திங்கள், 16 டிசம்பர், 2013

சுய விவரம்: வேலை கிடைப்பதற்கான முதல் நுழைவுச்சீட்டு



வேலை என்ற சொல் அனைவரும் விரும்பும் அற்புத சொல்லாக இருக்கிறது. ஒரு நல்ல வேலையில் சேர்வதுதான் அனைவருக்குமான பெரும் லட்சியமாக இருக்கிறது. நல்ல வேலை கிடைத்தவுடன் வீடு கட்ட வேண்டும், பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும், குடும்ப பொறுப்புகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பது அனைவருக்குமான சிந்தனையாக இருக்கிறது.
வேலை கிடைக்க வேண்டுமானால் குறிப்பிட்ட வேலைக்கு தகுந்த வகையில் கல்வி மற்றும் திறன்கள் இருக்க வேண்டியது அவசியம். இந்த தகுதி மற்றும் திறன்களை சிறப்பான முறையில் நாம் வேலைக்கு விண்ணப்பித்து இருக்கும் நிறுவனத்திற்கு தெரிவிப்பது நமது "ரெஸ்யூம்" எனும் சுய விவரம் தான். அப்படிப்பட்ட சுய விவரமானது சிறந்த முறையில் வடிவமைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது.
"ரெஸ்யூம்" வடிவமைப்பில் பல்வேறு வகையான வடிவங்கள் உருவாக்கம் பெற்று பயன்பாட்டிற்கு வந்தாலும், பெரும்பாலோனோர் இன்னும் பழைய வடிவமைப்புகளிலேயே தகவல்களை நிறுவனங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். பழைய வடிவமைப்புகள் பல நேரம் வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலைகளை மாற்றிவிடுகிறது.
மாறிவரும் பொருளாதாரச் சூழல்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனங்களுக்கிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றது. அதே நேரம் ஒரு வேலைக்கு பலபேர் போட்டியிடும் நிலையும் அதிகரித்திருக்கிறது. இதனால் திறன்களையும், திறன்கள் குறித்து நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் விதமும் சற்று மேம்பட்டு இருப்பது அவசியமாக இருக்கிறது. பழைய "ரெஸ்யூம்" வடிவமைப்புகளை உபயோகப்படுத்துபவர்கள் பெரும்பாலும் காலங்காலமாக பயன்படுத்தும் வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள் ஆகியவற்றையே பயன்படுத்துகின்றனர்.
பழைய வடிவமைப்புகள், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு விளங்கும் தங்களின் தனிப்பட்ட திறன்கள் குறித்து நிறுவனங்களுக்கு சரியான முறையில் விளக்கம் கொடுப்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை. தங்களிடம் இருக்கும் திறன்களை எப்படி சிறப்பாக வெளிப்படுத்த முடியுமோ, அதற்கேற்றவாறு சுய விவரத்தை வடிவமைப்பதுதான் சிறப்பாக இருக்கும். "ரெஸ்யூம்" வடிவமைப்பதிலும் பலமாற்றங்கள் வந்துகொண்டிருக்கிறது. "ரெஸ்யூம்" வடிவமைப்புகள் இலவசமாகவும், சேவைக் கட்டணத்திலும் இணையதளத்தின் வழியாகப் பெறுவதற்கு பல இணையதளங்கள் துணைபுரிகின்றன.
குறிப்பாக "ரெஸ்யூம்" வடிவமைப்பில் தற்பொழுது "பவர்பாயின்ட் பிரசண்டேஷன்", "விஷுவல் பிரசண்டேஷன்" போன்றவை முக்கிய மாற்றங்களாக கருதப்படுகிறது. ரெஸ்யூமானது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பொதுவான வடிவமைப்பு இல்லை. ஏனெனில் ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ற வகையில் கல்வி, அனுபவம், பயிற்சி மற்றும் தேவைகள் போன்றவை மாறுபடுகிறது. எனவே ஒரு வேலைக்கான ரெஸ்யூம் வடிவமைப்பு, மற்றொரு வகையான வேலைக்கு கச்சிதமாக பொருந்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.
மேலும், வேலை தேடுவோர் பலரும் செய்யும் தவறு ஒரே "ரெஸ்யூமை" அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்புவது. ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரே படிப்பை படித்த, சமமான திறன் வாய்ந்த இரு நபர்கள், ஒரே மாதிரியான வேலைக்கு வேறு வேறு நிறுவனங்களுக்கு சென்றாலும் அவர்களுக்கான பொறுப்புக்களும் மற்றும் பதவியின் பெயரும் மாறுபடும். அதனை நினைவில் வைத்து நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், விண்ணப்பிக்கும் பதவிக்கான தேவைகள் ஆகியவற்றை கணக்கிட்டு அதற்ற வகையில் விண்ணப்பிப்பதுதான் புத்திசாலித்தனமான செயல்பாடு ஆகும்.
சிறந்த "ரெஸ்யூம்"ஐ வடிவமைப்பதற்கு அதிகமான நேரம் தேவைப்படலாம். அதற்காக செலவழிக்கும் நேரம் நிச்சயம் வீண் போகாது. "ரெஸ்யூம்"இல் சிறு தவறு இருந்தாலும் அது நம் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதற்கான முக்கிய வாய்ப்பாக நிறுவனங்களுக்கு இருக்கும். திறன் வளர்க்கும் செயல்பாடுகளோடு சுய விவரத்தை உருவாக்குவதிலும் அதிக அக்கறையை செலுத்துவதுதான் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கல்வி மலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக