பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவர் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. எடுக்கும் மதிப்பெண்களை வைத்து, எந்த கல்லூரியில் சேரலாம்? அல்லது எந்த கல்லூரியில் நமக்கு இடம் தருவார்கள்? என திட்டமிடுதல் நடைபெறுகிறது.
மதிப்பெண்கள் குறைவாக எடுக்கும்பொழுது மாணவர்களுக்கு மன வருத்தமும், பெற்றோருக்கு அலைச்சலுக்கான அழுத்தமும் சேர்ந்து வந்து விடுகிறது. மதிப்பெண் குறைவாக எடுக்கும்பொழுது விரும்பும் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, சிபாரிசுக்கு ஆள் தேடும் படலமும் ஆரம்பித்துவிடுகிறது.
மதிப்பெண் நிறைவாக பெற்றிருந்தாலும் "இன்னும் கொஞ்சம் மதிப்பெண்கள் பெற்றால் இந்த கல்லூரியில் இடம் பெறுவதற்கு பதில், அந்த கல்லூரியில் இடம் பெற்று விடலாமே" என மனம் ஏக்கமடையவும் செய்கிறது.
திட்டமிட்டவர்களுக்கும், தெளிவாக இருப்பவர்களுக்கும் இந்த படிப்பினை, இங்கே படிக்க வேண்டும் எனவும், முன்னரே விசாரித்து தகவல்களைத் திரட்டி வைத்திருப்பவர்களுக்கு கல்லூரிக் கல்வி எளிதான தொடக்கமாக அமைகிறது.
மதிப்பெண்களை வைத்து எதிர்காலத்தை தேர்ந்தெடுப்பதைவிட, மனதின் விருப்பங்களை வைத்து படிப்பினை தேர்ந்தெடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் சாதனையாளராக வரமுடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருந்தாலும்; மதிப்பெண்களை வைத்தே படிப்பை தேர்வு செய்யும் நிலையே அதிகமாகக் காணப்படுகிறது.
தேர்வு முடிவுகளுக்கும், விண்ணப்பங்கள் வழங்குவதற்கான இறுதி நாளுக்குமான இடைவெளி மிகவும் குறைவாக இருப்பதனால் படிப்பினையும், கல்லூரியையும் தேர்ந்தெடுப்பதில் பதற்றமும், பரபரப்பும் சேர்ந்துகொள்கிறது. பொறியியல் கலந்தாய்வு, மருத்துவக் கலந்தாய்வு, விவசாயப் படிப்புகளுக்கான கலந்தய்வு என அதுவா? இதுவா? என அலைச்சலும், முடிவெடுப்பதில் குழப்பமுமாக ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்.
எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும், சாதிக்க விரும்பும் சாதனையாளர்கள் தனக்கேற்ற வகையில் எதிர்காலத்தை அமைத்துக் கொள்கிறார்கள் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி. மதிப்பெண்களை வைத்து எடை போடாமல், விருப்பமான துறைகள், ஆர்வத்தை வைத்தும், எதிர்கால லட்சியங்களை வைத்தும் மாணவர்களை தரம் பிரிப்போம். ஏனெனில் சேரக்கூடிய படிப்பு மட்டுமே எதிர்காலம் அல்ல. அதனையும் கடந்து வாழ்க்கை இருக்கிறது; வாய்ப்புகள் இருக்கிறது.
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=23806&cat=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக