நமது எதிர்காலத்தை தேர்வு செய்யும்பொழுது, பெரும்பாலானோர் அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகளாகப் பார்த்து தேர்ந்தெடுக்கிறோம். ஏனென்றால் பொருளாதார முன்னேற்றம்தான் வாழ்க்கையின் முன்னேற்றம் என்ற சூழ்நிலைக்கு இந்த உலகம் நம்மை தள்ளிவிட்டது.
பணம் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும், நல்ல வீடு, செழிப்பான வாழ்க்கை என்று வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம் என இன்றைய இளைஞர்களும், அவர்களின் பெற்றோரும் நினைக்கின்றனர். பொருளாதார செழிப்பு தான் வாழ்க்கை என்று முடிவெடுத்தவுடன் வாழும் வாழ்க்கையின் நடைமுறைகளும் மாறிவிடுகிறது. பொருளாதாரத்தை பெறுவதற்கான வாய்ப்புகளை தேடி ஓட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது.
வாய்ப்புகளை கண்டறிய முயற்சி செய்யும்பொழுது நாம் வசிக்கும் இடம் மாறுகிறது. நாம் வாழும் முறையை மாற்ற முயற்சி செய்கிறோம். வேலைக்கு தகுந்தவாறு நாம் மாறவேண்டும், என்ற எண்ணம் உருவாவதன் விளைவாக நாம் நம் அடிப்படையை விட்டு விலக தயாராகிறோம். இந்த தயார்படுத்துதல் நம்மோடு முடிவதில்லை, நம் நண்பர்கள், நம் வாரிசுகள் என தொடர்ந்து வரும் இளம் தலைமுறையும் நாம் அமைத்த வழியில் நம்மை தொடர்ந்து வருகிறது. இப்படியாக ஒருவர் பின் ஒருவராக பொருளாதாரம் என்ற வார்த்தையின் பின்னால் பெரும் கூட்டமே சென்று கொண்டிருக்கிறது. இந்த பொருளாதாரம் அடுத்த கட்டமாக நகரமயமாக்கலுக்கு அழைத்துச் செல்கிறது.
"நகரமயமாக்கல் என்பது நரகமயமாக்கல்" என்று அழைக்கும் விதத்தில் நகர வாழ்க்கை அவலம் மிகுந்ததாக உள்ளது. காரணம் பொருளாதாரத்தை தேடி ஓடி வரும் பெரும் கூட்டத்தால் தான் என்பது, நாம் கண் கூடாக கண்டுகொண்டிருக்கும் உண்மை. ஒங்கி உயர்ந்த மரங்களும், சலசலப்பான நீரோடைகளும், வாய்க்காலும், பசுமை போர்த்திய வயல்வெளிகளும், ஓடியாடி விளையாடிய விளையாட்டுகளும் என இயற்கையை ரசித்து வாழ்ந்த வாழ்வை நகரமயமாக்கல் அப்படியே எதிராக மாற்றிவிட்டது.
ஆம், இன்று மரங்களே இல்லாத கடும் கோடை வெப்பம் தாக்கும் வெப்பம் மிகுந்த சாலையிலும், சாக்கடை ஓடும் ஆறுகளைக் கண்டு விலகிச் செல்லும் அவலத்தையும், தூசியும், புழுதியும் பறக்கும் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் காற்றோட்டமில்லாத நெருக்கடி மிகுந்த இடத்தில் தங்கி நகர வாழ்வை வாழ்ந்து வருகிறோம். இதற்கு காரணமாக சொல்லப்படுவது பொருளாதாரம்.
பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனுக்கு அவசியமா? தொழில்நுட்பங்களோடு வாழ்வதுதான் வாழ்க்கையா? நகரமயமாக்கல் மட்டுமே வளர்ச்சியா? என்ற கேள்விகள் பலருக்கும் தோன்றியிருக்கலாம். மனித வாழ்வின் அடிப்படை என்பது இயற்கை சார்ந்தது. இயற்கையை பெருக்குவதன் மூலமும், வருமானத்தை அதிகரிக்கலாம் என்பது பலரும் இன்று கண்கூடாக நிரூபித்திருக்கும் உண்மை.
ஐ.ஐ.டி.யில் படித்தவர்களும், பெரும் வணிக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித்தவர்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களும் விவசாயம் சார்ந்த தொழில்களின் மூலம் தாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த வருமானத்தை பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கும் தகவல்களை நாம் நாளேடுகளில் பார்த்திருக்கிறோம்.
திட்டமிட்டு சரியான தொலைநோக்கு திட்டத்தோடு செயல்பட்டால், விவசாயம் சார்ந்த துறையிலும் வருமானத்தை காணமுடியும். அப்படிப்பட்ட இத்துறை சார்ந்த துறைகள் தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில் ஆட்கள் பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை, விவசாய நிலங்கள் குறைந்து வருவது என உணவு உற்பத்தித்துறையின் வளர்ச்சி தற்போது குறைந்து வரும் அதே நேரத்தில், கட்டுப்படியாகக்கூடிய விலையில் உணவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதன் அவசியத்தை அரசாங்கமும் மக்களும் உணர்ந்து வருகின்றனர்.
இதனால் தற்பொழுது நீர் மேலாண்மை, ஆட்கள் பற்றாக்குறையை களைவதற்கு இயற்கை வழி வேளாண்மையில் பயன்படுத்தத்தக்க புதிய தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பக் கருவிகள், உர மேலாண்மை, மண் வள மேம்பாடு, சூழல் மேம்பாடு என விவசாயத் துறை சார்ந்த வல்லுநர்களின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது.
நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு என்பதோடு, வளமான வாய்ப்புகள் நிறைந்த நாடு என்பதனாலும் நாம் எளிதாக வேலை வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ளக் கூடியதாக இத்துறை உள்ளது. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கடின உழைப்பின் மூலம் "நாம் உயர்வதோடு, நம் நாடும் உயரும்" என்பது விவசாயத்துறைக்கும், ராணுவத்திற்கும் மட்டுமே உரிய வேத வாக்கு. நிலைத்து நீடித்து நிற்கும் நிலையான வளமான வாழ்வை கனவு காணும் யாவரும் தேர்ந்தெடுக்கலாம், விவசாயத்துறையை.
கல்வி மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக