திங்கள், 28 ஜூலை, 2014

பயணம்: பல்லவபுரம் சந்தையும் இனிப்புக் கிழங்கும்...

சிறு குறிப்பு

சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்று பல்லவபுரம். பேச்சு வழக்கிலும், பெரும்பாலான ஆவணங்களிலும் தற்போது பல்லாவரம் என்று அழைக்கப்படுகிறது. அரசின் பெயர் பலகையிலும், ஆவணங்களிலும் மட்டுமே பல்லவபுரம் என்று குறிப்பிடப்பட்டாலும், பேருந்துகளில் பல்லாவரம் என்று  குறிப்பிடுவதின் மர்மம் புரியவில்லை.  

பல்லவபுரம் என்றே நாமும் மெய் பெயரால் அழைக்கலாம். மருவியது வேண்டாமே. இந்த ஊர் இன்று நேற்றல்ல 7ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்றின் பக்கங்களில் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. பல்லவர்களின் பங்களிப்பின் விளைவாக பல்லவபுரம் என்று இந்த ஊர் இன்றளவும் பெயர் பெறுகிறது. கால ஓட்டம் இந்த ஊரை மேலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றிவிட்டது.

ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் இவ்வூரின் ஒரு பகுதியில் பயிற்சிக்களமாக உருவாக்கப்பட்ட இடம், தற்போதும் நமது இராணுவ பயிற்சித்தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் அனைவரும் அறிந்த விமான நிலையம் இதன் எல்லையில் அமைந்திருப்பது, ஊரினை உலக வரைபடத்திலும் குறிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சந்தை

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு. அது வெளிப்படுத்தப்படாமல் மறைந்தோ அல்லது மறந்தோ போயிருக்கலாம். ஆனாலும் ஒரு சில பெருமைகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றி வைத்திருக்கும். அப்படிப்பட்ட பெருமைகளுள் ஒன்று பல்லவபுரத்தில் கூடும் வெள்ளிக்கிழமை சந்தை. 

ஒரு நூற்றாண்டை நெருங்கும் மரபுவழிமிக்க இச்சந்தை, இன்றும் பெருமளவில் மக்கள் கூடும் இடமாக நிலைபெற்றிருக்கிறது. சந்தை குறிந்து அறிந்திருந்தாலும் நேரில் பார்க்கக்கூடிய வாய்ப்பு பொன்னேரியைச் சேர்ந்த நண்பரால்  சாத்தியமாயிற்று.

 ஊரகப்பகுதியிலிருந்து வந்தாலும், நகர வாழ்வின் அம்சங்கள் நமது பார்வையை நகரின் இயக்கம் சார்ந்தே நம்மை பயணிக்க வைக்கிறது. அதே போன்று சந்தையில் நடை போட ஆரம்பித்தது முதல், இங்கேயும் இப்படியா என்ற மகிழ்ச்சியை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் சந்தையின் சந்தடிகளைவிட பல்வேறு பொருட்களின் விற்பனையின் தாக்கம்.

வளம் தரும் செடிகள்

சந்தையின் ஆரம்பத்தில் காலணிகள், கரும்புச்சாறு கடை, பழக்கடைகளை கடந்து சென்றவுடன் பூஞ்செடிகள், மர நாற்றுகள் என பசுமையினை பரப்பும் செடிகளிண் விற்பனை மும்முர நடந்துகொண்டிருந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றோரு புறம் இது சாத்தியமா? என்ற கேள்வியையும் எழுப்ப தவறவில்லை. 

ஏனெனில் சென்னை வீடுகளால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. சாலை ஓரங்களில் மரங்கள் இருந்தாலும், வீட்டில் மண் தரையையோ, பல வகைப்பட்ட செடி வகைகளையோ காண்பது அரிதாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ரோஜா செடிகளை மட்டுமல்லாது மல்லிகை கொடி நாற்றுகளையும், மாதுளம் செடிகளையும் மக்கள் வாங்குவது கண்டு, தனிப்பட்ட நகர பிம்பங்களையும் கடந்து, இங்கே இயற்கையை உயிரோடு வைத்திருக்கும் மனிதர்களின் மாண்பு மகிழ வைத்துவிட்டது.

மின்னணு சாதனங்கள்

சந்தை ஏன் நிலைபெற்று இருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக விற்பனைக்கு வரும் பொருட்களின் பங்களிப்பே முழு முதல் காரணமாக இருக்கும் என்பது என் கருத்து. வெட்ட வெளியில் எல்.சி.டி. தொலைக்காட்சி 5,000 முதல் கிடைப்பது ஆச்சரியத்தை அளித்தது. கனிணி, பழைய அலைபேசிகள், கனிணி சார்ந்த பொருட்கள் என மின்னணு பொருட்களும் எளிதாக குறைத்து பேசி வாங்கும் வகையிலே உள்ளது.

இனிப்புக் கிழங்கு

மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இனிப்புக் கிழங்கு. பார்வைக்கு சாதாரணமாக இருந்தால் எளிதாக கடந்து சென்றுவிடுவோம். ஆனால் அதன் பிரம்மாண்டம் கண்களை அகல விரிய வைக்கிறது. ஏறத்தாழ இரண்டே கால் அடி உயரமும், முக்கால் அடி விட்டமும் கொண்ட உருண்டை வடிவத்தில் இருந்தது அந்தக் கிழங்கு. கொல்லி மலையில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவும், அது முழு விளைச்சலை அடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் விற்பனையாளர் கூறினார்.

இந்த இனிப்புக் கிழங்கு மூட்டு வலி,  உடல் சூடு, செரிமானப் பிரச்சனைகளை தீர்ப்பதாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து வாங்குவதாகக் கூறினார். இரண்டு கிழங்குகளை வைத்துள்ள இவர், மூர் சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதாகக் கூறினார். 20 நாட்களுக்கு கெடாமல் இருப்பதால் விற்பனையில் பிரச்சினை இருப்பதில்லையாம். 

ஒரு சிறு துண்டின் விலை 5 ரூபாய். ஆளுக்கொரு துண்டினை வாங்கி உண்டோம். இனிப்பாகவே இருந்தது. அதன் இனிப்பு சுவை இளநீரின் சுவையைப் போன்று இருந்தது. இருந்தாலும் அந்த இனிப்பின் மேல் எனக்கு சற்று சந்தேகமே....

மேலும்...

புதிய, பழைய பாத்திரங்கள், பீரோக்கள், கட்டில்கள், மர மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகள், விளையாட்டுப் பொருட்கள், மளிகை சாமான்கள், நடமாடும் தேநீரகங்கள், பழைய காசுகளை விற்பவர்கள், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள், கோழிகள், பறவைகள், அலுவலக உபயோகங்களுக்கான பழைய பொருட்கள், சுத்தியல், கடப்பாறை போன்ற இரும்பு பொருட்கள், கயிறு வகைகள், இசை உபகரணங்கள் என சந்தை பல்வேறு  பொருட்களால் நிரம்பி வழிகிறது.

வழி

பல்லவபுரம் ரயில் நிலையத்திலிருந்து நடந்தால் 5 நிமிடத்தில் சந்தையை அடையலாம். விமான நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் நடந்து செல்லலாம். தண்டவாளத்தின் அருகே தடதடக்கும் ரயில் ஓசையினை மறையச் செய்யும் வகையில் சந்தையின் குரலோசைகள் இருக்கின்றன.

காண ஆவலா?

சந்தை 1 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இருபுறமும் கடைகளாலும், சாலை முழுவதும் மக்களுமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுகிறது.


வெளிச்சாலையில் நிறுத்தும் வாகனங்களுக்கும் கட்டணம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக