ஞாயிறு, 13 ஜூலை, 2014

மகிழ்ச்சியும், வெற்றியும் பெற சிந்தனை, சுதந்திரத்தை சீர்பட அளிப்போம்



பொதுவாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்தும், சூழ்நிலைகளைப் பொறுத்தும் மாறுபட்ட அர்த்தங்களைத் தரும். ஆனால் ஒரு வார்த்தை அனைத்து இடங்களிலும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த வார்த்தை தான் சுதந்திரம்.
கண்காணிப்பு
ஒரு இயந்திரமானது, அதற்கு கொடுக்கப்பட்ட வேலையை அதன் செயல்பாட்டுத் திறனுக்கு ஏற்ப மனித உதவியோடு செய்து முடிக்கின்றது. அது எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கான பணியை செய்கிறது. அவ்வவ்பொழுது ஏற்படும் பழுதுகளை சரிசெய்து, தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், தேவையான பொருள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
 
செயல்பாடு

மனிதன் தான் கடக்கும் நிகழ்வுகளை, கோர்க்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட வேலைகளை ஏதோ ஒரு சக்திக்கு உட்பட்டு செய்கிறான். அந்த வேலைகள் திட்டமிடப்பட்ட செயல்களை நோக்கி அவனை நகர்த்துகின்றன. ஒரே செயலை மறுபடி மறுபடி செய்யும்பொழுது ஒரு வகையில் அது எளிதான வேலையாக இருந்தாலும், பலருக்கும் அது விருப்பமிகு வேலையாக இருப்பதில்லை. ஏனெனில் மூளை ஒரே வேலைக்கு மட்டுமே தன்னை தயர்படுத்திக்கொள்வதால் வேறு செயல்பாடுகள் குறித்த சிந்தனைகள் தூண்டப்படுவதில்லை. இதன் காரணமாக ஒரு கைதியின் நிலையில், ஒரே செயல்பாட்டை செயலாற்றும் மனிதனின் சிந்தனை அறிவும் ஒரு குறுகிய செயல்பாட்டிற்குள்ளாக முடங்கிவிடுகிறது.
 
இதனை உணர்ந்தவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காகவும், தான் சார்ந்த நிறுவனம் அல்லது இடத்தின் வளர்ச்சிக்காகவும் புதிய செயல்பாடுகளை நோக்கி தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதுவே சுதந்திரத்தை நோக்கிய பயணம். மாணவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையும் இதைப் போன்றுதான் உள்ளது.
 
நெருக்கடி

மாணவர்களுக்கு அளிக்கப்படும் நெருக்கடி, மாபெரும் பணிகளை செய்யக்கூடிய நபருக்கு இருக்கக்கூடிய  நெருக்கடிகளை விட மிகவும் அதிகம் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் மாணவர்கள் காலை எழுந்தது முதல் படிப்பு, படிப்பு என இரவு தூங்கும் வரை படிப்பை தவிர எதுவும் இல்லை என்ற நிலையிலேயே எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை 14 ஆண்டுகள் கடந்துவிடுகின்றனர்.
 
பள்ளிக்காலத்தில் அதீத கட்டுப்பாட்டுடன் வளரும் மாணவர், கூண்டிலிருந்து விடுபட்ட பறவையானது உலகை மகிழ்ச்சியுடன் வலம் வருவதைப் போன்று, கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்கின்றான். இந்த மகிழ்ச்சியும் பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
 
எது சுதந்திரம்?

சுதந்திரம் என்ற ஒன்று அது கிடைக்கும் நபரைப் பொருத்து மாறுபடுகிறது.   ஒரு கட்டுப்பாடற்ற இளைஞனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், இனிப்புகளை உண்பதையே இலட்சியமாகக் கொண்ட ஒரு சிறுவனுக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும், நன்மை செய்வதற்காக போராடும் ஒரு போராளிக்கு கிடைக்கும் சுதந்திரத்துக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு.
 
சுதந்திரம் என்பது முழுவதுமாகக் கிடைக்கும்பொழுது அது தவறுகளுக்கே வழிவகுக்கும் என்பது நாம் அறிந்ததே. அளிக்கப்படும் சுதந்திரம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கிடைக்கும்பொழுதே அதற்கான உண்மையான அர்த்தம் கிடைக்கின்றது. இன்றைய நிலையில் அனைத்து தரப்பினரும் இதுகுறித்து ஏங்கினாலும்,  அதிகமான ஏக்கத்திற்கும், வாய்ப்பிற்கும் ஏங்குபவர்களாகவும், அளிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருப்பவர்கள் குழந்தைகளே.
 
ஏனெனில் கற்கவேண்டியது பாடப்புத்தகத்தை மட்டுமல்ல, அதையும் கடந்து இருக்கிறது என்பதனை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும் பொருளாதார நோக்கம் கொண்டவர்களாக  மட்டுமே குழந்தைகளை உருவாக்குகிறோம். அவர்களின் இதர ஆசைகளை நிராசைகளாக்கி விடுகின்றோம்.
 
முன்னுரிமை

ஒவியனாக வேண்டும் என்று ஆசைப்படும் மாணவனுக்கு கொடுக்கப்படும் உற்சாகம், ஆதரவை விட பொறியியல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், ஆதரவு அதிகமாக இருக்கிறது. இருவரையும் ஒரே தராசில் இருபுறமும் வைக்க தயங்குகிறோம். வருமானமே ஒரு மனிதனின் தன்மையை வெளிப்படுத்துவதாக எண்னுகிறோம். பணம் மட்டுமே மகிழ்ச்சியை தருகிறது என்று நம்மை நாமே பணத்திற்கு அடிமையாக்கி விடுகிறோம்.
 
படிப்பையும் கடந்து

குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே முக்கியமல்ல என்பதை உணர்த்தி உறவுகளோடு பழகுவதற்கான உரிமையை அளிப்போம். நமது உறவினர் யார் என்பதனை அறிய பள்ளிக்கு விடுப்பு எடுத்து உறவுகளின் சுக, துக்கங்களில் அவர்களையும் பங்கெடுக்க வைப்போம். ஏனென்றால் இன்றைய குழந்தைகளுக்கு அனுதினமும் சந்திக்கும் வெயில் குறித்த புரிதல்கள் கூட இல்லை என்பது எவ்வளவு வருத்தத்தை அளிக்கக்கூடியது.
 
வாழ்க்கையின் நிகழ்வுகளில் அவர்களையும் பங்கெடுக்க வைத்து அவர்களின் கருத்துக்களை அனுதினமும் கேட்டு வந்தாலே அவர்கள் வாழ்வு சிறக்கும். வருங்காலம் அவர்களை பொருளாதாரத்தை நோக்கி மட்டும் தள்ளாமல் மகிழ்ச்சியை நோக்கி தள்ளும். கோடி ரூபாய் கொடுத்தும் கிடைக்காத மன நிம்மதி, சிறுசிறு நிகழ்வுகளின் மூலம் கிடைக்கும்.
 
சீர்பட செதுக்குவோம்

குழந்தைகளுக்கான சுதந்திரம் அவர்களின் சிந்தனையில் தொடங்குகிறது. சிந்தனைகளை சீர்பட செதுக்கினால் அழகான வாழ்வு மலரும். ஒரேயடியாக கட்டிப்போட்டால் அது மழுங்கிப்போகும். போர்க்களத்தின் சண்டையில் கூர்மையிழந்த வாளுக்கு இருக்கும் மதிப்பானது, துருப்பிடித்து கிடக்கும் வாளுக்கு கிடைப்பதில்லை. மாலையும், மரியாதையும், புகழ் பாடல்களும் போர் வாளுக்கே உண்டு. அதனை உணர்ந்தவர்களாக தேவைப்படும் சுதந்திரத்தை அளித்து குழந்தைகளை வளர்ப்போம்.
- இலா. தேவா 
கல்வி மலர் 
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25108&cat=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக