பொழுதுபோக்கு அம்சங்கள் பெருகப்பெருக பொழுதினை போக்குவது எளிதானதாகிவிட்டது. ஆனால் கடந்து சென்ற பொழுதுகள் கற்றுத்தந்தது என்ன என சிந்தித்தால் பலன் ஒன்றும் மிஞ்சியிருக்காது. இதற்கு முக்கிய காரணம் பயன்தராத பொழுதுபோக்கு அம்சங்கள்.
தற்போதுள்ள இளம் தலைமுறையினர் வளர்ச்சியை விரைவாக அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். நிதானமாக, தெளிவுடன் ஒரு செயலை செய்து படிப்படியாக அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலை மாறி வருகிறது. வாய்ப்புகள் இருக்கிறது வளமாகிக்கொள்வோம் என்று நினைப்பதில் தவறில்லை என்றாலும், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் நல்ல வழியை கொண்டது என்று சொல்ல முடியாத நிலையில் இன்றைய உலகின் நிலை இருக்கிறது.
நகர வாழ்க்கையின் நெருக்கடிகள் பணத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத்தால் சாதித்தவர்களை கண்டு பிறரும் அந்த பாதையை பின்பற்ற தொடங்குகின்றனர். வாழ்க்கையே பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும்தான் என்ற நினைப்பு மேலோங்கி இருக்கிறது. பொருளாதாரத்தைக் கடந்த வாழ்வியலை மறந்துகொண்டிருக்கிறோம்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அதிகமான ஊதியத்தை தரக்கூடிய படிப்பு, வேலையை வரவேற்கும் வகையில் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்கின்றனர். இதற்கு முக்கிய அடிப்படைக் காரணமாக "பொதுநலன், இரக்கம் போன்றவை குறைந்து வருவதும், சுயநலன் பெருகி வருவது" போன்றவை இருப்பதாக உளவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பொதுநலன், இரக்கம் போன்றவை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் நம்மைச் சுற்றி இருக்க வேண்டும் அல்லது அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மறைந்து வரும் வேளையில் சூழ்நிலைகள் இயற்கையாகவே அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. வளரும் இளம் தலைமுறைக்கு தேவையானதை கற்றுக்கொடுப்பதின் மூலமே சுயநலத்தை இல்லாததாக்க முடியும். கற்றுக்கொடுத்தல் என வரும்பொழுது அதில் பெரும் பங்கு வகிப்பது புத்தகங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி தெரிவதைப்போல் தெரிவதை மாற்றக்கூடிய திறன் புத்தகங்களுக்கு உண்டு. ஏனெனில் புத்தகங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான பார்வையையோ, கருத்துக்களையோ, கொள்கைகளையோ கொண்டிருப்பதில்லை. அவை மாறுபட்ட கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கும் பணியை வெற்றிகரமாக செய்கிறது. ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டோம் என்றால் அந்த புத்தகம் நாம் விரும்பும் நேரமெல்லாம் அதன் கருத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. மற்றொரு புத்தகத்தை படிக்கும்பொழுது அது வேறு ஒரு கோணத்தில் இந்த உலகை பார்ப்பதற்கு உதவி செய்கிறது.
படித்த மாறுபட்ட புத்தகங்கள் சிந்தனையைத் தூண்டுகிறது. சிந்தனை தேடுதலை உன்டாக்குகிறது. தேடுதல் நாம் அறிந்திராத பல கண்டுபிடிப்புகளை நம்மை கண்டுகொள்ள வைக்கிறது. ஒரு இயல்பான வாழ்க்கை முறையை மாற்றி செயல்திறன் வாய்ந்த புதிய வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லும் பணியை புத்தகங்கள் சிறப்புற செய்கின்றன. நாம் சந்தித்திராத மனிதர்களின் வாழ்க்கையை, தெரியாத அறிவியலை, புரியாத வரலாற்றை, உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கலையை, மரபுகளை புத்தகங்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது.
இளம் தலைமுறைக்கு மின் சாதனங்களிலிருந்து விடுதலை அளித்து புத்தகங்களை கையில் எடுக்க வைப்பது அவசியமாக இருக்கிறது. கண்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பாதிப்பைத் தரும் அவற்றை விட்டு, புத்தக வாசிப்பு பழக்கத்திற்கு அழைத்து வருவது ஒரே நாளில் வந்துவிடாது. அதனை சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்.
வாசிக்கும் திறனை மேம்படுத்த குழந்தை பருவத்தில் உள்ளவர்களுக்கு, ஆரம்பத்தில் படங்கள் நிறைந்த புத்தகத்தை அளித்து, விளையாடுவதற்கு அளிக்கலாம். தொடர்ந்து படிப்படியாக படக்கதைகள் அடுத்து புத்தகங்கள் என மேம்படுத்தலாம். இளம் வயது மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடம், துறை, கதைகள் குறித்த புத்தகங்கள் வாங்கி தினமும் 10 நிமிடமாவது ஒதுக்கி வாசிக்க ஆரம்பிக்கலாம். நிச்சயம் முன்னேற்றம் காணப்படும்.
எல்லோருக்கும் அவசியமானது தினந்தோறும் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்வது. நாளிதழை படிப்பதன் மூலம் வாசிக்கும் ஆர்வம் நிச்சயம் அதிகமாகும். ஆரம்பத்தில் விருப்பமான செய்திகளை மட்டும் படிக்கும் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல மற்ற செய்திகளையும் படிக்க தோன்றும். இதன் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வு புத்தக வாசிப்பிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
புத்தக வாசிப்பானது விழிப்புணர்வு, சிந்தனை, ஆர்வம், ரசிக்கும் தன்மை, ஆராயும் குணம், மனிதத்தன்மை, போராட்ட குணம் என வாழ்வியலின் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு களம்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22569&cat=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக