கல்லூரிக்காலங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானவை. பள்ளி என்னும் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு இடத்திலிருந்து, அதை விட குறைவான கட்டுப்பாடுகள் உள்ள கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிறோம் என்ற எண்ணங்களும், மாலை நேர மற்றும் அதிகாலை நேர படிப்புகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளலாம் என்ற மன நிலையும், விரும்பிய உடைகளை உடுத்தலாம் என்ற ஆர்வமும் கல்லூரி படிப்பின் மீது தீராத ஆவலை ஏற்படுத்தி விடுகிறது.
உற்சாகமும், துள்ளலும் இருக்கும் கல்லூரிக்காலத்தில் மிகவும் முக்கியமானது மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பது. வகுப்புகளில் கலந்துகொள்ளாமல் கல்லூரி உணவகங்கள், திரையரங்குகள் போன்றவற்றில் வகுப்பு நேரங்களை செலவிடுவது போன்ற செயல்களை ஒரு சில மாணவ மாணவிகள் மகிழ்ச்சிகரமாக செய்வார்கள். கல்லூரிக்காலத்தில் பள்ளிக்காலத்தைப் போலவே கேலி, கிண்டல் போன்றவை இருந்தாலும். வகுப்புகளை புறக்கணிப்பது என்பதை பள்ளிக் காலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது (ஒரு சில பள்ளிகளைத் தவிர).
காலையில் வகுப்பிற்குள் சென்றால் சிறிது நேர இடைவெளி பிறகு மதிய உணவு மற்றும் மாலை நேர இடைவெளி என 3 இடைவெளிகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது. மேலும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு கண்காணிப்பை மீறி செல்வது என்பது மிகவும் கடினமான, சிக்கலை உண்டாக்கக் கூடிய செயலாக இருக்கும். ஒரு வகுப்பில் கலந்துகொண்டு, அடுத்த வகுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பது போன்ற செயல்களையும் நடைமுறைப்படுத்த முடியாது.
கல்லூரியில் அப்படியல்ல. ஒரு வகுப்புக்கும் மற்றொரு வகுப்புக்கும் இடையில் வெளியே செல்வதற்கும், கல்லூரி உணவகத்திற்கு செல்வதற்கும் ஒரு சில கல்லூரிகளில் வெளியே செல்வதற்கும் கூட அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் வகுப்புகளுக்கு செல்வதை திட்டமிட்டுக் கொள்கின்றனர். கொடுக்கப்படும் சுதந்திரம், வகுப்பை புறக்கணிப்பதற்கு பயன்படுகிறது என்பது சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதோ என கவலை தரலாம். ஆனால் பிடிக்காத வகுப்பில் மனம் ஒன்றி கவனிக்காமல் இருப்பதை விட உற்சாகத்தோடு வெளியில் சுற்றுவது மகிழ்ச்சியானதாக தெரிகிறது.
கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளும், அதில் ஏற்படும் நட்புகளும் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து வந்து உற்சாகத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. அந்த நினைவுகளில் வகுப்பு புறக்கணிப்புகள் முக்கிய பங்காற்றலாம். விதிகளை மீறுவதில் சுகம் இருந்தாலும், விதிகள்தான் வளர்ச்சியின் பாதையில் நம்மை அழைத்துச்செல்லும் என்பதையும் கல்லூரி மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எதுவுமே அளவோடு இருப்பதுதான் நலம். அளவுக்கு மீறினால் ஆபத்துகள் உருவாகலாம்.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23647&cat=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக