சனி, 7 ஜூன், 2014

முடிவெடுக்கக் கற்றுக்கொள்வோம்



வாழ்க்கை எப்போதும் ஒரே பாதையில், ஒரே மாதிரியாக செல்வதில்லை. புதிய புதிய நிகழ்வுகளும், தொடர்புகளும், இன்பமும், துன்பமும், குழப்பமும், மகிழ்ச்சியும் மாறி மாறி பின் தொடரும் நிலையில் தான் உள்ளது. புதிய இடங்கள், கடந்த கால நினைவுகள், நட்புகள் என வாழ்க்கை எதோ ஒன்றை எப்போதும் கற்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
நல்லவையும், கெட்டவையும் நம் முன்னால் நமக்கு தெரிந்தவாறே இருக்கின்றன. அதனை தேர்ந்துகொள்வதும், தேர்ந்துகொள்ளாததும் நம் உரிமை என்றாலும், அதனை நமக்கானதாக்கிக்கொள்வது பல நேரங்களில் நமக்கு விருப்பப்படாமலே நிகழ்ந்துவிடுகின்றது என்பதுதான் உண்மை. காலமும், சூழ்நிலைகளும் நாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டெ இருக்கிறது.
காரணிகள்
தேர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் நமதாக இருந்தாலும், அதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் தாக்கம் அதிகமான பங்கினை வகிக்கிறது. தெளிவாக, சுயமாக முடிவெடுப்பவர்கள் சுற்றி இருப்பவர்களைக் குறித்து தெளிவுடன் இருப்பதால், தங்கள் தேர்வுகளை சிறப்பாக அமைத்து, வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி விடுகின்றனர். ஆனால் இப்படி முடிவெடுப்பவர்கள் வெகு சிலரே.
தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்களின் எண்ணங்களையே தனது முடிவுகளாகக் கொண்டவர்கள், முடிவுகள் தவறானவுடன் சுற்றி இருப்பவர்களைக் குறை கூறுபவர்களாக இருக்கிறார்கள்.  முடிவெடுப்பதில் பல காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது தேவைகள் குறித்த கடந்த கால, எதிர்காலங்கள். முடிவெடுக்கும்  சூழ்நிலையில் உள்ள கடந்த கால அனுபவங்கள், எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் என யாவும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுப்பதற்கு துணை புரிகிறது. அதனால் விளையும் நன்மைகள், பாதிப்புகள் என அனைத்தையும் சிந்தித்துதான் தெளிவான முடிவினை எடுக்க முடியும்.
ஆனால் எல்லோரும் இதே போன்று சிந்தித்து முடிவெடுப்பதில்லை. அந்த நேரத்தில் என்ன நினைவில் இருக்கிறதோ அதனை மையமாகக்கொண்டு முடிவெடுத்து, அதன் வழியில் சென்றே முடிவுகளை மாற்றிக்காட்டுபவர்களும் உள்ளனர். எடுத்த முடிவில் இறுதி வரை நிலைத்திருப்பதும் அல்லது சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து முடிவினை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதும், ஒருவரின் தனிப்பட்ட திறமை. 
வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
சிறு சிறு முடிவுகளையும் நாமே எடுத்து பழக வேண்டும். உதாரணத்திற்கு உணவகத்திற்கு செல்கிறோம் என்றால், "நீங்களே சொல்லுங்கள், நீங்களே சொல்லுங்கள்" என ஒருவர் மற்றொருவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் இருவரும் ஒரே உணவை பெற்று உண்பார்கள். தங்களுக்கு பிடித்த உணவு குறித்த ஆசை மனதில் இருந்தாலும், மற்றவர் என்ன நினைப்பாரோ என்ற குழப்பத்திலேயே தனக்கான தேவையை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே வைத்து, உண்ணும் உணவின் சுவையை நாவில் உணர மாட்டார்கள்.
இதே போன்றுதான் முடிவுகள் எடுக்கும்பொழுதும் தனக்கான சரியான தேவையை உணராமல், அடுத்தவரின் முடிவுகளை ஆராயாமல் தனதாக்கிக்கொள்ளும்போதும் நேரிடும். எடுக்கும் முடிவுகளுக்கு தானே பொறுப்பு என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும், பின்னோக்கி வராமல் முயற்சியோடு, தளராமல் முடிவுகளின் பாதையில் வெற்றி காண வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு என்பதை முழுதாக உணர்ந்தாலே போதும். முடிவுகள் எடுக்கும்பொழுது பெரும் மனக்குழப்பத்திற்குள்ளாகாமல், தெளிந்த நிலையில் ,எடுத்த வேலையில் வெற்றி தரும் முடிவினை எடுக்கலாம்.
- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24359&cat=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக