"காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா" என்று மகாகவி பாரதியார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாடினார். ஆனால் காலை, மாலை, இரவு என அனைத்து காலங்களும் படிப்பாக மட்டுமே ஆகிவிட்டது. இந்த நிலை உருவாக என்ன காரணம்?
தமிழகத்தைவிட குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இத்தாலி, ஸ்வீடன், போலந்து, பெலாரஸ், பின்லாந்து போன்ற நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவிலான தங்கப் பதக்கங்களை பெற்று வருகின்றன. ஆனால் அதனை விட பன்மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தகுதிச் சுற்றுகளுக்கே தகுதி பெற முடியாமல் தடுமாறும் நிலையில்தான் இன்றளவும் இருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற பதக்கங்களின் அடிப்படையிலான தரவரிசையில் 53வது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் இடப்பரப்பளவில் 7 வது இடத்திலும், மக்கள் தொகையின் அடிப்படையில் 2வது இடத்திலும் இருக்கும் நமக்கு இது பெரும் அவமானம் இல்லையா.
உலகக்கோப்பை
கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் பெரும் உற்சாகத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறது. போட்டிகள் குறித்து ஒவ்வொரு நாளும் அலசி, ஆராய்ந்து வரும் நாம், இந்தியா இதில் பங்கெடுக்க முடியாமல் போனது குறித்து கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் நம் வீட்டிலிருந்து ஒரு வீரர் உருவாக வேண்டும் என நினைத்திருப்போமா.
"விளையாடினால் உடலில் அடிபடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். வெயில் அதிகம்" என்று கூறும் அதே பெற்றோர்தான், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செலவதற்கே மோட்டார் பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர். "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பதும் "உடல்நலமே பெரும் சொத்து" என்பதும் நம் முன்னோர்கள் கூறிச்சென்ற உடல்நலம் குறித்த பழமொழிகள். ஆனால் இன்று நாம் சுவரை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்து வருகின்றோம்.
உடற்பயிற்சி
நிகழ்கால இந்தியா "இளம் இந்தியா" என வர்ணிக்கப்படுகிறது. ஆனால் வருங்கால இந்தியாவை "நோய்மிகு இந்தியா"வாக மாறிவிடக்கூடிய சூழலில் நாம் இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை 45, 000 கோடி ரூபாய். ஆனால் இதில் பள்ளிக்கூடங்கள் சார்ந்த உடற்பயிற்சிக்கு எத்தனை ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்.
12 முதல் 16 வயதுடைய, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் பருவம் தான் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கக் கூடிய பருவம். இப்பருவத்தில் மாணவர்களை நெறிப்படுத்த உடற்பயிற்சி அவசியம் தேவை. ஆனால் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே பள்ளிப் பருவத்தை கடந்து செல்லும் தலைமுறையாக, இந்தத் தலைமுறை இருக்கிறது.
மாணவர் வளம்
தமிழகம் முழுவதும் 56,573 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மாபெரும் சாதனைகளை படைக்கக்கூடிய அளவில்லா சக்தி கொண்டது. ஆனால் இந்த சக்தி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளை தவிர்த்து, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மட்டும் 16,328 பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை கூட இல்லாமல் 3,700 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
250 மாணவருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், கூடுதலாக 180 மாணவர் இருந்தால் இன்னொரு ஆசிரியர் இடமும் வழங்கலாம் என விதிமுறையில் உள்ளது.
ஆசிரியர்கள் இல்லை
23 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது. அரசினர் நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்கள் 23,500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையினாலும், விளையாட்டு உபகரணங்கள், உதவிகள் போதுமான அளவில் வழங்கப்படாததும் அரசிற்கு பொருளாதார இழப்பின்மை போன்று தெரிந்தாலும். அனைத்துவிதமான திறமைகளை கொண்டிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வழிகாட்டுதல் இல்லாமல் விளையாட்டினை மறந்தேவிடுகின்றனர்.
வேண்டுகோள்
கடந்த 2013 ஜூன் மாதத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கல்வித்துறை அமைச்சரிடம் "விளையாட்டுக்கென தனி இணை இயக்குனர் நியமிக்க வேண்டும். ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தலா ஒரு உடற்கல்வி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிரேடு-1 உடற்கல்வி இயக்குனர்கள், கிரேடு-2 உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம், உடற்கல்விக்கு பாடப்புத்தகம்" என, பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. கருத்துக்கள் குறித்து எந்த அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது?
கலைக்கல்லூரிகள்
கல்லூரிகள் 2 விழுக்காட்டு இடத்தை விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான கல்லூரிகள் பின்பற்றுவதில்லை. இதனை பல்கலைக்கழகங்களும், யூ.ஜி.சி.யும் கண்காணிக்க வேண்டும். அதிலும் ஒரு சில கல்லூரிகளில் விளையாட்டு வீரர்கள் என்றால் "இந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது, அதனால் இந்த படிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று வேறு ஒரு பாடப்பிரிவை திணிக்கும் நிலை உள்ளது.
இதானால் விளையாட்டு ஆர்வத்துடன் கல்லூரியில் படிக்க வரும் மாணவர் "படிப்பா, விளையாட்டா" என்ற குழப்ப நிலையில் இறுதியில் விளையாட்டை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.
முக்கியத்துவம்
"அனைத்து மாவட்டங்களில் செயல்படும் விளையாட்டு மைதானங்களும் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்க முன்வர வேண்டும்." என்கிறார் தென் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர்.
பொறியியல் கல்லூரிகள்
தங்கள் மாணவர்கள் படித்து வெற்றியோடு வெளியேற வேண்டும் என்று பெரும்பாலான கல்லூரிகளும், திறனுள்ளவர்களாக, வேலைவாய்ப்பை பெற தகுதியுள்ளவர்களாக வெளியேற வேண்டும் என்று சில கல்லூரிகளும் நினைக்கின்றன. ஆனால் மிகச் சொற்பமான பொறியியல் கல்லூரிகளே "விளையாட்டு வீரர்களாகவும் திகழ வேண்டும்" என்று மிக ஆர்வத்துடன் பயிற்சியை வழங்கி, போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகிறார்கள்.
550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், அரசு வழங்கும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு 500 இடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு கல்லூரிக்கு ஒரு இடம் என்ற அளவில் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கல்லூரிக்கு ஒரு விளையாட்டு வீரர் இருந்தால் போதுமா? ஒரு விளையாட்டினை விளையாடுவதற்கு 10 பேருக்கு மேற்பட்ட விளையாட்டுக்குழு தேவைப்படுகிறது. பிறகு எப்படி விளையாட்டு மேம்படும்.
மருத்துவக் கல்லூரிகள்
உடல் நலமிக்க இந்தியாவை உருவாக்குவதில் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மற்றவர்களின் உடல்நலம் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்க கற்றுத்தரும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், விளையாடுவதற்கான வாய்ப்புகளை அளிப்பதில் பின் தங்கியே இருக்கின்றன.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடின் மூலமே, மாணவர்களுக்கு மருத்துவ துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதனை உணர்ந்துகொள்ளலாம்.
சரிவிகித வளர்ச்சி
"அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும்" என்ற நோக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதியை முதல்வர் ஒதுக்கீடு செயததாக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கல்வி வளர்ச்சி மட்டும் தனியாக இருப்பது, ஒரு கை மட்டும் நல்ல வளர்ச்சியையும், மற்றொரு கை குறைவான வளர்ச்சியும் பெற்றதற்கு ஈடாகும். உடல்நலம் சார்ந்த உடற்பயிற்சியும் இணைந்தால்தான் அது சரிவிகித வளர்ச்சி.
2014-15 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்
உயர் கல்வித்துறை - ரூ.3,627 கோடி
பள்ளி கல்வித் துறைக்கு - ரூ.17,731 கோடி
இலவச புத்தகங்கள்- ரூ.264.35 கோடி
இடைநிற்றலைக் குறைக்க - ரூ.55.11 கோடி
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் - ரூ.585.17 கோடி
இலவச மடிக்கணினி - ரூ.4,200 கோடி
உடற்பயிற்சி & உபகரணங்கள் - ?
என்ன செய்யலாம்?
பள்ளி, கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு விளையாட்டு வீரர்களையும் அழைத்து வந்து வீரர்களுக்கு மரியாதையையும், மாணவர்கள் மத்தியில் விளையாட்டு மீதான ஆர்வத்தையும் கொண்டு வரவேண்டும்.
சி.எஸ்.ஆர். எனப்படும் "கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி" நடவடிக்கைகளில் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொண்டு வருவதற்கு விதிமுறைகள் கொண்டு வரவேண்டும். பெரு நிறுவனங்கள் தங்கள் நிதியில் குறிப்பிட்ட பங்கினை விளையாட்டு மன்றங்களைத் துவக்கி வீரர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உலகத் தரத்தில் புதிய மைதானங்களை உருவாக்க வேண்டும்.
நலிவடைந்த மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாணவருக்கும் விளையாட்டு அவசியம் என்ற நிலையைக் கொண்டு வந்து, மாணவரின் மதிப்பெண் சான்றிதழில் அதனை பதிய வேண்டும்.
வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட வேறு மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்களை அழைத்து வரும் நிலையை மாற்றி, விளையாட்டு வீரர்களை பணியமர்த்த வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து துறையிலும் வேலைவாய்ப்பினை அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடல் நலம் எனும் மாபெரும் பொறுப்பு அனைவருக்கும் இருந்தாலும், அதனை பேணிக்காப்பதில் அரசாங்கமே முக்கிய பங்காற்றுகிறது. தொற்று நோய் பரவினாலும், தொற்றா நோய் இருந்தாலும் அரசாங்கமே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன் நின்று நடத்தவேண்டிய கடமை இருக்கிறது. எதிர்காலமானது, நலமுடன் கூடிய வெற்றி பதக்கங்களை நாட்டுக்கு அளித்து, உலக அளவில் பெறுமை சேர்க்கும் வீரர்களைக் கொண்டதாக நாடு அமையட்டும்.
- இலா. தேவா
கல்விமலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24723&cat=1