மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இன்றியமையாதது ஆகும். ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்வுகளை நாம் சந்திக்கிறோம்.
காலையில் எழும்பியதிலிருந்து இரவு படுக்க செல்லும் வரை நாம் சந்திக்கும் மனிதர்கள், படிக்கும் புத்தகங்கள், பிறர் மூலம் பெறும் தகவல்கள், தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்கள் வழியாக அறிந்து கொள்ளும் தகவல்கள் என நமக்கு சம்பந்தமான, சம்பந்தமில்லாத, தேவையான, தேவையில்லாத தகவல்கள் பலவற்றை அறிகிறோம். வரக்கூடிய நாட்களிலும் அது போன்ற நிகழ்வுகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பிறர் வாழ்வில் கண்ட சம்பவங்கள் நாளை நமக்கும் நேரிடலாம்.
நமக்கு கற்றுக்கொள்ள கிடைக்கும் இந்த சந்தர்ப்பங்களை, நாம் உபயோகமாக பயன்படுத்தினால் தான் நமது அறிவை வளர்ப்பதற்கு வசதியாக இருக்கும். ஏடறிவு மட்டும் அல்லாமல் அனுபவ அறிவும் அவசியம் தேவை என்பதாலேயே செய்முறை வகுப்புகள் நமக்கு கற்றுத்தரப்படுகிறது. செய்முறை வகுப்புகள் மூலமாகவே ஒரு மாணவன் எளிதாக புரிந்துகொள்கிறான் என்பது கல்வியலாளர்களின் வாதம். அதன் அடிப்படையில் தான் இன்றைக்கு "ப்ளே ஸ்கூல்ஸ்" என்று சொல்லப்படுகின்ற விளையாட்டின் வழியாக கற்றுத்தரக்கூடிய பள்ளிக்கூடங்கள் பெருகி வருகின்றன.
பாடப்புத்தகங்களை குழந்தைகள் படிக்கும்போது, அவர்களுக்கேற்ற சூழ்நிலையை இருப்பிடத்தில் அமைத்துக்கொடுக்கவேண்டும். அதாவது ஒரு குழந்தை சத்தமாக படிக்கும், ஒரு சிலர் அமைதியாக உட்கார்ந்து படிப்பர். சத்தமாக படிக்கும் குழந்தைகளை அமைதியாக படிக்குமாறு அறிவுறுத்தக்கூடாது. படிக்கும்போது மனப்பாடம் செய்து மட்டும் படிக்காமல் பாடத்தினை புரிந்து படிக்கவேண்டும். வார்த்தைகளை விட கருத்தே முக்கியம் என்பதை உணர வேண்டும்.
எடுத்துக்காட்டாக அறிவியல் பாடத்தை படிக்கும் பொழுது வேதிவினை எவ்வாறு நடைபெறுகிறது என்று புரிந்துகொண்டாலே போதும். வேதியல் தனிமங்களின் பெயர்களை மட்டும் நன்கு நினைவில் கொண்டு புரிந்து கொள்ளலாம். சமூக அறிவியல் பாடங்களை படிக்கும் பொழுது வரலாற்று சம்பவங்களை தெளிவுபட கேட்டறிந்தாலே போதும். ஆண்டுகளை மட்டும் சரியாக நினைவில் நிறுத்தி எளிதாக படிக்கலாம்.
கணிதப் பாடங்களை கூட எளிதாக சம்பவங்களை கொண்டு புரிய வைக்கும் ஆசிரியர்கள் நம்மிடையே உண்டு. பாடங்களை நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய சம்பவங்களை தொடர்புபடுத்தி கற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அதுபோன்று ஆசிரியர்களும் புத்தகங்களை கடந்து கற்றுக்கொடுக்க தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
கற்றுக்கொள்வதற்கு கிடைக்கும் சிறிய சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களை பாடப் புத்தகங்களில் உள்ளவாறு மட்டும் கற்காமல், நமக்கு ஏற்ற வகையில் நம்மால் எப்படி புரிந்துகொள்ள முடியுமோ அதற்கு தகுந்தவாறு நினைவில் நிறுத்தினாலே போதும். கற்பது எளிதாக மாறும்.
கல்வி மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக