தாய்மொழி மட்டும் கற்று வந்த நிலை மாற்றம் பெற்று கூடுதலாக வேலைக்காகவும், இருக்கும் இடத்திற்காகவும் மேலும் பல மொழிகளை கற்கும் சூழ்நிலையில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர்.
பல மொழிகள் அறிந்திருப்பது பயணிக்கும் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, ஒரே இடத்தில் இருந்து மொழிபெயர்த்தல், புரிந்து கொள்ளுதல், வணிகம் சார்ந்த செயல்கள் போன்றவற்றுக்காக அதிகமான மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இன்றைய தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது.
மொழி அறிமுகம்
மொழியை கற்றுக்கொள்வது மழலைப் பருவத்தில் ஆரம்பமாகிறது. குழந்தை முதலில் தனது தாய்மொழியை கற்றுக்கொள்கிறது. காரணம் குழந்தையைச் சுற்றி இருக்கும் அனைவரும் தாய்மொழியில் வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வதால், அதனைக் கேட்டு கேட்டு புரிந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகிறது. அதற்கடுத்ததாக தொலைக்காட்சி, நண்பர்கள், பள்ளிக்கூடம் மூலமாக ஆங்கில மொழிக்கு அறிமுகமாகிறது.
ஒரு மொழி பேசும் இடத்தில் வளரும் குழந்தையை விட, சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்தில் வசிக்கும் பெற்றோரின் குழந்தைகள் கூடுதலாக மேலும் ஒரு மொழியை எளிதாக தெரிந்துகொள்கிறது. தமிழகத்தில் உள்ள ஒரு குழந்தை டில்லியில் வளரும்பொழுது வீட்டில் தமிழ், வெளியில் இந்தி, பள்ளியில் ஆங்கிலம் என மூன்று மொழிகளை எந்தவித கட்டாயமும் இல்லாமல் தானாகவே தெரிந்துகொள்கிறது.
வாய்ப்புகள் ஏற்படுத்தும் சூழல்
பெற்றோர்கள் தங்கள் பணிக்காக மாநிலம் விட்டு மாநிலம் மாறும்பொழுதோ அல்லது ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்லும்பொழுதோ பெற்றோரை விட குழந்தைகள் விரைவாக அந்த இடத்தில் பேசக்கூடிய மொழியை உள்வாங்கிக்கொள்கிறது. வெளிநாட்டுக்கு கல்விக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் பள்ளியில் அல்லது பள்ளி படிப்பின் இறுதி காலத்தில் தாங்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு ஏற்ப பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளை கற்றுக்கொள்கின்றனர்.
இதன்மூலம் ஒரு மாணவன் சர்வதேச அளவில் பணியாற்றுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறான். கட்டாயத்தால் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதற்கும், இயற்கையான சூழலால் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வதற்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கிறது. முதலாவது உள்ளது சற்று கடினமானது, இரண்டாவது உள்ளது வழக்கம்போல் உள்ள ஒரு நிகழ்வைப் போன்றது. குழந்தைப் பருவத்தில் பல மொழிகளைக் கற்றுக்கொள்வது வயது, சூழ்நிலை, வாய்ப்புகள் போன்ற காரணிகளால் எளிதாகிறது.
மொழியை உணர வேண்டும்
பல மொழிகளைக் கற்கும்பொழுது அனைத்து மொழிகளிலும் சிறப்பான முறையில் எழுதுவதும், பேசுவதும் கட்டாயம். மேலோட்டமாக மொழிகளைக் கற்பதால் பயன் ஒன்றும் இல்லை. கற்பதற்கான தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஒரே மொழி பேசும் மாநிலத்திற்குள் மட்டுமே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களும் தாய்மொழியைக் கடந்து மற்ற மொழியை கற்பது பல்வேறுபட்ட தகவல்களை அறிந்துகொள்வதற்கு துணைபுரியும்.
பல மொழிகள் கற்கும்பொழுது அந்தந்த மொழிகளிகளின் இலக்கியம், அறிவு சார் புத்தகங்கள், குறிப்பிட்ட மொழி பேசுபவர்களுடன் எளிதாக பழகுவது என பல நன்மைகள் கிடைக்கின்றன. எந்த மொழி பேசினாலும் "தாய்மொழி போல சிறப்பான மொழி எதுவுமில்லை" என அந்தந்த மொழி பேசுபவர்களால் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து கொள்ளப்பட்ட உண்மை.
குழந்தைப் பருவத்தில் தாய்மொழியை தெளிவாக பேசுவதற்கும், பிழையின்றி எழுதுவதற்கும் உற்சாகப்படுத்தும் அதே நேரத்தில், மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதற்குமான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22730&cat=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக