ஞாயிறு, 1 டிசம்பர், 2013

உங்கள் மனதை தயார்படுத்துங்கள்


ஓவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மாணவர்கள் 1,500க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். படித்த பாடப்பிரிவுக்கு ஏற்றவாறு வேலை பார்ப்போர் இருந்தாலும், அதிர்ச்சி தரும் வகையான எண்ணிக்கையில் தாங்கள் படித்திருக்கும் பாடம் தவிர்த்து பிற வேலைகள், தொழில்கள் என வேறு துறைகளில் ஈடுபடுவோர் பலரும் இருக்கின்றனர்.
இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், தெளிவில்லாமல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்ததும், தேர்ந்தெடுத்த துறையில் முழு ஈடுபாட்டுடன் தங்கள் அறிவை தன்னம்பிக்கையோடு வளர்த்துக்கொள்ளாததும் முக்கிய காரணமாகும். தன்னம்பிக்கையோடு தங்கள் அறிவை வளர்ப்பது என்றால் எப்படி? நாம் எடுத்திருக்கும் துறையில் எவ்வித தயக்கமும் இல்லாமல், நம்மால் சாதிக்க முடியும் என்று மன ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
ஏனென்றால் இன்றைக்கு ஒரு வேலைக்கு ஆட்தேர்வு விளம்பரம் கொடுக்கப்பட்டால், வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. விண்ணப்பங்களை தரம் பிரித்து சிறந்த முறையில் நேர்முகத்தேர்வு நடத்தினாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர் நிறுவனத்தின் வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதில்லை. அதற்கு காரணம் "இது தனக்கு சரியான வேலை இல்லை, திறமைக்கேற்ற ஊதியம் இல்லை, தனது திறமைக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை" என்பது போன்ற எண்ணங்களை தங்கள் மனதில் ஆழமாக பதித்துவிட்டதே காரணமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் திறமையான ஆட்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நிறுவனங்களுக்கு இருப்பதால், நேர்முகத்தேர்வின் ஒரு பகுதியாக தற்போது "சைக்கோமெட்ரிக் டெஸ்ட்" எனப்படும் உளவியல் திறன் ஆய்வையும் மேற்கொண்டு வருகின்றனர். உளவியல் தேர்வானது, நேர்முகத்தேர்வுடன் நடத்தப்படுவதால் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் நபர் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு வேலைக்கு தயாராக வந்திருக்கிறாரா? வேலை பெற்றபின் நிறுவனத்தின் வெற்றி இலக்குகளை அடைவதற்கு உறுதுணையாக இருப்பாரா? என்று கண்டறிந்துகொள்கின்றனர்.
இது போன்ற புதிய, புதிய நேர்முகத்தேர்வு முறைகளுக்கு ஏற்றவாறு, நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஓரு போர் வீரன், போரின் பல்வேறு கட்ட தாக்குதல்களுக்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திச் சென்றிருந்தால்தான் களத்தில் பயமின்றி வெற்றிக்கனியை பெற முடியும். அது போன்று நேர்முகத்தேர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு எல்கைக்குள் தங்களை தயார்படுத்தாமல், கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என நடைமுறை பிரச்சனைகளை ஆராய்ந்து தங்களை தயார் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
எனவே, இத்தகைய போட்டி மிகுந்த வேலை வாய்ப்பு எனும் சந்தையில், ஆயிரக்கணக்காண வேலை தேடுகிறவர்களுடன் நாமும் கடை விரித்திருக்கின்றோம் என்பதை உணர வேண்டும். நாம் விலை போகவேண்டும் எனில், நம்மிடம் உளவியல் தயாரிப்பு எனும் ஒளிவட்டமும் அவசியம் என்பதை உணர்ந்து, படிக்கும் காலத்திலேயே மன ரீதியான முன் தயாரிப்பை வளர்த்துக்கொள்ள உங்களை தயார்படுத்துங்கள்.
கல்வி மலர் 

1 கருத்து: