ஞாயிறு, 15 ஜூன், 2014

மாற்றங்கள்: நிகழ்வுகளும், விளைவுகளும்

\


மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தை கட்டமைப்பை பல்வேறு சூழ்நிலைகளில் நாம் கேட்டிருக்கலாம்.
அந்த வார்த்தைகளை சிந்தித்தும் இருக்கலாம். மாற்றம் என்பது தொழில்நுட்பத்திற்கும், உடை,  வாய்ப்புகள் போன்றவற்றிற்கு மட்டுமே என்பது பலரது எண்ணமாக இருக்கலாம். அல்லது பெரிய மாற்றங்களால் மனது கவலை கொள்ளாமல் இருப்பதற்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமல் அதன் சாராம்சத்தையோ  பயன்படுத்தியிருக்கலாம்.
எவை மாற்றங்கள்?
அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும் மாற்றங்கள் என்பது உடனடியாக நம்மையே மாற்றிப்போடும் பெரும் நிகழ்வுகள் மட்டுமல்ல. நம்மை சிறிது சிறிதாக செதுக்கும் சின்னஞ்சிறிய கருத்துக்கள், நிகழ்வுகள், புரிதல் போன்றவையும் மாற்றங்களே. சிறிய வயதில் பிடித்த உணவு, பொழுதுபோக்குகள், பயணங்கள் போன்றவை இப்போதும் விருப்பத்திற்குரியதாக இருந்தாலும், அதனை அப்படியே தொடர்ந்து பின்பற்றுவதில்லை. நம்மிடையே துரித உணவுப் பழக்கங்கள், நவீன தொழில்நுட்பப் பொழுதுபோக்குகள், பெரும் ஓய்வு என தற்போதைய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

பெரும்பாலும் மாறுதலுக்கு மனம் எப்போதும் தயாராக இருப்பதில்லை. ஒரு சில நேரங்களில் முற்றிலும் மறுக்கும் நிலையிலேயே மனம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால், அரைகுறை மனதுடன் மாற்றங்களை ஒரு வித சந்தேகப் பார்வையின் வழியாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் செயல்களே வெற்றிகரமான பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.


மாற்றங்கள் நம்மை மாற்றும்


சின்ன  மாற்றங்கள் கூட பெரிய மாறுதலை உருவாக்கும். ஒரு சிறு தீக்குச்சியிலிருந்து வரும் தீயானது பெரும் வெளிச்சத்தை உருவாக்குகிறது. சின்னஞ்சிறு விதையிலிருந்து வெளிவரும் விதையிலைதான் பெரும் ஆலமரத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது நாம் அறிந்த முதுமொழி. எனவே எந்த ஒரு செயலையோ, நிகழ்வையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மண்ணில் விழும் முதல் மழைத்துளியானது கோடைகாலத்தின் வெப்பத்தை எல்லாம் தணிக்கும் பெரு மழையாய் மனம் எண்ணும் வகையில் ஆனந்தத்தைத் தருகிறது.


வித்தியாசத்தை உணரவேண்டும்


மாற்றங்கள் நீதி நெறிகளின்படியும், ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கானதாகவோ அல்லது நேர்மையான வழியில் பொருள் ஈட்டித்தருவதாகவோ இருக்கலாம். தவறான பாதையில் நம்மை இட்டுச்செல்லும் எந்த ஒரு மாற்றத்திற்கும் முன்னுரிமையோ அல்லது ஆதரவையோ தருவது அழிவிற்கு மட்டுமே இட்டுச்செல்லும். அதேபோன்று ஒருவர் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்பதற்காக நாமும் அதனை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனெனில் மருத்துவரின் கையில் இருக்கும் கத்திக்கும், கயவனின் கையில் இருக்கும் கத்திக்கும் உள்ள வித்தியாசம் வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


அன்றும், இன்றும்


வாழும் நாட்கள் அனைத்தும் நாம் நினைத்தாலும் ஒன்றுபோல் இருப்பதில்லை, இருக்காது. ஆனால் வழக்கமான ஒரு சில நடைமுறைகளில் ஒரு சிலவற்றை மாற்றாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பலர் இருக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் இருவர் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள் "ஆளே மாறிவிட்டாயே". மாறிவிட்டாயே என்பதற்கான அர்த்தம், உடல் ரீதியானதாகவோ அல்லது உடை ரீதியானதாகவோ அல்லது வாழ்க்கை நடைமுறைகள் சார்ந்ததாகவோ இருக்கலாம். இளம் வயதில் பிடித்தவை, தற்பொழுது வெறுப்புக்குரியதாகவோ அல்லது கடந்த காலத்தின் சிறு பிள்ளைத்தனமான ஆசையாகவோ மாறி இருக்கலாம்.


மாறாமல் இருப்பதும் நல்லதே


எனவே ஒரு மாற்றம் குறித்து முடிவெடுக்கும்பொழுது கடந்தவை, எதிர்கால சூழல்கள் என அனைத்தையும் சிந்தித்து தெளிவான முறையில் மாற்றங்களை நோக்கி சென்றால் அதுவே வளர்ச்சியும் வெற்றியுமாகும். மாற்றங்கள் அனைத்திற்கும் தேவை என்பது போன்று தோன்றினாலும், ஒரு சிலவை மாறாமல் இருப்பதுதான் வருங்காலத்திற்கு நாம் கொடுக்கும் சிறப்பான வரவேற்பாக இருக்க முடியும். குறிப்பாக சத்தான உணவுப்பழக்க வழக்கங்கள், சூழலுக்கு ஏற்ற உடை, இயற்கையோடு இணைந்த வாழ்வு மற்றும் உறவுகளின் தொடர்ச்சி ஆகியவை மாறாமல் இருப்பது வாழ்வை மாறாத மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.


- இலா. தேவா
கல்வி மலர்
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=24524&cat=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக