள்கிறோம். நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒரு நாள் முழுவதற்குமான செயல்பாடுகளில் முந்தைய இடத்திற்கும், புதிய இடத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏற்படுகிறது.
பள்ளி செல்லும் மாணவராக இருந்தால் புதிய நண்பர்களுடன் ஆட்டோவில், பேருந்தில் பயணிக்கும் வாய்ப்பும், புதிய நட்பும் உருவாகிறது. மனது புதியவற்றோடு, பழைய இடங்கள், அங்கிருந்த நண்பர்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பார்க்கிறது. சில காலங்கள் முடிந்த பிறகு புதிய இடம் நம்மோடு நெருக்கமாகிவிடுகின்றது.  பள்ளிக் காலத்தை பொறுத்த வரை 5 லிருந்து 6ஆம் வகுப்புக்கும், 10லிருந்து பதினோறாம் வகுப்பிற்கு மாணவர்கள் செல்லும்பொழுதும் "நண்பர்களை பிரிகிறோமே" என்ற வருத்தம் மாணவர்களிடையே அதிகமாகிறது.
வேறு வகுப்பிற்கு சென்ற பிறகு, மதிய உணவு இடைவேளையில் பழைய நண்பர்களோடு சாப்பிடும் நேரங்கள் மகிழ்ச்சியானவை. "என்னுடைய வகுப்பில், நமது பழைய வகுப்பைப் போன்று பழகுவதற்கு இனிமையானவர்கள் இல்லை" என நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது பிரிந்த பொழுதுகளில் நடக்கும். கல்லூரியை நோக்கிய பயணம் நட்பின் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது.
பள்ளிக்காலம் ஒரு அடிப்படையை நமக்குள் உருவாக்கியிருக்கும். கல்லுரிக்காலம் வாழ்க்கைப் பயணத்திற்கான தெளிவை உண்டாக்குகிறது. எதிர்காலத்திற்கான முடிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு சிறிதளவாவது  கலந்து இருக்கிறது. நண்பர்களிடமிருந்து நல்ல பழக்க வழக்கங்களையும், கெட்ட பழக்க வழக்கங்களும் ஒட்டிக்கொள்ளும் காலமும் இந்தக் காலம் தான். தன்னிடம் புதிதாக வந்திருக்கும் பழக்கம் நன்மைக்கானதா அல்லது தீமைக்கானதா என்று மனம் ஆராய்வதில்லை மாறாக "நண்பர்களோடு இருக்கிறோமே அதுவே மகிழ்ச்சி" என்றுதான் மனம் திருப்தி கொள்கிறது.
பணிபுரியும் காலத்திலும், அதன் பிறகான வாழ்க்கையிலும் படிக்கும்பொழுது உருவான நண்பர்கள் நல் ஆலோசகர்களாகவும், கவலைகளை பகிர்ந்துகொள்வதற்கான நல்ல வடிகாலாகவும், முகியமாக மகிழ்ச்சியையும், மனதில் இளமையையும் உருவாக்கும் முக்கிய மையமாகத் திகழ்கிறார்கள். நட்பிற்குள்ளாக ஏற்படும் சிறு சிறு சச்சரவுகள் பெரிதாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு நண்பர்களுக்கு இருக்கிறது. நட்பின் பெயரால் வன்முறையையும், தவறான பாதையையும் தேர்ந்தெடுப்பது முன்னேற்றத்திற்கான தடைக்கல்.
நமது பெற்றோர் நம் மீதான நம்பிக்கையில் நமக்கு முடிவுகளை எடுப்பதற்கு உரிமை அளித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது நண்பர்களைத் தேர்ந்துகொள்ளும் உரிமை. நட்பு தேவைகளை மையப்படுத்தி இல்லாமல் உணர்வுகளையும், நல்ல எண்ணங்களையும், நாட்டிற்கும் சமுதயத்திற்கும்  நன்மை விளைவிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22521&cat=1