வியாழன், 27 மார்ச், 2014

ஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்



12 ஆம் வகுப்பு பரீட்சை முடிந்துவிட்டது. இனி அடுத்து படிக்கப்போகும் படிப்பைப்பற்றியோ, அல்லது எதிர்காலம் என்ன என்பது பற்றியோ வீட்டிலும், நண்பர்கள் மத்தியிலும், சந்திக்கும் நபர்களிடமிருந்தும் பலவிதமான ஆலோசனைகள் இலவசமாக கிடைத்தவாறு இருக்கும்.
நன்கு படித்த மாணவ மாணவிகள் பெரும்பாலும் இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்பதில் ஓரளவு தெளிவான முடிவுகளுடன் இருப்பர். இருந்தாலும் கல்லூரியை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பங்கள் இருக்கும். அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று சராசரி படிப்புடைய மாணவ மாணவிகள் பலரும் இருப்பார்கள்.
சூழ்நிலை
குறைவான மதிப்பெண்கள் எடுத்த பலரும் பொருளாதார வசதியின் காரணமாக நன்கொடைகளை வழங்கி நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்துவிடுகின்றனர், அதே போன்று நல்ல மதிப்பெண்கள் எடுத்த சிலர், கல்விக்கட்டணங்கள் மற்றும் கல்லூரியின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களால் செலவு செய்ய முடியாது, என்று வேறு படிப்புகளில் படிக்க வைப்பதும், அல்லது வேறு கல்லூரியை தேர்ந்தெடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நல்ல இலட்சியங்களுக்கும், சிறப்பான சாதனைகளுக்கும்  பொருளாதாரம் எப்பொழுதும் தடையாக இருந்துவிடுவதில்லை, என்பது பெரும் சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து நாம் கற்றிருக்கிறோம். பணம் இருக்கிறது என்பதற்காக படிக்க முடியாத பாடத்தை எடுத்துவிட்டு, அரியர்களுடன் பொழுதையும், பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்கும் எத்தனையோ பேரை நாமும் கண்டிருப்போம். பணம் இருக்கிறது என்றாலும், இல்லை என்றாலும், பெருமைக்காக படிக்காமல் தன்னால் முடிந்ததை படிக்கவேண்டும் என்பதை உணர வேண்டும். தன்னால் படிக்க முடிந்தது பொருளாதாரத்தால் தடை பட்டால் என்ன செய்வது?
பொருளாதாரம்
இன்றைக்கு நன்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது. வங்கிக்கடன் மூலம் தான் விரும்பும் படிப்பை படிக்கலாம். இருந்தாலும், சில வங்கிகளின் சில நிபந்தனைகள் அதையும் எட்டாக்கனியாக்கிவிடுகின்றது. சில நல்ல உள்ளங்களின் உதவியோடும், அறக்கட்டளைகளின் உதவித்தொகையின் மூலமும் சிலர் படிப்பைத்தொடர்கின்றனர்.
இவை தவிர்த்து தற்போதைய கல்லூரி நேர மாற்றங்களின் விளைவாக கூடுதலான நேரம் கிடைக்கிறது. இதன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பினை பெற்று அதனால் கிடைத்த பொருளாதாரத்தைக் கொண்டு முடிந்த அளவு கல்விச் செலவுகளை ஈடு செய்ய முயற்சிக்கலாம். இவை யாவும் கை கூடவில்லை என்றாலும், மனம் தளராமல் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல், கிடைத்த வாய்ப்பில் எது தனது விருப்பத்திற்கு ஏற்ற படிப்பினை சார்ந்து வருகிறது என கண்டுபிடித்து, அதனை வெற்றிகரமாக படித்து, பிறகு அதன் மூலம் பெறக்கூடிய பலன்களைக் கொண்டு தனது சரியான எண்ணங்களின் வழியாக வெற்றி நடை போடலாம்.
குழப்பங்கள்
படிப்பினை தேர்ந்தெடுத்து வைத்திருப்பவர்களை விட, மதிப்பெண்கள் வந்தவுடன் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்குத்தான் பல குழப்பங்கள் வரும். ஏனெனில் கல்லூரியை தேர்ந்தெடுப்பதா? அல்லது பாடத்தை தேர்ந்தெடுப்பதா? அல்லது பாடத்திற்கு ஏற்ற கல்லூரியை தேர்ந்தெடுப்பதா? எந்த ஊரில் படிப்பது? என பல கேள்விகள் அதிக அளவில் இவர்களை துளைக்கும். ஏனெனில் பலரும் ஏன் படிக்கிறேன், எதற்கு படிக்கிறேன் என்று தெரியாமலேயே படிப்பை தேர்ந்தெடுத்து, அது குறித்த பெரிய கவலையோ, கலக்கமோ இன்றி இறுதியாண்டு வரை வந்துவிடுகின்றனர். இறுதியாண்டில் வேலை, அடுத்து என்ன செய்வது என்பது போன்ற சிந்தனைகள் வரும்போதுதான், தங்கள் படிப்பைப்பற்றி பெரிய அளவில் சிந்திக்கின்றனர். அப்படி சிந்திப்பவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களே.
இப்படிப்பட்ட குழப்பத்தில் உள்ளவர்கள் எந்த ஓரு சூழ்நிலையிலும் அதிக செலவுகளை ஏற்படுத்தும் பொறியியல் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்துவிடக்கூடாது. சில இலட்சங்கள் செலவு செய்துவிட்டு, அந்தத் துறை பிடிக்கவில்லை, என அதனை விட்டுவிட்டு வேறு துறையை தேர்ந்தெடுப்பது மிகவும் வலி தரக்கூடியது. ஆம், ஏனெனில் பெற்றோர் ஓவ்வொரு பருவத்திற்கும் எவ்வளவு கடினப்பட்டு பணம் ஏற்பாடு செய்து தர வேண்டியது இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.  பிள்ளையின்  எதிர்காலம் பற்றிய மகிழ்வான எண்ணத்துடன் பல நெருக்கடிகளைச் சந்தித்து கடன் பெற்று, எவ்வளவு ஆசையுடன் நம்மை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களை துன்பப்பட வைத்து படித்துவிட்டு, வேண்டாம் என்று சொல்வதை விட, நிதானத்துடன் தயக்கம் குறைத்து நல்ல ஆலோசனையைப் பெற முயற்சிக்கலாமே.
தோல்வி
எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்ததை விடவும், மிகுந்த துன்பத்தை தரக்கூடியதாக கருதப்படுவது தேர்வில் தோல்வி அடைவதாகும். தோல்வி அடைவதனால் ஏற்படும் கவலையை விட, அந்த தோல்விக்கு பிறர் கூறும் அறிவுரைகள், மேலும் பயத்தை உண்டாக்கி விடுகிறது. அது போல சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள், தேர்வில் அடையும் தோல்வியை, தங்கள் குடும்பத்தின் தோல்வியாக கருதி, தோல்வியடந்த உள்ளத்தை மேலும் காயப்படுத்திவிடுகின்றனர். உண்மையில், வாழ்வும் வாய்ப்பும் அத்துடன் முடிந்துவிடுவதில்லையே. பள்ளி செல்லாதவர்கள் எல்லாம் சாதிக்கும்பொழுது, தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சாதிப்பதும் எளிதானது அல்லவா.  
தோல்வியை மான, அவமானமாகக் கருதுவதை பெற்றோரும், உறவினர்களும், மாணவர்களும் கைவிட வேண்டும். தோல்வி என்பது நிலையானது அல்ல, கடந்து வரக்கூடியதுதான் என்று எண்ண வேண்டும். தேர்வில் ஓருவேளை தோல்வி அடைந்தாலும், மாணவர்களும், இத்துடன் நம் எதிர்காலம் முடிந்துவிட்டது என் சிந்திக்காமல் அடுத்து வரும் வாய்ப்புகள், தங்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்று நம்பிக்கையும், விடா முயற்சியும் கொள்ளவேண்டும்.
மதிப்பெண்களை வைத்து வாழ்க்கை இல்லை என்பதை பெற்றோரும், மாணவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுடைய நல்ல விருப்பங்களை, இலட்சியங்களை வைத்துதான், தங்களுடைய சிறப்பான எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். மதிப்பெண்களை வைத்து அல்ல. உற்சாகத்தையும், ஊக்கத்தையும் என்றும் கைவிடாமல் போராடினால், வெற்றி நமதே!
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23213&cat=1

ஞாயிறு, 16 மார்ச், 2014

மதிப்பீடுகள்: உங்களை அறிவதற்கு




தங்கள் முன்னேற்றத்திற்காக தங்களைப் பற்றிய நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து அதனை சீர்படுத்திக்கொள்ள முயற்சி செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகளே, அவரை அறிவதற்கு முக்கியமானதாக இருக்கிறது.
பள்ளி, கல்லூரியில் சேர்வதாக இருந்தாலும், பணிக்கு சேர்வதாக இருந்தாலும் அங்கே கூறப்படும் முக்கியமான வார்த்தைகள் "பையன்  ஒழுக்கமானவன்", "வாய்ப்பு கிடைத்தால் கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவாள்", "நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு நடப்பான்" போன்றவை ஆகும். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரும் மதிப்பும், நம்பிக்கையுமே அவைகளைக் கூறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த மாணவன் புத்தி கூர்மையானவன், இந்த இளம் பெண் திறமையானவள் என மற்றவர் கூறுவதை விட, நம்மை நாமே அந்த உயர்ந்த  நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும்.  அதற்கு தன்னைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தன்னைப் பற்றி அறிய வேண்டுமானால் அதற்கு மற்றொருவரின் கருத்துக்களும் தேவைப்படுகிறது.
மதிப்பீடு செய்வது எப்படி?
நீங்கள் உங்களின் உண்மையான திறன்களை நீங்களாக அறிந்துகொள்ள முடியாது. உங்களைப் பற்றி உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு சில முயற்சிகள் தேவைப்படுகிறது. உங்களை சுற்றி உள்ளவர்கள் மற்றும் உங்களோடு நீண்ட நாட்களாகப் பழகியவர்களுக்கு உங்கள் குணங்கள், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி மாறுபடுகிறது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களிடம், நீங்களாக கேட்டால் மட்டுமே சொல்வார்கள். உங்களைப் பற்றி அறிந்துகொள்ள மாற்றுக் கருத்து உடையவரும் கூட உதவி புரிவார். ஏனெனில் உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை கூறக்கூடியவர், உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் அவர்களிடமிருந்து உங்கள் முன்னேற்றத்திற்கான சமரசமில்லாத தகவல்களை மட்டுமே தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். அதனால் அவர்கள் கூறும் கருத்துக்கு நீங்கள் கோபம் கொள்ள வேண்டியதில்லை, அதே போன்று அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று எடுத்துக்கொள்ளவும் வேண்டாம்.
கருத்துக்களை ஆராயுங்கள்
மற்றவர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை எல்லாம் வைத்து, கூறப்பட்டவைகளில், உண்மைத் தன்மை இருக்கிறதா? என்பதை வெளிப்படையாக ஆராயுங்கள். பெறப்பட்ட கருத்துக்கள் பொதுவானவையாக இருக்கிறதா அல்லது கூறியவரின் தனிப்பட்ட பார்வையில் இருக்கிறதா என்பதை கண்டுகொள்ளுங்கள். பொதுவான, சமூகத்திற்கு நன்மை தரும் கருத்துக்களே நாட்டிற்கும், நாம் வாழும் ஊருக்கும் பெருமை சேர்க்கும்.
தனிப்பட்ட நபரின் பார்வையில் இருக்கும் கருத்துக்கள், நமக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. பெறப்பட்ட கருத்துக்களை செயல்படுத்தினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை ஆராயுங்கள். இது போன்ற செயல்பாடுகளினால், பிறர் எந்த மாதிரியான முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள் என ஆராய்வது எளிதாக முடிவுகளை எடுக்க உதவும்.
மாற்றங்களை செயல் வடிவத்திற்கு கொண்டு வரும்பொழுது ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துங்கள், நடைமுறைப்படுத்தப்பட்டதின் விளைவுகள் உடனடியாக தெரியாவிட்டாலும், சில காலங்களில் உங்களுக்கு நிச்சயமான மறு மலர்ச்சியை தரும்.
கல்விமலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23092&cat=1

வியாழன், 6 மார்ச், 2014

சுமைகளிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை...



பள்ளியில் படிக்கும் காலத்தில் எடை அதிகமானதும், பெரிய அளவிலுமான புத்தகப் பைகளை சுமந்து செல்லும் மாணவர்களை சில வருடம் முன்பு வரை பார்த்திருக்கலாம். சமச்சீர் கல்வி வந்த பிறகு பைகளின் அளவு சற்று குறைந்திருந்தாலும், முன்னர் இருந்த நிலைக்கு பெரிய மாற்றம் இல்லை என்ற நிலையிலேயே தான் பைகளின் அளவு இருக்கிறது.
மாணவர்களின் பைகளில் புத்தகங்கள், எழுது பொருட்கள் பெட்டி,  ஜாமெட்ரி பாக்ஸ் (கணித வடிவியல் பெட்டி),  ஓவிய பொருட்கள் என இருக்கும்.  மேலும் ஒரு சில மாணவர்களின் பைகள் கதை புத்தகங்கள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்கள் என பல வகையான பொருட்களால் நிரம்பி இருக்கும். மாணவர்களுக்கு மாணவர்கள் இது வேறுபட்டாலும் கொண்டு வரும் பொருட்கள் அதிகம் என்பது பொதுவான ஒன்று.
ஒன்று போதும்
ஆனால் கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஒரு நோட்டு, ஒரு எழுதுகோல் என மாணவர்களின் பொருட்களின் அளவு மிகவும் சுருங்கி விடுகிறது. அதிலும் ஒரு சில மாணவர்கள் ஒன்றிரண்டு தாள்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்துவிடுகின்றனர். அப்படி வரும் மாணவர்களிலும் பேனாவை ஒழுங்காக கொண்டு வராத மாணவர்கள் வகுப்பிற்கு 2 பேராவது இருக்கும் நிலை பல கல்லூரிகளில் காணப்படுகிறது.
கல்லூரியில் நோட்டின் தேவை என்பது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது மாணவர்களின் நினைப்பாக இருக்கிறது. "குறிப்பெடுக்க விருப்பமில்லை என்ற போது, நோட்டு எதற்காக கொண்டு வர வேண்டும்?" என்பது மாணவர்களிடமிருந்து வரும் கேள்வி.
உதவும் தொழில்நுட்பம்
நோட்டு மற்றும் பேனாவுடன் எளிதாக உடன் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு சில பொருட்கள் கல்விக்கு உறுதுணையாக இருக்கும். அவற்றில் முதலாவது நம்முடன் இருப்பது அலைபேசி. தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடையே "ஸ்மார்ட் ஃபோன்" பயன்படுத்தும் பழக்கம் பரவலாகி வருகிறது. இது போன்ற நவீன அலைபேசிகளில் பேசுவதை பதிவு செய்யும் வசதி இருந்தாலும் அது அவ்வளவு எளிதான செயலாக இருப்பதில்லை. அலைபேசிகளில் பல செயலிகள் இருந்தாலும் மாணவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
மாணவ மாணவியரிடையே புதிய தொழிநுட்பம் மற்றும் மாற்றங்களின் அடிப்படையில் தங்களையும் மாற்றிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் சட்டைப் பையில் அல்லது காற்சட்டையில் வைக்கக்கூடிய வகையில் இருப்பது "பென் டிரைவ்" அல்லது "மெமரி கார்டு" தகவல்களை பெற்றுச் சென்று கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ பயன்படுத்தி பாட சம்பந்தமான தகவல்களைப் பெறலாம்.
தேவைக்கு மட்டும்
மாற்றங்கள் பாடப்புத்தகத்திற்கான சுமைகளை குறைத்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர்களே அவற்றை எளிதாக மாற்றியிருக்கலாம்.  தொழில்நுட்பங்களை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தொழில்நுட்பம் இல்லாமலும் பழக வேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொழில்நுட்பங்கள் மிகவும் தேவையாக இருக்கின்ற நேரத்தில் செயல்படாமல் நம்மை ஏமாற்றலாம். அதற்கு ஏற்ற வகையிலும் தயாராக இருக்க வேண்டும்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22929&cat=1

ஞாயிறு, 2 மார்ச், 2014

பொதுநலன் காணும் கல்லூரிக் காலம்




எதிர்காலத்தின் தேவைகளுக்கான தீர்வுகள் கல்லூரியின் வாசலிலிருந்து தொடங்குகிறது என்பது பெற்றோர், மாணவர்களின் எண்ணமாக இருக்கிறது. கல்லூரியில் குறிப்பிட்ட பாடத்தை தேர்ந்தெடுத்து அந்த பட்ட படிப்பை முழுவதுமாக முடித்து, வேலைவாய்ப்போடு வெளிவரவேண்டும் என்ற குறிக்கோளோடு கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கின்றனர்.
அதே போன்று இருக்கும் கல்லூரிகளில் பெரும்பான்மையானவை, பாடத்திட்டத்தை மட்டும் வழங்கினால் போதும் என்று திருப்திபட்டுக்கொள்கின்றன. இயந்திரத்தனமாக பாடத்திட்டத்தை மட்டும் படித்து வெற்றி பெற்றால் போதும் என்ற இந்த நிலை படிக்கும் மாணவரின் வளர்ச்சியை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கிறது. மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்வதற்காக என்று ஆரம்பிக்கப்பட்ட  கல்வி நிறுவனங்களில் ஒரு சில வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது.
இது போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பட்டங்கள், வெறும் தாள்களாகவே இருக்கிறது. அறிவுசார் வளர்ச்சிக்கும், திறன் சார்ந்த மேம்பாட்டுக்கும் உதவாத பாடத்திட்டங்களை படித்த காலங்கள், செலவளித்த பொருள், கடந்த வயது என வருங்காலத்திற்கான வாய்ப்புகளில் தளர்ச்சியை உருவாக்குகிறது.
பாடங்களை சிறப்பாக வழங்கி வரும் கல்வி நிறுவனங்களில் பல படிப்பிற்கு தேவையானதைக் கடந்து வெளியே செல்வதில்லை. படிப்பினைக் கடந்து அதாவது கல்லூரிக்கு வெளியேயும் படிக்கும் மாணவரை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு தேவையான வாழ்க்கைக்கல்வியை வழங்கும் அல்லது அதனை ஊக்குவிக்கும் கல்லூரிகள் மிகக்குறைவு.
ஒரு சில கல்லூரிகளில் என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றோடு அந்தந்த சுற்றுப்புறங்களுக்கு ஏற்ற வகையில் பொது சேவைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இது போன்ற குழுக்கள் சுத்தம், சுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை செய்கின்றனர். இதன் மூலம் மாணவர்களின் நேரம் உபயோகமாக செலவழிக்கப்படுவதோடு, அவர்களின் திறனும் வளர்ச்சி அடைகிறது.
மாணவர்களின் பொதுநலப்பண்பு மேம்படுவதுடன் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கிறது. வருங்கால சமுதாயத்தை பொறுப்புள்ளதாக்க இளம் தலைமுறையை சிறப்பான முறையில் உருவாக்குவது கட்டாயமாக இருக்கிறது. அதற்கு பெரிதும் துணை புரிவது படிக்கும்போது கற்றுக்கொள்ளும் பொதுநல சேவைகள்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22883&cat=1