ஞாயிறு, 2 மார்ச், 2014

பொதுநலன் காணும் கல்லூரிக் காலம்




எதிர்காலத்தின் தேவைகளுக்கான தீர்வுகள் கல்லூரியின் வாசலிலிருந்து தொடங்குகிறது என்பது பெற்றோர், மாணவர்களின் எண்ணமாக இருக்கிறது. கல்லூரியில் குறிப்பிட்ட பாடத்தை தேர்ந்தெடுத்து அந்த பட்ட படிப்பை முழுவதுமாக முடித்து, வேலைவாய்ப்போடு வெளிவரவேண்டும் என்ற குறிக்கோளோடு கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கின்றனர்.
அதே போன்று இருக்கும் கல்லூரிகளில் பெரும்பான்மையானவை, பாடத்திட்டத்தை மட்டும் வழங்கினால் போதும் என்று திருப்திபட்டுக்கொள்கின்றன. இயந்திரத்தனமாக பாடத்திட்டத்தை மட்டும் படித்து வெற்றி பெற்றால் போதும் என்ற இந்த நிலை படிக்கும் மாணவரின் வளர்ச்சியை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கிறது. மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்வதற்காக என்று ஆரம்பிக்கப்பட்ட  கல்வி நிறுவனங்களில் ஒரு சில வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது.
இது போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பட்டங்கள், வெறும் தாள்களாகவே இருக்கிறது. அறிவுசார் வளர்ச்சிக்கும், திறன் சார்ந்த மேம்பாட்டுக்கும் உதவாத பாடத்திட்டங்களை படித்த காலங்கள், செலவளித்த பொருள், கடந்த வயது என வருங்காலத்திற்கான வாய்ப்புகளில் தளர்ச்சியை உருவாக்குகிறது.
பாடங்களை சிறப்பாக வழங்கி வரும் கல்வி நிறுவனங்களில் பல படிப்பிற்கு தேவையானதைக் கடந்து வெளியே செல்வதில்லை. படிப்பினைக் கடந்து அதாவது கல்லூரிக்கு வெளியேயும் படிக்கும் மாணவரை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு தேவையான வாழ்க்கைக்கல்வியை வழங்கும் அல்லது அதனை ஊக்குவிக்கும் கல்லூரிகள் மிகக்குறைவு.
ஒரு சில கல்லூரிகளில் என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றோடு அந்தந்த சுற்றுப்புறங்களுக்கு ஏற்ற வகையில் பொது சேவைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இது போன்ற குழுக்கள் சுத்தம், சுகாதாரம், கல்வி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை செய்கின்றனர். இதன் மூலம் மாணவர்களின் நேரம் உபயோகமாக செலவழிக்கப்படுவதோடு, அவர்களின் திறனும் வளர்ச்சி அடைகிறது.
மாணவர்களின் பொதுநலப்பண்பு மேம்படுவதுடன் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கிறது. வருங்கால சமுதாயத்தை பொறுப்புள்ளதாக்க இளம் தலைமுறையை சிறப்பான முறையில் உருவாக்குவது கட்டாயமாக இருக்கிறது. அதற்கு பெரிதும் துணை புரிவது படிக்கும்போது கற்றுக்கொள்ளும் பொதுநல சேவைகள்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22883&cat=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக