ஞாயிறு, 25 மே, 2014

உயிர் காக்க உதவும் மருத்துவ உதவித் துறை




பாராமெடிக்கல் துறை என்பது மருத்துவர்களுக்கு உதவியாக செயல்படும் துறையாகும். பாராமெடிக்கல் படித்தவர்கள் மருத்துவர்களுக்கு உதவியாக மருத்துவம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் செயல்படுகின்றனர்.
போர்களில் காயம்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தத் துறை நவீன காலத்தில் பொதுவான மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் மாறி உள்ளது. தற்போது விபத்து மற்றும் அவசர உதவி சிகிச்சைகளுக்கு பாராமெடிக்கல் படிப்புகளை படித்தவர்களே துணைபுரிகிறார்கள்.
 
1960களில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் மருத்துவர்களோடு துணை புரிவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முறையில் பயிற்சியுடன் கூடிய மருத்துவ உதவித்துறையாக உருவாக்கம் பெற்றது.  இத்துறை செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அவசர உதவி ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். 
 
மருத்துவ உதவியாளர்களின் பணி
 
முதலுதவி வாகனமான ஆம்புலன்சில் பணியாற்றுபவர்கள் பாரா மெடிக்கல் பணியாளர்களே. நோயுற்றவர் அல்லது விபத்தில் காயம்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்து அவரது உயிரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். இரத்தப்போக்கை நிறுத்தி, காயங்களுக்கு கட்டுப்போட்டு பேராபத்திலிருந்து காயம்பட்டவரை பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கிறார்.
 
மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைக் கையாள்வதற்கு உதவுகிறார். நோயாளிக்கு உடனிருப்பதிலும், அவரின் உடல்நிலையைக் கண்காணிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறார்.
 
பணிச்சூழல்
 
இன்றைய நிலையில் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனையில் மட்டுமல்லாமல் முதலுதவி வாகனம், விமானம் போன்றவற்றோடு காவல்துறை, பாதுகாப்புத்துறை, பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத்துறை  என பொதுமக்களோடு தொடர்புடைய பல்வேறு துறைகளிலும் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
 
தேவையான திறன்கள்
 
விரைவாக முடிவெடுக்கும் திறன்
தைரியமாக செயல்படுதல்
தெளிவான திட்டமிடல்
விரைவான தகவல் தொடர்புத்திறன்
அதிக அக்கறை
 
கல்வி
 
சான்றிதழ், பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலைகளில் படிப்புகள் வழங்கப்படுகிறது.
 
இளநிலையில் Ophthalmic Technician, Medical Lab Technology, Radiodiagnosis, Radiotherapy, Physiotherapy and Occupational Therapy, Audiology & Speech Therapy, Operation Theatre Technician, Hospital Documentation & Record Keeping போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது.
 
பட்டய படிப்பாக Ophthalmic Technology, OT Technician, Dental Mechanics, Radioimaging, Medical Lab Technology போன்ற பாடப்பிரிவுகளும் வழங்கப்படுகின்றது.

- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24079&cat=1

ஞாயிறு, 18 மே, 2014

சேமிப்பு எனும் தற்பாதுகாப்பு


நாள்தோறும் எத்தனையோ நிகழ்வுகளைக் காண்கிறோம். ஓவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு செயலை அடிப்படையாகக்கொண்டே நடைபெறுகின்றன. அந்த செயல்களுக்கான காரணங்களை ஆராய்வது மிகவும் தேவையாக இருக்கிறது. ஏனெனில் அவைதான் எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்கான பாடங்களை தனக்குள் கொண்டு விளங்குகிறது.
சிறு வயதில் கற்றுக்கொள்ளும் நல்ல பழக்கவழக்கங்கள் பிற்காலத்தில் நலமுடன் வாழவும், பிரச்சனைகளை தவிர்க்கவும், மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பான பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் சேமிக்கும் பழக்கம். சேமிப்பினை குறித்து சிறு வயதில் இருந்து வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் அறிவுறுத்தி ஊக்கப்படுத்தும் நிலை அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது.
 
மகிழ்ச்சியே தொடக்கம்

"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட மாணவர்களின் சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
 
தந்தையிடமோ, தாயிடமோ ஐநூறு ரூபாய் வேண்டும் என அவசியமான தேவைகளுக்கு அவசரமாக கேட்கும்பொழுது கிடைக்காமல் போகலாம். ஆனால்   சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகள் சிக்கலானதாக இருக்க வாய்ப்பில்லை. அவசியமான அவசரத் தேவைகளுக்கு உதவக்கூடியது சேமிப்பு மட்டுமே. இது போன்ற நிகழ்வுகளில் சிறு வயதில் ஏற்படும் மகிழ்ச்சி வளரும் பருவத்தில் சேமிப்பின் மீதான ஈர்ப்பினை தொடர்ந்து அதிகரிக்கச் செய்யும்.

வாழ்க்கை உணர்த்தும்
நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் சோறு ஒரே பருக்கையால் ஆனது அல்ல.  எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து  தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு  உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.
 
ஏனெனில் நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.

- இலா. தேவா
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23931&cat=1

ஞாயிறு, 11 மே, 2014

வாழ்க்கையும் வாய்ப்புகளும் தாராளமாக இருக்கிறது: தயங்காமல் நடைபோடுவோம்



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவர் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. எடுக்கும் மதிப்பெண்களை வைத்து, எந்த கல்லூரியில் சேரலாம்? அல்லது எந்த கல்லூரியில் நமக்கு இடம் தருவார்கள்? என திட்டமிடுதல் நடைபெறுகிறது.
மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும்பொழுது மாணவர்களுக்கு மன வருத்தமும், பெற்றோருக்கு அலைச்சலுக்கான அழுத்தமும் சேர்ந்து வந்து விடுகிறது. மதிப்பெண் குறைவாக எடுக்கும்பொழுது விரும்பும் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக,  சிபாரிசுக்கு ஆள் தேடும் படலமும் ஆரம்பித்துவிடுகிறது.
 
மதிப்பெண் நிறைவாக பெற்றிருந்தாலும் "இன்னும் கொஞ்சம் மதிப்பெண்கள் பெற்றால் இந்த கல்லூரியில் இடம் பெறுவதற்கு பதில், அந்த கல்லூரியில் இடம் பெற்று விடலாமே" என மனம் ஏக்கமடையவும் செய்கிறது.
 
திட்டமிட்டவர்களுக்கும், தெளிவாக இருப்பவர்களுக்கும் இந்த படிப்பினை, இங்கே படிக்க வேண்டும் எனவும், முன்னரே விசாரித்து தகவல்களைத் திரட்டி வைத்திருப்பவர்களுக்கு கல்லூரிக் கல்வி எளிதான தொடக்கமாக அமைகிறது.
 
மதிப்பெண்களை வைத்து எதிர்காலத்தை தேர்ந்தெடுப்பதைவிட, மனதின் விருப்பங்களை வைத்து படிப்பினை தேர்ந்தெடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் சாதனையாளராக வரமுடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருந்தாலும்; மதிப்பெண்களை வைத்தே படிப்பை தேர்வு செய்யும் நிலையே அதிகமாகக் காணப்படுகிறது.
 
தேர்வு முடிவுகளுக்கும், விண்ணப்பங்கள் வழங்குவதற்கான இறுதி நாளுக்குமான இடைவெளி மிகவும் குறைவாக இருப்பதனால் படிப்பினையும், கல்லூரியையும் தேர்ந்தெடுப்பதில் பதற்றமும், பரபரப்பும் சேர்ந்துகொள்கிறது. பொறியியல் கலந்தாய்வு, மருத்துவக் கலந்தாய்வு, விவசாயப் படிப்புகளுக்கான கலந்தய்வு என அதுவா? இதுவா? என அலைச்சலும், முடிவெடுப்பதில் குழப்பமுமாக ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்.
 
எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும், சாதிக்க விரும்பும் சாதனையாளர்கள் தனக்கேற்ற வகையில் எதிர்காலத்தை அமைத்துக் கொள்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி. மதிப்பெண்களை வைத்து எடை போடாமல், விருப்பமான துறைகள், ஆர்வத்தை வைத்தும், எதிர்கால லட்சியங்களை வைத்தும் மாணவர்களை தரம் பிரிப்போம். ஏனெனில் சேரக்கூடிய படிப்பு மட்டுமே எதிர்காலம் அல்ல. அதனையும் கடந்து வாழ்க்கை இருக்கிறது; வாய்ப்புகள் இருக்கிறது.

கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23806&cat=1

திங்கள், 5 மே, 2014

வகுப்பு புறக்கணிப்பு: மகிழ்ச்சியான தருணமா?



கல்லூரிக்காலங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானவை. பள்ளி என்னும் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு இடத்திலிருந்து, அதை விட குறைவான கட்டுப்பாடுகள் உள்ள கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிறோம் என்ற எண்ணங்களும், மாலை நேர மற்றும் அதிகாலை நேர படிப்புகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளலாம் என்ற மன நிலையும், விரும்பிய உடைகளை உடுத்தலாம் என்ற ஆர்வமும் கல்லூரி படிப்பின் மீது தீராத ஆவலை ஏற்படுத்தி விடுகிறது.
உற்சாகமும், துள்ளலும் இருக்கும் கல்லூரிக்காலத்தில் மிகவும் முக்கியமானது மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பது. வகுப்புகளில் கலந்துகொள்ளாமல் கல்லூரி உணவகங்கள், திரையரங்குகள் போன்றவற்றில் வகுப்பு நேரங்களை செலவிடுவது போன்ற செயல்களை ஒரு சில மாணவ மாணவிகள் மகிழ்ச்சிகரமாக செய்வார்கள்.  கல்லூரிக்காலத்தில் பள்ளிக்காலத்தைப் போலவே கேலி, கிண்டல் போன்றவை இருந்தாலும். வகுப்புகளை புறக்கணிப்பது என்பதை பள்ளிக் காலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது (ஒரு சில பள்ளிகளைத் தவிர).
காலையில் வகுப்பிற்குள் சென்றால் சிறிது நேர இடைவெளி பிறகு மதிய உணவு மற்றும் மாலை நேர இடைவெளி என 3 இடைவெளிகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது. மேலும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு கண்காணிப்பை மீறி செல்வது என்பது மிகவும் கடினமான, சிக்கலை உண்டாக்கக் கூடிய செயலாக இருக்கும். ஒரு வகுப்பில் கலந்துகொண்டு, அடுத்த வகுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பது போன்ற செயல்களையும் நடைமுறைப்படுத்த முடியாது.
கல்லூரியில் அப்படியல்ல. ஒரு வகுப்புக்கும் மற்றொரு வகுப்புக்கும் இடையில் வெளியே செல்வதற்கும், கல்லூரி உணவகத்திற்கு செல்வதற்கும் ஒரு சில கல்லூரிகளில் வெளியே செல்வதற்கும் கூட அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் வகுப்புகளுக்கு செல்வதை திட்டமிட்டுக் கொள்கின்றனர். கொடுக்கப்படும் சுதந்திரம், வகுப்பை புறக்கணிப்பதற்கு பயன்படுகிறது என்பது சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதோ என கவலை தரலாம். ஆனால் பிடிக்காத வகுப்பில் மனம் ஒன்றி கவனிக்காமல் இருப்பதை விட உற்சாகத்தோடு வெளியில் சுற்றுவது மகிழ்ச்சியானதாக தெரிகிறது.
கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளும், அதில் ஏற்படும் நட்புகளும் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து வந்து உற்சாகத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. அந்த நினைவுகளில் வகுப்பு புறக்கணிப்புகள் முக்கிய பங்காற்றலாம். விதிகளை மீறுவதில் சுகம் இருந்தாலும், விதிகள்தான் வளர்ச்சியின் பாதையில் நம்மை அழைத்துச்செல்லும் என்பதையும் கல்லூரி மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எதுவுமே அளவோடு இருப்பதுதான் நலம். அளவுக்கு மீறினால் ஆபத்துகள் உருவாகலாம்.  
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23647&cat=1