பள்ளியில் படிக்கும் காலத்தில் எடை அதிகமானதும், பெரிய அளவிலுமான புத்தகப் பைகளை சுமந்து செல்லும் மாணவர்களை சில வருடம் முன்பு வரை பார்த்திருக்கலாம். சமச்சீர் கல்வி வந்த பிறகு பைகளின் அளவு சற்று குறைந்திருந்தாலும், முன்னர் இருந்த நிலைக்கு பெரிய மாற்றம் இல்லை என்ற நிலையிலேயே தான் பைகளின் அளவு இருக்கிறது.
மாணவர்களின் பைகளில் புத்தகங்கள், எழுது பொருட்கள் பெட்டி, ஜாமெட்ரி பாக்ஸ் (கணித வடிவியல் பெட்டி), ஓவிய பொருட்கள் என இருக்கும். மேலும் ஒரு சில மாணவர்களின் பைகள் கதை புத்தகங்கள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்கள் என பல வகையான பொருட்களால் நிரம்பி இருக்கும். மாணவர்களுக்கு மாணவர்கள் இது வேறுபட்டாலும் கொண்டு வரும் பொருட்கள் அதிகம் என்பது பொதுவான ஒன்று.
ஒன்று போதும்
ஆனால் கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஒரு நோட்டு, ஒரு எழுதுகோல் என மாணவர்களின் பொருட்களின் அளவு மிகவும் சுருங்கி விடுகிறது. அதிலும் ஒரு சில மாணவர்கள் ஒன்றிரண்டு தாள்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு கல்லூரிக்கு வந்துவிடுகின்றனர். அப்படி வரும் மாணவர்களிலும் பேனாவை ஒழுங்காக கொண்டு வராத மாணவர்கள் வகுப்பிற்கு 2 பேராவது இருக்கும் நிலை பல கல்லூரிகளில் காணப்படுகிறது.
கல்லூரியில் நோட்டின் தேவை என்பது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது மாணவர்களின் நினைப்பாக இருக்கிறது. "குறிப்பெடுக்க விருப்பமில்லை என்ற போது, நோட்டு எதற்காக கொண்டு வர வேண்டும்?" என்பது மாணவர்களிடமிருந்து வரும் கேள்வி.
உதவும் தொழில்நுட்பம்
நோட்டு மற்றும் பேனாவுடன் எளிதாக உடன் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு சில பொருட்கள் கல்விக்கு உறுதுணையாக இருக்கும். அவற்றில் முதலாவது நம்முடன் இருப்பது அலைபேசி. தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடையே "ஸ்மார்ட் ஃபோன்" பயன்படுத்தும் பழக்கம் பரவலாகி வருகிறது. இது போன்ற நவீன அலைபேசிகளில் பேசுவதை பதிவு செய்யும் வசதி இருந்தாலும் அது அவ்வளவு எளிதான செயலாக இருப்பதில்லை. அலைபேசிகளில் பல செயலிகள் இருந்தாலும் மாணவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
மாணவ மாணவியரிடையே புதிய தொழிநுட்பம் மற்றும் மாற்றங்களின் அடிப்படையில் தங்களையும் மாற்றிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் சட்டைப் பையில் அல்லது காற்சட்டையில் வைக்கக்கூடிய வகையில் இருப்பது "பென் டிரைவ்" அல்லது "மெமரி கார்டு" தகவல்களை பெற்றுச் சென்று கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ பயன்படுத்தி பாட சம்பந்தமான தகவல்களைப் பெறலாம்.
தேவைக்கு மட்டும்
மாற்றங்கள் பாடப்புத்தகத்திற்கான சுமைகளை குறைத்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர்களே அவற்றை எளிதாக மாற்றியிருக்கலாம். தொழில்நுட்பங்களை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தொழில்நுட்பம் இல்லாமலும் பழக வேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொழில்நுட்பங்கள் மிகவும் தேவையாக இருக்கின்ற நேரத்தில் செயல்படாமல் நம்மை ஏமாற்றலாம். அதற்கு ஏற்ற வகையிலும் தயாராக இருக்க வேண்டும்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=22929&cat=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக